இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 330 ரன்னுக்கு ஆல் அவுட்

504
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும் விளாசினர். கேப்டன் குக் 95 ரன்கள், பட்டர் 85 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் தவான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. புஜாரா (24), முரளி விஜய் (35), விராட் கோலி (39), ரோகித் சர்மா (28) ஆகியோர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத நிலையில், சிறப்பாக விளையாடிய ரகானே அரை சதம் கடந்தார். இதனால் தேநீர் இடைவேளையின்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய ரகானே 54 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க 150 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் டோனியுடன் ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்த நிலையில், 31 ரன்கள் சேர்த்த ஜடேஜா, ஆண்டர்சன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களம் புகுந்த புவனேஸ்வர் குமாரும் 19 ரன்னில் நடையை கட்ட, 3ஆம் நாள் ஆட்ட நேர இறுதியின் போது டோனி 50 ரன்களுடனும், சமி நான்கு ரன்களுடனும் களத்திலிருந்தனர். அப்போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் டோனி (50) மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 330 ஆக இருந்தபோது சமி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தனது பிறந்த நாளான இன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 5ஆவது விக்கெட்டாக சமியை வீழ்த்தி அசத்தினார்.

இதனால் இந்தியா 330 ரன்னில் ஆல் அவுட் ஆனது. எனினும், இந்திய அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்க முடிவு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக ராப்சன்னும், குக்கும் களமிறங்கினர். ராப்சன் 13 ரன்களில் புவனேஸ்குமார் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேலன்ஸ், குக்குடன் இணைந்து விளையாடி வருகிறார்.

SHARE