ருமேனியாவில் 2 அணு உலைகளை அமைக்க சீனா, கனடா நாடுகள் ஒப்புதல்

489
மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் இரண்டு அணு உலைகளைக் கட்டமைக்க சீனா மற்றும் கனடாவுடன் நேற்று ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது. கனடா நாட்டின் எஸ்என்சி- லவலின் நிறுவனமும், சீனாவின் அணுசக்தி பொறியியல் நிறுவனமும் இந்த ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

இவற்றுள் கனடா நிறுவனம் ஏற்கனவே அங்கு இரண்டு அணுசக்தி உலைகளை கடந்த 1996 மற்றும் 2007ல் கட்டியுள்ளது.செர்னவோடா அணுசக்தி உலைகள்(சிஎன்பிஈசி) என்ற இந்தத் திட்டத்தின்மூலம் ருமேனியாவிற்குத் தேவையான 20 சதவிகித மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கன்டு ஆற்றல் நிறுவனம் சிஎன்பிஈசி நிறுவனத்துடன் இணைந்து ருமேனியாவின் அதிகரித்துவரும் அணுசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை விருப்பத்துடன் எதிர்நோக்குகின்றது என்று லவலின் நிறுவனத்தின் தலைவரான பிரெஸ்டன் சுஃபோர்ட் நேற்று தெரிவித்தார்.

ஏற்கனவே பத்து வருடங்களுக்குமேல் சீனா மற்றும் ருமேனியாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில் இந்த புதிய ஒப்பந்தமானது எங்களுடைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

கனடாவின் பெரிய பொறியியல் நிறுவனமாகக் கருதப்படும் எஸ்என்சி-லவலின் நிறுவனம் கடந்த 2011ஆம் ஆண்டில் கனடா அணுசக்தி நிறுவனத்தின் கன்டு விற்பனை மற்றும் சேவைப் பிரிவுகளை வாங்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனமும், சிஎன்பிஈசி நிறுவனமும் சீனாவில் உள்ள யுரேனியம் சுரங்கத் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதன்மூலம் மற்ற அணு உலை விற்பனை வாய்ப்புகளைத் தொடரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

SHARE