30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த போராட் டத்தை எடுத்துக்கொண்டாலுஞ் சரி அல்லது அதற்கு முன்னரான அஹிம்சைப் போராட்டத்தை எடுத்துக் கொண்டாலுஞ் சரி தமிழ் மக்களுக் கானத் தீர்வுத்திட்டம் என்பது மாறி மாறி வந்த ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரலில் அகற்றப்பட்டதொன்றாகவே காணப்பட்டது. தந்தை செல்வா – பிரபாகரன் வரை எடுத்துக்கொண்டால் வட்டுக்கோட்டை – டோக்கியோ வரை யென தமிழ் மக்களின் தீர்வுக்கானப் பேச்சுவார்த்தைகள் சுமார் நூற்றுக் கும் மேல் உள்ளூர், வெளியூர் என இடம்பெற்றது.
தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டம் தொடர்பில் பண்டாரநாயக்க, சிறிமா, ஜெயவர்த்தன, ரணசிங்க பிரே மதாச, சந்திரிகா, மஹிந்த, ரணில் விக்ரமசிங்க, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரையான சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களது தேவை களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் அவர்களுடைய செயற்பாடுகள் அமையப்பெறவில்லை. சிங்கள மக்கள் அனுபவிக்கின்ற சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களுக்கு இல்லை. தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நோக்கில் 2005-2009காலப்பகுதி வரையிலும் யுத்தம் நடைபெற்றதுடன் இதில் இலட்சக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், அங்கவீனர்களாகியும், உறவுகளை இழந்தும், காணாமற்போயும், தமது வாழ்வாதாரத்தைத் தொலைத்தும் வாழ்கின்றனர். இவற்றை எதிர்த்து ஒரு சிங்கள அமைப்புக்கூடகேட்கவில்லை. இக்காலகட்டத்தின்போது பொதுபல சேனா, ராவணபலய, இடதுசாரி முன்னணிகள் கூட தமிழினத்தை அழித்தொழிக்கும் நோக்கத்தில் குறிக்கோளாகவிருந்தன. அக் காலகட்டத்தின்போது த.தே.கூட்ட மைப்பினர் கூட அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்தவில்லை. உண்ணாவிரதம்கூட இவர்கள் இருக்கவில்லை. அவ்வாறு உண்ணாவிரதம் இருந்தால் கூட அவர்களைக் கைதுசெய்து சிறையிலடைக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருந்தது. இதனை அரசு கடைப்பிடித்தது. இவ்வாறான செயற்பாடுகளையே தமிழ் மக்களின் போராட்டக் காலங்களில் அரசு வியூகங்களாக வகுத்திருந்தது. இதில் குறிப்பாக 52நாடுகளும், 22 சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களும் இலங்கையரசின் சொல்லைக்கேட்டு இது பயங்கரவாதப் போராட்டம். இதுவொரு இனவழிப்புப் போராட்டம் அல்ல. நாம் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வருகின்றோம் எனக்கூறி தொடர்ந்தும் யுத்தத்தை முன்னெடுத்தது. விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவேண்டும் என்பதில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் தீவிரமாகவிருந்ததுடன் ஒரு புறம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுக் களையும், மறுபுறம் மஹிந்தவுடன் கைகோர்த்தும் தமிழ் மக்களுக்கான போராட்டத்தை வலிமையற்றதாக்கி, 150,000இற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தனர்.
