நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டுவராது – ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச

428

 

நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வை கொண்டுவராது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஊடக பிரதானிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஆளும் கட்சி இந்த நிறைவேற்று அதிகார முறையை கொண்டுவரவில்லை, இன்றைய பிரச்சினைகளுக்கெல்லாம் அதனை குறை சொல்லுவது தவறு, அதனை கொண்டு வந்தவர்களே அதனை நீக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் எப்போது தேர்தல் நடைபெற வேண்டுமென விரும்புகிறாரோ அப்போது தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அரசியலில் நுழைவது குறித்து கோத்தாபய ராஜபக்ச எந்த வேண்டுகோளையும் விடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலை நடாத்த பாப்பாண்டவரின் விஜயம் இடையூறாக அமையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு உள்ளக அல்லது புறக் காரணிகள் தடையாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாப்பாண்டவரின் விஜயத்தின் போது ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என வத்திக்கான் கோரிக்கை விடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கத்தோலிக்கச் சபையும் தேர்தல் காலம் குறித்து எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை எப்போது நடாத்துவது என்பதனை அரசாங்கமே தீர்மானிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு விரும்பிய திகதியில் தேர்தலை நடாத்த அரசாங்கம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 12ம் திகதி முதல் 15ம் திகதி வரையில்  பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE