அப்பிள் ஹெட்போன்: தைரியமா? தந்திரமா?

349

 

ஹெட்போனை சொருகக்கூடிய துளை இல்லாமல் (Headphone Socket) ஐபோன்-7, ஐபோன்-7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வடிவமைத்த அப்பிள் நிறுவனம் பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது.

Headphone Socketஐ அப்புறப்படுத்தியதன் மூலம் அப்பிள் தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளதென ஒருசாரார் கூற, இது அப்பிளின் வியாபார தந்திரம் என்று மறுசாரார் சாடுகிறார்கள்.

சகல வகை ஸ்மார்ட்போன்களிலும் 3.5 மிமி துளை உள்ளது. இதில் ஹெட்போனை செருகுவதன் மூலம் போனிலுள்ள பாடல்களையும், ஏனைய ஒலி சமிக்ஞைகளையும் கேட்க முடியும்.

இந்தத் துளையில் செருகப்படும் ஹெட்போன் மூலம் அனலொக் (Analog) வடிவில் ஒலி சமிக்ஞைகள் கேட்கின்றன.

அப்பிள் போனில் லைட்னிங் கனெக்டர் என்ற வசதி உண்டு. இதன்மூலம் டிஜிற்றல் (Digital) வடிவில் துல்லியமான ஒலி சமிக்ஞைகளைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.

தைரியமே மாற்றத்தின் முதற்படி

ஐபோன்-7 அறிமுக விழாவில் பேசிய அப்பளின் சந்தைப்படுத்தல் தலைவர் பில் ஷில்லர், புதியதை நோக்கி நகர தைரியம் வேண்டும் என்றார்.

அனலொக் ஹெட்போன் தொழில்நுட்பம் சோனி நிறுவனத்தின் ட்ரான்சிஸ்ற்றர் ரேடியோ காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதனை ஓரங்கட்டிவிடடு புதியதை நோக்கி நகரும் தேவை பற்றி பலர் பேசுகிறார்கள்.

ப்ளொப்பி டிஸ்கில் இருந்து சீடி நோக்கி மாறியபோதும், சீடியில் இருந்து பென் டிரைவ் நோக்கி மாறியபோதும் பலர் விமர்சித்தார்கள். அந்த மாற்றங்களால் நன்மையே நிகழ்ந்துள்ளது. அதைப் போலத்தான் அனலொக் ஹெட்போனும் என்கிறார்கள் ஒருசாரார்.

இது தவிர அனலொக் ஹெட்போனுக்குரிய கருவிகளை போனில் சேர்ப்பதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. இதன் காரணமாக, போன்களை மெல்லியதாக மாற்ற முடியவில்லை.

அனலொக் ஹெட்போனை அப்புறப்படுத்துவதன் மூலம் பற்றரியின் கொள்ளளவை அதிகரித்து, போனின் பயன்பாட்டு நேரத்தைக் கூட்டலாம் எனவும் அவர்கள் வாதிடுகிறார்கள்.

விற்பனைத் தந்திரத்தின் பலிக்கடாக்களாக மாறும் வாடிக்கையாளர்

ஐபோன்-7 ஸ்மார்ட்போனை விலை கொடுத்து வாங்க பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இவர்கள் போனிலுள்ள ஒலியை கேட்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. லைட்னிங் கனெக்டர் ஒருவழி. வயர்கள் இல்லாத ப்ளுடூத் ஹெட்போன்கள் அடுதத வழி.

இந்த இரண்டையும் விலைகொடுத்து வாங்க வேண்டிய தேவை வாடிக்கையாளருக்கு உண்டு. இந்தக் கருவிகளை விற்பனை செய்வது அப்பிள் நிறுவனம் என்பதால், இதன்மூலம் பயன்பெறப் போவது அப்பிள் நிறுவனம் தானென விமர்சகர்;கள் சாடுகிறார்கள்.

இது தவிர, ஐபோன்களுக்காக புதிய ஹெட்போன்களைத் தயாரிக்கும் எந்தவொரு நிறுவனமும் அப்பிளின் லைசென்ஸைப் பெற வேண்டும். இது அப்பிளின் வருமானத்தையே அதிகரிக்கும்.

ஐபோன்-7 இற்காக தயாரிக்கப்படும் புதுவகை ஹெட்போன்களை வேறெந்த ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்த முடியாது. அவற்றை பயன்படுத்த வேண்டுமாயின், ஏனைய நிறுவனங்களும் அப்பிளின் வழியைப் பின்பற்றி லைட்னிங் கனெக்டர் அல்லது ப்ளுரூத் ஹெட்போன்கள் உள்ள போன்களை உருவாக்குவது அவசியம்

இதில் முக்கியமான விடயம் யாதெனில், அப்பிள் நிறுவனம் புதன்கிழமை அறிமுகப்படுத்திய என்ற ப்ளுடூத் ஹெட்போனின் விலை 159 டொலர்கள்.

SHARE