குறிப்பாக தீர்வுத்திட்டம் என்கிறபோது விடுதலைப்புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களின் போதே அத்தீர்வுகளை வழங்கியிருக்கவேண்டும். 2001-2004 வரையான காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வுத்திட்டத்தை நோர்வேயின் தலை மையில் ஏற்படுத்தவிருந்த சமயத்தில் விடுதலைப்புலிகளுடன் அரசு தீவி ரமான பேச்சுக்களை நடாத்தியதோடு விடுதலைப்புலிகளுக்கிடையில் பிரபா-கருணா பிரிவினை ஏற்படுத்தி அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கையரசு, மீண்டும் விடுதலைப் புலிகளுடனானப் போரை உக்கிரமடையச்செய்தது. இதன் சூத்திரதாரியாக தற்போதைய பிர தமர் ரணில் விக்ரமசிங்க அவர்களே செயற்பட்டார். தொடர்ந்தும் அவ்வாறான பாணியையே அவர் கடைப்பித்து வருகிறார். சிங்களவர்கள் வழங்கும் தீர்வே தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும். தமிழர்கள் கேட்பதுபோன்ற அதிகாரங்களை தம்மால் வழங்கமுடியாது என்பதில் அவர்கள் உறுதியாகவிருக்கிறார்கள். குறிப்பாக மாகாணசபைகளுக்கென அதிகாரங்கள் இருந்தும் அதனை அரசு வழங்க முன்வரவில்லை.
வடகிழக்குப் பகுதிகளில் யுத்தத்தின் பின்னர் 75இற்கும் மேற்பட்ட பௌத்த சிலைகள் உருவாக்கம் பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 10இற்கும் குறைவான பௌத்த சிலை களே வடகிழக்கில் காணப்பட்டது. இவை ஒரு மதத்திணிப்பு விடயம் என்று கூடக்கூறலாம். தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தோடு அஹிம்சை வழி யில் போராடிய தந்தை செல்வா தமிழ் மக்களை இனிமேல் கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என வெளியேற, அதன் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஆயுதக்குழுக்களில் இறுதிவரை பிரபாகரன் அவர்களே உறுதியாகச் செயற்பட்டார். ஏனைய இயக்கங்கள் அனைத்தும் போராட்டங்களைக் காட்டிக்கொடுத்தவர்களாகச் செயற் பட்டனர். இவ்வியக்கங்களை வைத்தே கடந்த காலங்களில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தையும் சின்னா பின்னமாக்கியது. அன்று ஆயுதக்கட்சிகளுக்கு போராட்ட ரீதியாகக் குழப்பங்களைத் தோற்றுவித்த அரசு இன்று ஜனநா யகம் எனக்கூறிக்கொண்டு ஜனநாயக வழிக்குத் திரும்பிய ஆயுதக்கட்சிகளை தமிழரசுக்கட்சியுடன் மோதவிட்டு தமிழரசுக்கட்சி வேறு ஆயுதக்கட்சிகள் வேறு என்கிற நிலைப்பாட்டினைத் தோற்றுவித்துள்ளது.
சம்பந்தன் தலைமையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் கிடைக்கும் என ஆயுதக்கட்சிகள் நம்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால் நிலைமைகள் அவ்வாறில்லை. அதனைச் சுட்டிக்காட்டியே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களும் ஆயுதக் கட்சிகளின் வாயை அடைத்து வைத்திருக்கிறார். ஆயுதக்கட்சிகள் அரசிற்கு எதிரான செயற்பாடுகளைச் செயற்படுத்த முனைகிறபோது அவர்களுக்குத் துரோகி என்ற பட்டத்தினைச் சூட்டும் அளவிற்கு தமிழரசுக்கட்சியினது செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. அதனால் இவ்வாயுதக்கட்சிகள் சம்பந்தனது சொல்லைக்கேட்டு தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் தொடர்பில் மௌனிகளாகச் செயற்படுகின்றனர்.
