கனடா நாட்டில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹமில்டன் என்ற நகரில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று அதிகாலை நேரத்தில் வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது.
தகவலை பெற்ற மீட்புக்குழுவினர் உடனடியாக அப்பகுதி சென்றுள்ளனர். அங்கு 3 மாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றி எரிந்துக்கொண்டு இருந்துள்ளது.
மேலும், அருகில் இருந்த வீட்டிற்கும் தீப்பரவியதால், வீரர்கள் கடுமையாக போராடியுள்ளனர்.
தீவிபத்து நிகழ்ந்த நேரத்தில் முதல் வீட்டிற்குள் 11 பேர் இருந்துள்ளனர். இவர்களில் 3 பேர் தீவிபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் மட்டும் எவ்வித காயமும் இன்றி தப்பியுள்ளார். எஞ்சிய 7 பேரும் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு அதிகாரி பேசுகையில், ‘முதல் மாடியில் தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை தெரியவரவில்லை.
விபத்து நிகழ்ந்த நேரத்தில் இரண்டாவது வீட்டில் யாரும் இல்லாததால், அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும், உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களா அல்லது நண்பர்களா என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை செய்த பிறகு வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மூவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.