அவுஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும் லிபராவின் MVNO சேவையை பிரித்தானியாவின் வொடபோன் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்தே அவுஸ்திரேலியாவில் லிபரா மொபைல் சேவை செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் முதற்கொண்டு 4ஜி சேவையையும் வழங்கி வருகிறது. லிபராவின் அனைத்து சேவைகளையும் வோடபோன் வாயிலாகவே அவுஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களுக்கு லிபரா வழங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் வோடபோன் நிறுவனம் அவுஸ்திரேலியாவில் செயல்பட்டுவரும் லிபராவின் மொபைல் சேவையை கையகப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த கையகப்படுத்தலால் கைமாறப்பட்ட பொருளாதார தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
வோடபோன் கையகப்படுத்தியிருந்தாலும் லிபரா நிறுவனத்தின் சேவைகள் அனைத்தும் அவுஸ்திரேலியாவில் தனியாகவே செயல்படும் என கூறப்படுகிறது. மட்டுமின்றி அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களையும் முகவர்களையும் வோடபோன் தக்கவைத்துக்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
லிபரா நிறுவனத்தை கையப்படுத்தியதால் மிக குறைந்த கட்டணத்தில் மொபைல் சேவையை வோடபோனால் வழங்க முடியும் என லிபரா நிறுவனத்தின் உயரதிகாரி யோகநாதன் ரதீசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வோடபோன் மற்றும் ஹட்சிசன் நிறுவனங்கள் பாதிக்கு பாதி என்ற வகையில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் என்று கூறப்படுகிறது. லிபரா நிறுவனத்திற்கு சுமார் 130,000 வாடிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ளனர்.