பௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் பழைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கூறியதை தான் நாம் இன்றும் கூறிக் கொண்டு இருக்கிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால் நிலவு எப்போதும் வளர்வதும் இல்லை, தேய்வதும் இல்லை.
பூமி சூரியனைச் சுற்றுகிறது. அதேபோல, பூமியின் துணைக் கோளான நிலவு பூமியைச் சுற்றி வலம் வருகிறது. நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வலம் வருவதற்கு 29 1/2 நாட்கள் ஆகின்றன.
பொதுவாக சூரியனிடமிருந்து தான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. பின் நிலவானது சூரியனிடமிருந்து வாங்கிய ஒளியை எந்த அளவிற்கு பூமியில் பிரதிபலிக்கிறதோ அதை பொறுத்தே பௌர்ணமி, அமாவாசை நிகழ்கிறது.
அமாவாசை
பொதுவாக பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை மட்டுமே நாம் பார்க்க முடியும். எனவே நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சுற்றி வரும் போது, நிலவில் நமக்கு தெரியாத மறு பகுதியில் மட்டுமே சூரிய ஒளி படுகிறது.
அப்போது நம் கண்களுக்கு நிலவானது புலப்படாது, இதை தான் நாம் அமாவாசை என்று கூறுகின்றோம்.
பௌர்ணமி
அமாவாசை முடிந்து ஒரு வாரத்தில் நிலவின் பாதி மேற்பரப்பில் ஒளி படர்ந்திருக்கும்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரதிபலிப்பு அதிகரிக்கும். பின் பூமிக்கு எதிரேயுள்ள நிலவின் முழுப் பரப்பும் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது.
நிலவு தகதகவென்று மின்னுகிறது. அந்த நாளில் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவே பூமி இருப்பதுதான், நிலவு சூரிய ஒளியை முழுமையாகப் பிரதிபலிப்பதற்குக் காரணம்.
இதை நாம் பௌர்ணமி என்று கூறுகின்றோம்.