அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக போராட தயாராகும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள்

498
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நீக்கப்பட்டால், அதற்கு எதிராக போராட அந்த கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் தயாராகி வருவதாக சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவித்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தொடர்ந்தும் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை தாழ்த்தியும் புறந்தள்ளியும் வருகிறார்.

இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூடிய கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வருவதற்கு முன்னர் அமைச்சர்கள் கூடி இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளனர்.

அங்கு கருத்து தெரிவித்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அமைச்சர் மைத்திரிபாலவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக பதில் வழங்காது போனால், தாம் உட்பட சிரேஷ்ட உறுப்பினர்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் போல் ஆகிவிடுவோம் என கூறியுள்ளார்.

அத்துடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை நடத்தும் கூட்டத்திற்கு எவரும் செல்ல வேண்டாம் எனவும் பிரதியமைச்சர் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டு ஆட்சியில் அடிவாங்கி, சிறைகளில் இருந்து, உயிர்களை தியாகம் செய்து சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை நாம் ஏற்படுத்திய பின்னர், அமெரிக்காவில் இருந்து வந்து இவர்கள் எமக்கு அரசாங்கத்தை நடத்துவது பற்றி பாடம் நடத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

TPN NEWS

SHARE