லக்ஷ்மன் கதிர்காமர் – நீலன் திருச்செல்வம் வரை காட்டிக் கொடுப்புக்களை நிகழ்த்திய அறிவா ளிகள் 25பேர் உள்ளடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள். தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தை தமிழர்கள் கேட்பது போன்று அர சால் வழங்கமுடியாது. தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்பதில் அன்றிலிருந்து இன்றுவரை அரசு மிக உறுதியாகவிருக்கின்றது. தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் சிறந்த முறையினை நோக்கிப் பயணிக்கும்போது சிங்கள இனவாதக் கட்சிகள் தமிழினத்திற்கு எதிராகச் செயற்படுகின்றன. இவர்களைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் தவறுகின்றது. நிச்சயமாக விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்பதும் போராட்டங்கள் எதற்காக நடைபெற்றது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
1987காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்கி சுதந்திரமாக தம்மைத் தாமே ஆளுகின்ற தீர்வுகளைப் பெற்றுத்தருவதாக அமைதிப்படை என்கிற போர்வையில் இந்திய இராணுவம் இலங்கையில் கால்பதித்தது. இதன்போது தீர்வுகள் கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்பினர். ஆனால் விடுதலைப்புலிகளை இந்திய இராணுவத்திற்கு எதிராக ஏவிவிட்டு, இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் கொலை செய்யப்படுவதற்கும், இந்திய இராணுவத்துடனான யுத்தம் உக்கிரநிலையை அடைவதற்கும் இவ்வரசாங்கங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியிருந்தன. அக்காலத்தில் விடுதலைப்புலிகளைப் பயங்கர வாதிகள் என இலங்கையரசு கூறியதில்லை. இது பிரேமதாசவி னதும், ஜெயவர்த்தனவினதும் ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஒன்று.
இவ்வாறு இலங்கையரசு விடுதலைப்புலிகளுடன் நட்புற வினைப் பேணிவிட்டு இந்தியரசு இலங்கையைவிட்டு வெளியேறி யதும் பயங்கரவாதிகள் என்று கூறி விடுதலைப்புலிகள் மீது யுத்தத்தினை ஆரம்பித்தனர். விடுதலைப்புலிகளின் விமானப்படைத் தளபதியாகவிருந்த சொர்ணம், யோகி, மாத்தையா, அன்ரன் பாலசிங்கம் போன்றோரும் இலங்கை அரசுடனான பேச்சுக்களில் கலந்துகொண்டிருந்தனர். இன்றும் கூட தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டத்தில் இந்திய அரசாங்கம் தனது விருப்பத்தினைத் தெரிவிக்காதிருக்கிறது. இதற்கான காரணம் என்னவெனில் வடகிழக்கு தமிழர் தாயகம் என அடையாளப்படுத்தப்பட்டு விடுதலைப் புலிகளுக்கோ அல்லது த.தே.கூட்டமைப்புக்கோ வழங்கப் பட்டால் இந்தியாவிலிருக்கக்கூடிய 29மாநிலங்களும் பிரிந்துசெல்லும் நிலையும் ஏற்படும். இக்காரணங் களுக்காகவும் இலங்கைக்கானத் தீர்வுத்திட்டத்தை அதுவும் தமிழ் மக்களுக்கு வழங்குவதில் தாமதங்களும் தடைகளும் ஏற்படுகின்றது.
இலங்கை இராணுவத்துடன் தாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை விடுதலைப்புலிகள் வெளிக்காட்டினர். குறிப்பாக கடல், வான், தரை என்ற சமர்க்களங்கள் உள்ளடங்கும். உலக ளாவிய ரீதியில் 58 பயங்கரவாத நாடுக ளுள் தமிழீழ விடுதலைப்புலிகள் முதன்மை வகித்தனர். ஆனால் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தப்பட்ட அமைப் புக்களுடன் இவ்வாறான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதில்லை. தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழினத்தின் விடுதலைக்காகவே போராட்டங்களை முன்னெடுத்தவர். நீதி, நிர்வாகம், பொலிஸ் உட்பட 59 கட்டமைப்புக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் நடைமுறையில் இருந்தன. தனியரசொன்றை நிறுவுவதாக விருந்தாலுங்கூட அதற்குத்தேவை யான அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தனர்.
