இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து, உலகில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்மார்ட் போன் விற்பனைக்கான மூன்றாவது பெரிய சந்தையாக திகழ்ந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியாவில் 2015ம் ஆண்டை விட கடந்த மூன்று மாதங்களில் 35 சதவீத விற்பனை சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை – செப்டம்பர் மாதங்களில், 12 லட்சம் போன்கள் விற்பனை ஆனது. ஆனால், இந்தாண்டு அடுத்தமாதம் வரை 8 லட்சம் போன் தான் விற்பனை ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆப்பிள் நிறுவன திட்ட இயக்குனர் வூடி ஹோ கூறுகையில், இந்தியாவில் எங்கள் போன் விற்பனை கண்டிப்பாக அதிகரிக்கும்.
கடந்தாண்டு இதே காலாண்டில் விற்றதை விட இப்போது 35 சதவீதம் குறைய காரணம் இருக்கிறது. மலிவு விலை, இந்தியாவுக்கு ஏற்ற ஐஓஎஸ், தொழில்நுட்பம் ஆகியவற்றை கையாள முடிவு செய்துள்ளோம். சில்லரை கடைகளை நாங்களே திறக்கவும் முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.