புலம் பெயர்ந்த பெண்களை சவுதி ஆண்கள் மணக்க கட்டுப்பாடு: அரசின் புதிய திட்டம்

465
பழமைவாத இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படாதது குறித்த கண்டனங்கள் உலகம் முழுவதிலுமிருந்து எழுந்துள்ளது. இப்போது மற்றுமொரு புதிய விதிமுறையாக புலம் பெயர்ந்த பெண்களை அந்நாட்டு ஆண்கள் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று அரசு செயல்படுத்தவிருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரபு நாடுகளிலேயே மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக விளங்கும் சவுதி அரேபியாவில் 9 மில்லியன் புலம் பெயர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 30 சதவிகிதத்தினர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் ஆவர். இவர்களில் பாகிஸ்தான், வங்காளதேசம், சாட் மற்றும் மியான்மரைச் சேர்ந்த 5,00,000 பெண்கள் இங்கு வசித்து வருவதாகக் கணக்கீடுகள் கூறுகின்றன. இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை தங்கள் நாட்டு ஆண்கள் மணந்துகொள்ளக் கூடாது என்று சவுதி அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளது.

இத்தகையோரைத் திருமணம் செய்ய விரும்புவோர் கூடுதல் விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மெக்கா காவல்துறை இயக்குனர் ஆசாப் அல் குரேஷி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர்களை திருமணம் செய்யும் விண்ணப்பதாரரின் வயது 25 பூர்த்தியடைந்திருக்கவேண்டும். தனது திருமண விண்ணப்பத்துடன் உள்ளூர் மாவட்ட மேயர் கையெழுத்திட்ட அடையாள ஆவணம், குடும்ப அட்டையின் நகல் மற்றும் தேவைப்படும் பிற ஆவணங்களையும் விண்ணப்பதாரர் அரசு அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும்.

ஆணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தால் தனது மனைவியின் உடல்நலக் குறைபாடு, மலட்டுத்தன்மை அல்லது நாள்பட்ட நோய்த்தாக்கம் இவற்றுக்கான மருத்துவ ஆதாரங்களை அளிக்கவேண்டும் என்றும் குரேஷி குறிப்பிட்டார். இருப்பினும் சவுதி அரசிடமிருந்து இந்தப் புதிய விதிமுறை குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளிவரவில்லை என்று கூறப்படுகின்றது.

SHARE