ஐ.நா. வேண்டுகோளை ஏற்று 6 மணி நேர போர் நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

476
ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளை ஏற்று மனித நேய அடிப்படையில் 6 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த 9 நாட்களாக தொடர்ந்து நடத்திய விமான தாக்குதல்களில் குழந்தைகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமடைவதை தவிர்க்க தற்காலிக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று எகிப்து யோசனை தெரிவித்தது. இந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஹமாஸ் இயக்கம் ஏற்க மறுத்தது. அத்துடன் ராக்கெட் தாக்குதலையும் தீவிரப்படுத்தியது.

இதனால், மீண்டும் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலுக்கும் தயாராகி வருகிறது. எனவே, காஸாவின் கடலோர பகுதகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலினால் உயிர் பயத்துடன் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் பொதுமக்கள், வெளியே சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் இருந்து வாங்கி வருவதற்கு வழி செய்யும் வகையில், மனித நேய அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு இஸ்ரேல் படைகள் தாக்குதலை நிறுத்தி வைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்தது.

இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இஸ்ரேல், உள்ளூர் நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 4 மணி வரை மனித நேய அடிப்படையில் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  ஹமாஸ் படைகளும் இதே நேரத்தில் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமா? என்பது தொடர்பாக அந்த தரப்பினரிடம் இருந்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

SHARE