பாக். தலீபான் தளபதியை ராணுவம் சுட்டு பிடித்தது

468
பாகிஸ்தான் தலீபான் தளபதியை ராணுவம் சுட்டு பிடித்தது. இவர் முன்னாள் அதிபர் முஷரப்பை கொல்ல முயன்று, மரண தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி, தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தின்கீழ் உள்ளது. இங்குள்ள தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் அரசுக்கு நேட்டோ நட்பு நாடுகள் நிர்ப்பந்தம் கொடுத்து வந்தன.இதையடுத்து கடந்த மாதம் முதல் அந்த பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள், தலீபான் முகாம்களை குறி வைத்து தாக்குதல்கள் தொடுத்து வந்தன. இதில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், வடக்கு வாஜிரிஸ்தானின் தலைநகராக செயல்பட்டு வந்த மீரான் ஷாவையும் ராணுவம் கைப்பற்றியது.

இந்த நிலையில் தெற்கு வாஜிரிஸ்தானில், வானா பகுதியில், பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகளின் தளபதியாக செயல்பட்டு வந்த அத்னன் ரஷீத், குடும்பத்துடன் வசித்து வருவதாக ராணுவத்துக்கு தெரிய வந்தது.

இதையடுத்து கடந்த 15-ந் தேதி அங்கு சென்ற ராணுவ வீரர்கள், அத்னன் ரஷீத் வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு இருந்த அத்னன் ரஷீத்தை அவர்கள் சுட்டுப்பிடித்தனர்.

இந்த அத்னன் ரஷீத், பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பின் துணை அமைப்பாக இயங்கி வந்த ‘அன்சார் அல் அசீர்’ என்ற அமைப்பின் தலைவன். இந்த அமைப்பின் முக்கிய வேலை, சிறைகளை தகர்த்து தீவிரவாதிகளை விடுவிப்பதுதான்.

இவர் கடந்த 2003-ம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் முஷரப் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொல்ல முயற்சித்தார். அந்த முயற்சியில் முஷரப் தப்பித்தார்.

முஷரப்பை கொல்ல முயன்ற வழக்கில் அத்னனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், கடந்த 2012-ம் ஆண்டு அவர் அடைக்கப்பட்டிருந்த பானூ சிறையை தலீபான் தீவிரவாதிகள் தகர்த்து, அவரையும், அவருடன் அடைக்கப்பட்டிருந்த 400 பிற கைதிகளையும் விடுவித்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி தேரா இஸ்மாயில் கான் சிறையை தீவிரவாதிகள் தகர்த்து அங்கு அடைக்கப்பட்டிருந்த பயங்கர தீவிரவாதிகள் 35 பேர் உள்பட 175 பேரை விடுவித்தனர். இதில் மூளையாக இருந்து செயல்பட்டது இந்த அத்னன்தான்.

இவர் பாகிஸ்தான் விமானப்படையில் பணியாற்றி, சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்போது ராணுவத்தினரின் பிடியில் சிக்கி இருப்பது, பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகளுக்கு பெருத்த பின்னடைவு ஆகும்.

இதற்கிடையே வடக்கு வாஜிரிஸ்தானில், மிர் அலி நகருக்கு அருகே அமைந்துள்ள பதே கேல் கிராமத்தில் நேற்று தலீபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 6 தலீபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 ராணுவத்தினரும் உயிரிழந்தனர்.

SHARE