205 ரன்னில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து: இந்திய அணியின் வெற்றிக்கு 445 ரன் இலக்கு

526
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும் விளாசினர். கேப்டன் குக் 95 ரன்கள், பட்டர் 85 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து தடுமாற்றத்துடன் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்களின் பேட்டிங் கைகொடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ரகானே (54), டோனி (50), கோலி(39), விஜய் (35) போன்றவர்கள் ஓரளவு ரன் குவித்த போதும் பாலோ ஆனை தவிர்க்க முடியவில்லை. நான்காவது நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இந்தியா 330 ரன்களுக்குள் சுருண்டது.

எனினும், இந்திய அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் அதிக ரன்கள் இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. துவக்க வீரர் ராப்சன் 13 ரன்களில் வெளியேறினார். கேப்டன் குக் இந்த இன்னிங்சிலும் அபாரமாக ஆடி 70 ரன்கள் விளாசினார். பேலன்ஸ் 38 ரன்களிலும் ரூட் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துவக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இன்று டாப் ஆர்டர் விக்கெட்டுகளை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆக்ரோஷமாக பந்து வீசி வருகின்றனர். இந்திய பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெற்று இலக்கை எட்டுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE