எமது நாட்டில் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழ் மக்களுடன் சேர்த்து முஸ்லிம் மக்களையும் ஏமாற்றியதாகவே வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் காலத்திற்கு காலம் கூறி வருகின்ற வார்ததைகள் எல்லாம் நீர் மேல் எழுதிய எழுத்துப் போலவே இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை அமிர்தகழியில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது:–
எமது சமூகம் விளையாட்டு, கல்வி போன்ற செயற்பாடுகளில் இவ்வாறு பல திறமைகளை வெளிப்படுத்துவது வரவேற்கத்தக்கதான விடயமே அதுவும் இந்த சின்னஞ்சிறார்கள் விளையாட்டுகளில் திறமை காட்டுவதென்பது மனதிற்கு மகிழ்வினை ஏற்படுத்தக் கூடியதே. இவ்வாறு சிறுவர்களை ஒரு விடயத்தில் ஈடுபடுத்துவதென்பது மிகவும் கடினமான விடயம். அத்தகு சேவையானது மிகவும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படவேண்டும் அந்தவகையில் இவ்வாறு இந்த சிறுவர்களுக்கு ஊக்கம் கொடுத்தவர்களுக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது சமூகம் இன்று இருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் நாம் எமது எதிர்கால சந்ததிகளாகிய எமது சிறார்களை முன்னேற்றுவதன் மூலமே எமது சமூகத்தினையும் எமது இனத்தினையும் எதிர்காலத்தில் ஒரு நல்ல நிலையில் இருக்கப்பண்ண முடியும். இன்று எமது இனம் தேசிய ரீதியில் மட்டுமல்லாது மாகாண ரீதியிலும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது தொழில் வாய்ப்பபுகளிலும் சரி ஏனைய விடயங்களிலும் சரி இதற்கு அண்மைக்காலத்தில் கொடுக்கப்பட்ட வேலைவாய்ப்புகளே சான்று. இதிலே நன்கு தெரிகின்றது எமது கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அரசியல் மேடையில் எத்தகு நாடகங்களைப் போடுகின்றார்கள் என்று.
இந்நாட்டில் இருக்கும் முஸ்லிம் இனவாத அரசியல் தலைவர்கள் எமது வடகிழக்கு மண்ணைப் பிரித்து இந்த அரசாங்கத்துடன் சேர்த்து வடக்கிற்கு என்று தனியாகவும் கிழக்கிற்கு என்று தனியாகவும் மாகாணசபைகளை அமைத்து இன்று கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருக்கத்தக்கதாகவும் மாகாணசபை அமைச்சுக்களில் கூடியளவு முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கத்தக்கதாகவும் வைத்துக் கொண்டு தமிழ்மக்களை நாம் கைவிடமாட்டோம் அனைத்துமக்களுக்கும் ஒரே விதமான பாரபட்சமில்லாத ஆட்சியினை மேற்கொள்வோம் என்று கூறிக்கொண்டே இதுவரை எமது மக்களுக்கு புறக்கணிப்பினை மாத்திரமே பரிசாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்களின் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் மக்களை ஏமாற்றி தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்பி ஆட்சியில் அமர்ந்து கொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பு மற்றும் ஏனைய பிரதிநிதித்துவங்களை அவர்களுக்கு கொடுக்க மறுத்து தமிழர்களை புறக்கணித்து தங்கள் அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம் சமூகத்தினருக்கு அதிகளவான வேலைவாய்ப்புகளை கொடுத்து எமது தமிழ் சமூகத்தினரை ஓரம்கட்டுகின்றனர்.
அண்மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் தெரிவித்தார். இந்த மாகாணம் மூவினமக்களும் வாழுகின்ற மாகாணம், இங்கு தமிழ் இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம். முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம் சிங்கள இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம் இங்கு பிரிவினை என்பது இல்லை பாரபட்சம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இவ்வாறு நுனிநாக்கில் சமத்துவத்தைப் பேசிவிட்டு பின்னர் இவர்கள் எமது மக்களுக்கு புறக்கணிப்பினை மாத்திரமே பரிசாக வழங்குகின்றனர்.
வடகிழக்கு என்பது தமிழர்களின் தாயகம். இதனைப் பிரித்தாளும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஆட்சியை நடத்தும் இவ்வாறான இனவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் எமது தமிழ்மக்களுக்கு பசப்பு வார்த்தைகள் கூறி ஏமாற்ற நினைக்கின்றார்கள்.