யாழ்.காரைநகர் ஊரி கிராமத்தில் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சி.சிறீதரன், சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோர் கரைநகர் ஊரி கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதி மக்கள் கூடி எங்களுடைய நிலத்தில் கடற்படையினர் இனிமேல் இருக்க வேண்டியதில்லை. போர் நடைபெற்ற காலத்தில் போரை காரணம் காட்டிய கடற்படையினர் போர் நிறைவடைந்த பின்னரும் எங்கள் நிலத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே அவர்கள் இனிமேல் எமக்குத் தேவையில்லை. அவர்கள் எங்களுடைய நிலங்களிலிருந்து விடுபட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளதுடன் கடற்படையினர், குறித்த சிறுமியின் விடயத்தை வெளிப்படுத்தியமைக்காக தம்மை தொடர்ந்தும் அச்சுறுத்தி வருவதாக தெரிவித்துள்ளதுடன், ஈ.பி.டி.பியினர் தொடர்ச்சியாக தமது வீட்டிற்கு வந்து தம்மை அச்சுறுத்துவதாகவும், வீடுகட்டித் தருகின்றோம்.
இந்த விடயத்தை கைவிடுங்கள் என தொடர்ச்சியாக கேட்டு வருவதாகவும் மக்கள் உருக்கமாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்றய கடற்படையினரின் வன்முறைச் சம்பவத்தில் 11வயது சிறுமி ஒருவரும், 9வயது சிறுமி ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கடற்படையினரால் தாம் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை வெளியே சொல்ல வேண்டாம் என கடற்படையினர் குறித்த சிறுமிகளை அச்சுறுதியிருக்க வேண்டும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் தொடர்ந்தும் யாழ். போதனா வைத்தியசாலையின் 11ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடைய தாய் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில், நாளைய தினம் எதிர்ப்பு கூட்டம் ஒன்றினை நடத்தவும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் வகையில் மகஜர் ஒன்றிணை அரசாங்க அதிபர், பிரதேச செயலர் மற்றும் பெண்கள், சிறுவர்களின் நலன்பேணும் அமைப்புக்களிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றிலும், சர்வதேச மட்டத்தில் பலம்வாய்ந்த பெண்கள் மற்றும் சிறுவர் நலன்பேணும் அமைப்புக்களிடம் சுட்டிக்காட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிறீதரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.