இந்த நாட்டுக்கு தற்போது தேசியத் தலைவர் ஒருவரே தேவைப்படுகிறார். தவிர பொது வேட்பாளர் இல்லை. அதனால், அரசர்களை நியமிக்கும் வேலைத்திட்டமொன்றை பொது பல சேனா ஆரம்பித்துள்ளது என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
பௌத்தம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டத்திலேயே நாங்கள் இப்போது இருக்கிறோம். நாம் இதுவரை பொறுமை காத்தது போதும். வெளியிடங்களிலிருந்து வரும் அழுத்தங்கள், நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அரசாங்கத்தினாலோ அல்லது அதிகாரம் படைத்தவர்களாலேயோ பௌத்தர்களைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. எமது எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதி, முப்படைத் தளபதிகள் என அனைத்து தரப்பினரும் பாரியதொரு ஏமாற்றத்துக்குள் சிக்கியுள்ளனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் தலையீடுகள் இன்றிய தேசிய அரசியல் கோட்பாடொன்றினூடாக நாம் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது அரசியல், தேசிய அரசியலாகும். எமக்கு சிறந்த பொருளாதாரம் போது சிறந்த அரசியல் தலைமைத்துவமும் தேவைப்படுகிறது. அபிவிருத்தி அபிவிருத்தி என்று எவ்வளவுதான் கத்தினாலும் பல பிரிவுகளில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால், கொள்ளையர்களும் சூழ்ச்சிக்காரர்களும் அதிகரித்துவிட்டனர். நாடு குறித்த எந்தவொரு உணர்வும் அற்ற சமூகமொன்றே இன்று அரசியல் நடத்துகிறது என ஞானசார தேரர் மேலும் கூறினார்.
மாநாயக்க தேரர்களால் செய்ய முடியாத பணிகளை நாட்டுக்காக செய்துவரும் பொதுபல சேனா அமைப்புக்கு தனது ஆசீர்வாதம் எப்போதும் உண்டு என மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கூறியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பின் தேரர்கள் இன்று கண்டி மல்வத்து மாநாயக்க தேரரை சந்தித்த போது அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் நிலைமைகளால் பௌத்த பிக்குகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஞானசார தேரர், மாநாயக்க தேரருக்கு விளக்கியதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பார் மாதம் நாட்டில் மாபெரும் சங்கள சம்மேளனம் ஒன்றை நடத்தி, பௌத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பிக்க போவதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மாநாயக்கருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் ராஜித சேனாரத்னவை பற்றியும் பேசப்பட்டுள்ளது.
அமைச்சர்களுடன் வாத விவாதங்களுக்கு செல்வதில் பயனில்லை என மாநாயக்க தேரர் சுட்டிக்காட்டியதாகவும் அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு ஆசி வழங்கியதாகவும் பொதுபல சேனா அமைப்பு கூறியுள்ளது.
பொதுபல சேனா அமைப்பு, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டு வருகிறது.
முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வணக்கஸ்தலங்களை அந்த அமைப்பினர் உடைந்துள்ளதுடன் முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளை தூண்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பிற்கு பின்னால் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே செயற்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.