டெங்கு காய்ச்சலுக்கு பப்பாளி இலை மருந்து

575

கடந்த ஆண்டில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்தது, டெங்கு காய்ச்சல். இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. டெங்கு ஏற்படுத்தும் உயிரிழப்புகளும் உடல் பாதிப்புகளும் மக்கள் மத்தியில் கூடுதல் பயத்தை உருவாக்கி இருக்கின்றன. இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசியோ மருந்துகளோ கிடையாது. இதற்கெனப் பிரத்யேகமான சிகிச்சையும் இல்லை. சாதாரணக் காய்ச்சலுக்கான சிகிச்சைதான் டெங்குவுக்கும். இது தானாகவே குணமானால்தான் உண்டு. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது. பப்பாளி இலையில் இருக்கின்ற ஒரு வகை வேதிப்பொருள் டெங்கு கிருமிகளை அழிப்பதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு டெங்கு புராணத்தைப் பார்த்துவிடுவோம்… 

டெங்கு எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருகிறது. இக்கிருமித் தொற்றுள்ள ‘ஏடஸ் எஜிப்டி’ எனும் கொசுக்கள் மக்களைக் கடிக்கும்போது டெங்கு பரவுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி அனைவரையும் இது தாக்கக்கூடியதுதான் என்றாலும், பெரியவர்களுக்கு இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இது அவர்களை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. அதேநேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ள குழந்தைகளை டெங்கு தாக்கும்போது பல ஆபத்துகள் அணி வகுக்கின்றன.

கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கி விடும். ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, வாந்தி, களைப்பு, இருமல், தொண்டைவலி ஆகிய மிதமான அறி குறிகள் மட்டுமே காணப்படும். நோய் வந்த நான்காம் நாளில் மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டது போல் எல்லா மூட்டுகளிலும் வலி அதிகரிப்பது இந்த நோயின் முக்கிய அறிகுறி. அதே நேரத்தில் நோயுற்ற குழந்தையின் உடல் முழுவதும் தோலில் சிவப்புப் புள்ளிகள் தோன்றும். டெங்கு வைரஸ்கள் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் மெல்லிய துளைகள் விழுந்து, ரத்தத்தை உடலின் உள் உறுப்புகளில் கசிய விடும். இதன் விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

பொதுவாக டெங்கு காய்ச்சல் 7 நாளில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டுமே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். தட்டணுக்கள்தான் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியக் காரணம். டெங்கு வைரஸ் இந்த தட்டணுக்களை அழித்து விடுகிறது. இதன் விளைவால், பல் ஈறு மற்றும் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகும். ரத்தவாந்தி எடுப்பது, மலத்திலும் சிறுநீரிலும் ரத்தம் கலந்து வருவது, எலும்புமூட்டுகளில் ரத்தம் சேர்ந்து வீங்கிக் கொள்வது ஆகிய ஆபத்து மிகுந்த அறிகுறிகளும் உண்டாகலாம். இதனால் உடலில் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகி, உயிரிழப்பும் ஏற்படலாம்.

ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய ஐஜிஎம் எலிசா, பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்தப் பாதிப்பு இருப்பது உறுதியானால், நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும். ஒருவருடைய ரத்தத்தில் தட்டணுக்கள் குறைந்தது ஒன்றரை லட்சமாவது இருக்க வேண்டும். டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு வெறும் ஆயிரமாகக் குறைந்துவிடலாம். எனவே, இவர்களுக்கு ரத்தம் அல்லது தட்டணுக்களைச் செலுத்த வேண்டும். அப்போதுதான் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

இந்தக் காய்ச்சலுக்கு பப்பாளி இலைச்சாறு நல்ல பலன் தருகிறது என்று மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளில் ஏற்கனவே கண்டுபிடித்திருக்கிறார்கள். இச்சாற்றைப் பயன்படுத்தி டெங்குவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். இச்சாறு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால், இதைக் குடித்த நோயாளிகளுக்கு ரத்தம் இழப்பும், அதன் பலனாக உயிரிழப்பும் ஏற்படுவதில்லை என்பதுதான் இதற்குக் காரணம். இப்போது இதற்கும் மேலாக இந்தச் சாற்றில் உள்ள ஒரு வேதிப்பொருள் டெங்கு கிருமியையே அழித்துவிடுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள், இந்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மிசிவிஸி ஆராய்ச்சியாளர்கள் செந்தில்வேல், லாவண்யா, அன்பரசு ஆகியோர்.

“டெங்கு கிருமிகளில் மொத்தம் நான்கு வகைகள் உள்ளன. சென்ற ஆண்டில் இந்தக் காய்ச்சல் அதிகமாக பாதித்த தென் தமிழகத்தில் இரண்டாவது வைரஸ் வகையால்தான் இது ஏற்பட்டிருந்தது. இந்த வைரஸ்கள் பெருகுவதற்கு செரின் புரோட்டியேஸ் (Serine protease) எனும் புரதம் தேவை. இதில் NS2B, NS3 என்று இரண்டு பகுதிகள் உண்டு. இந்தப் புரத மூலக்கூறுகளை வைரஸ் உடலமைப்பில் அழித்து விட்டால், டெங்கு கிருமிகள் உற்பத்தியாக முடியாது; அழிந்துவிடும். ஆகவே, இதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கினோம்.

பப்பாளி இலைச்சாறு இந்த நோய்க்குப் பலன் தருகிறது என்பதை ஏற்கனவே அறிந்து, அதை வைத்து எங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கினோம். இந்தச் சாற்றில் 7 வகை பீனால் சேர்மங்கள் இருப்பதை அறிந்தோம். இவற்றில் குவர்செட்டின் (Quercetin) எனும் ஃபிளவினாய்டு வகை வேதிப்பொருள் டெங்கு வைரஸ்களில் உள்ள NS2B, NS3 புரத மூலக்கூறுகளை அழிக்கிறது என்று கண்டுபிடித்தோம். பூட்டுக்கேற்ற சாவி இருந்தால்தான் பூட்டைத் திறக்க முடியும். இந்த அடிப்படைதான் எங்கள் கண்டுபிடிப்புக்குக் கைகொடுத்தது.

எப்படி ஒரு பூட்டில் சாவியை நுழைத்துத் திருகினால், பூட்டு திறக்கப்படுகிறதோ, அவ்வாறே வைரஸ் புரதப்பொருள் மூலக்கூறுடன் குவர்செட்டின் மூலக்கூறு இணையும்போது, வைரஸ் மூலக்கூறு உடைந்துவிடுகிறது. இதன் பலனால் வைரஸ் அழிக்கப்படுகிறது. இதுதான் எங்கள் கண்டுபிடிப்பின் அறிவியல் தத்துவம். இந்த ஆய்வுமுறைக்கு ‘மாலிக்குலர் டாக்கிங்’ (Molecular docking) என்று பெயர். இந்த ஆராய்ச்சியை இன்னும் விரிவுபடுத்தி, குவர்செட்டின் மூலக்கூற்றைப் பிரித்தெடுத்து அதை ஒரு மருந்துப் பொருளாகத் தயாரிக்க வேண்டும். அப்படித் தயாரித்துவிட்டால், டெங்குவை ஒழிக்க மிகச் சரியான சிகிச்சை கிடைத்து விடும்” என்றார்கள், இந்த மூவரும்.

SHARE