அரசின் சதிகளை எச்சரிக்கின்றார் அமைச்சர் ஜங்கரநேசன்!!

733

download

அரசின் அபிவிருத்தித்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் பின்னாலும் அரசியல் உள்ளது. அரசின் இந்த நுண்அரசியல் ஆபத்தானது. இதனைச் சரியான முறையில் எதிர்கொள்ளாவிடில், குடிநீர்த்திட்டத்தின் நன்மைகளைவிடப் பாதிப்புகளையே நாம் அதிகம் எதிர்கொள்ள நேரிடும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்திருக்கிறார்.

கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08.04.2014) விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில்,

தற்போது நிலவுகின்ற கடும் வரட்சியை எதிர்கொள்ளும் நோக்கோடு குறைந்த நீர்ப்பாசனத்தில் உபஉணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கப்பட்டுள்ளன. இரைணமடுக் குளத்தில் நீர்வற்றிப் போயிருப்பதால், சிறுபோகத்துக்கான நெல் விதைப்பு 8000 ஏக்கர்களில் இருந்து 800 ஏக்கர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வரட்சியை எதிர்கொள்ளத் தயாராகும் நாம் இரணைமடு நீர் விநியோகத்திட்டத்தின் பின்னால் உள்ள அரசியலையும் புரிந்து கொள்ளவேண்டியவர்களாக உள்ளோம்.

இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை முன்னெடுப்பவர்கள் இதன் பின்னால் அரசியல் இல்லை என்கிறார்கள். அல்லது அரசியலைத் தவிர்த்துவிட்டு அபிவிருத்தியை மாத்திரம் பாருங்கள் என்கிறார்கள். அரசியலை அகற்றிவிட்டு அபிவிருத்தியைப் பற்றி மாத்திரம் பேசுவதற்கு நாம் ஒன்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளோ அல்லது உதவி வழங்கும் நிறுவனங்களின் முகவர்களோ அல்ல, நாங்கள் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட மாகாண அரசின் பிரதிநிதிகள்.

மகாவலி அபிவிருத்தித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் வழங்குவதும்; மின்சக்தி பிறப்பிப்பதும் அதன் நோக்கங்கள் என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. ஆனால் அதன் உள்ளார்ந்த நோக்கம் தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதாக இருந்தது. ஒப்புக்குக் குடியேற்றப்பட்ட சொற்ப தமிழ்மக்களும்கூட கால்வாயின் கடைக்கோடியில் குடியமர்த்தப்பட்டு முன்வாய்க்காலில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களையே தண்ணீருக்காகச்; சார்ந்திருக்கச் செய்யப்பட்டார்கள்.

இவையெல்லாம் வெளியே தெரிந்துவிடகூடாது என்பதில் அரசு கவனமாக இருந்தது. மகாவலிக்கரையை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மலேரியா தொடர்பான கல்வி ஆய்வுகளைக்கூட மகாவலி அதிகாரசபையின் கண்காணிப்புக்கு உட்படுத்தியது. தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையே இனமுரண்பாடுகள் கூர்மையடைவதற்கு மகாவலித்திட்டம் ஒரு காரணம் என்பதை அத்திட்டத்துக்குக் கடனுதவி வழங்கிய நிறுவனங்கள் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டன.

இதனால்தான் இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தொடர்பாகவும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இதன்மூலம் சமூகங்களுக்கிடையே முரண்பாடுகள் தோன்றிவிடக்கூடாது, அதுமாத்திரம் அல்லாமல்; எமக்கான உணவுற்பத்திக்காகவும்;, குடி நீருக்காகவும்; தங்களை நாம் சார்ந்திருக்கவேண்டும் வேண்டும் என்ற அரசின் மறைமுக அரசியலுக்குள்ளும் நாம் மூழ்கிவிடக்;கூடாது.

இவற்றின் அடிப்டையிலேயே இரணைமடுக்குளம் புனரமைப்பையும், குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத்தையும் ஒருங்கிணைத்த திட்டமாக மேற்கொள்ளாது, தனித்தனித்தி;ட்டங்களாகப் பரிசீலிக்கும்படி இதற்கு நிதியுதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். மாகாணசபை இவ்வாறான ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில்;, இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கோருபவர்களின் பின்னால் உள்ள அரசியலைப் பொதுமக்கள் புரிந்து கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை, வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சு.சிவகுமார், உதவி விவசாயப் பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீரங்கன் , வடக்கு விவசாய ஆராய்ச்சிப் பிரிவின் மேலதிகப் பணிப்பாளர் சி. அரசகேசரி, உலக உணவு நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ச. பார்த்தீபன் ஆகியோரும் பங்கேற்றனர்.

SHARE