வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வழங்க, வேந்தர் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், புலிப்பார்வை. படத்தை இயக்கும் பிரவின் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: பிரபாகரனின் மகன் பாலசந்திரன், சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் முன் எடுக்கப்பட்ட படத்தை சேனல் 4 வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் பற்றிய படம்தான் இது. பாலசந்திரனின் மரணத்தை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து படம் உருவாகியுள்ளது. தமிழர்களின் வீரமும், அறிவும் சரியான முறையில் உலகிற்கு சென்றடைய வேண்டும் என்ற அக்கறையுடன் படத்தை இயக்கியுள்ளேன்.
விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல என்று சொல்லும் படத்தில், பாலசந்திரனின் மரணத்துக்கு முன் என்ன நடந்திருக்கும், அவன் பார்வை என்னவாக இருந்திருக்கும் என்பதை பதிவு செய்துள்ளேன். இது யாருக்கும் எதிரான படம் அல்ல. பாலசந்திரன் கேரக்டரில் மாணவன் பாலா என்கிற சத்யா நடித்துள்ளார். இவ்வாறு அவர் சொன்னார். பாலா என்கிற சத்யா, டி.சிவா, அரசன் உடனிருந்தனர்.