உலக வர்த்தக சந்தை, ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி போன்றவற்றிலும் இவர்களுடைய பதிவுகள் காணப்பட்டன. குறிப்பாக ஆயுத பலத்துடன் இருந்தகாலத்தில் விடுதலைப்புலிகளுடன் பேச்சு வார்த்தைகளில் அரசாங்கம் கலந்து கொண்டிருந்தது. இடைக்கால நிர்வாகம் கூட விடுதலைப்புலிகளின் கைகளில் வழங்கப்பட்டிருந்;தது. தமிழ் மக்களுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடாது என்பதை தீர்மானித்துக்கொண்டு மீண்டும் குழப்பசூழலை மஹிந்த அரசு உருவாக்கியது. ஒட்டுமொத்த சிங்களவர்களும் தமிழ் மக்களை அழிப்பதற்கு முயற்சித்தார்களே தவிர, அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு உதவிசெய்யும் நடவடிக்கைகளை இவர்கள் செய்யவில்லை மாறாக மழுங்கடிக்கும் செயற்பாடுகளைச் செய்தார்கள்.
இந்தியரசு தமிழினத்தைக் காப்பாற்றுவதைப்போன்று நடித் தார்களே தவிர, மறுபக்கத்தில் ராடர் கருவிகளை இலங்கைக்கு வழங்கி தமிழின அழிவில் தாமும் பங்கெடுத்துக்கொண்டனர். தமிழ் மக்களுக்கானத் தீர்வுத் திட்டத்தை வழங்குவார்கள் என எண்ணிக்கொண்டிருக்கும் சம்பந்தன் அவர்கள், தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்க்கட்சிப் பதவியையும், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலை மைப் பதவியையும் இராஜினாமா செய்யப்போகிறாரா? இதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும். பதவி களை வழங்கினால் தமிழ்த்தரப்பாரை விலைக்கு வாங்கலாம் என அரசு எண்ணுகிறது. இவ்வாறான எண்ணக்கரு மாற்றியமைக்கப்படவேண்டும். போரா ளிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை இழந்துள்ளார்கள். 85000இற்கும் மேற்பட்ட விதவைகள், 75000இற்கும் மேற்பட்ட அங்கவீனமுற்றவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனை வரும் அரசாங்கத்தினது இராணுவ நடவடிக்கைகளின் மூலமாகப் பாதிக்கப்பட்டு தமது உறவுகளை, வாழ்வாதாரத்தை இழந்தவர்கள். யுத்தம் நிறைவடைந்து 07 வருடங்களைக் கடக்கவுள்ள நிலை யிலும் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் வழங்கப்படவில்லையெனில் இதனது அர்த்தம் என்ன? த.தே.கூட்டமைப்பைப் பதிவு செய்வோம் என சம்பந்தன் அவர்கள் கூறிக்கொண்டிருப்பதுபோல் தீர்வுகளைத் தருகிறோம் தருகிறோம் என அரசும் ஏமாற்றி வருகிறது. தமிழரசுக்கட்சி பதிவு செய்யப்படவுமில்லை. அரசு தீர்வுகளை வழங்கவுமில்லை பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவுமில்லை. அரசியல் கைதிகள் முற்றாக விடுவிக்கப் படவுமில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்;தை நீக்கும் எண்ணத்தில் அரசும் இல்லை.
சர்வதேச நாடுகளின் மனங்களை வென்றுவிட அரசு முனைகிறது. உல்லாசத்துறையை மேம்படுத்தும் வகையில் சர்வதேச நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக ஒத்துழைத்துச் செயற்படும் தன்மையைக் கடைப்பிடிகிறது. தொடர்ந்துவரும் அரசுகளும் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளை வழங்கமுற்படாது. சர்வதேச நாடொன்றின் உதவியுடன் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழ்த்தரப்பினர் செயற்படவேண்டும். தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வுத்திட்டம் இல்லையெனில் போராட்டங்கள் வேறுவடிவில் உயிர்பெறும் என்பதில் மாற்றம் இல்லை.
மறவன்