பௌத்த துறவிகளின் இனவாத செயல்களுக்கு ஆயுதக்குழுக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்களா?

319

தமிழ் மக்களின் வரலாற்றுப் பதிவுக ளில் முப்பது வருடகால ஆயுதப்போராட்டமும் ஒன்றாகும். தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்த ஆயுதக்குழுக்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, தேசி யம் என்ற கோட்பாட்டின் அடிப்படையின் கீழ் அரசுக்கெதிராக போராட்டங்களை நடத்தினர். இவ்வாயுதப்போராட்டங்களை வலுவூட்டும் வகையில் இந்திய அரசானது ஆயுதப் பயிற்சிகள் தொடக்கம் மருத்துவ, பொருளாதார ரீதியில் இவர்களுக்கான உதவிகளை வழங்கியது. தனது பிராந்திய நலனில் அக்கறைகொண்ட இந்தியரசு இலங்கை அரசுடனான நட்புறவினையும் பேணிப் பாதுகாத்துக்கொண்டுவந்தது. குறிப்பாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற ஆயுதக்கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியபோதும் இப்போராட்ட வடிவமானது நாளடைவில் இந்தியரசுக்கு எதிராக மாற்றம் பெறுமா என்கிற சந்தேகம் ஏற்பட, இவ்வாயுதக்குழுக்களை தனித்தனியாகப் பிரித்தாளும் தந்திரங்களை இந்தியரசு மேற்கொண்டது. அதனை எவ்வாறு செயற்படுத்தலாம் என்பதில் பல உத்திகளைக்கையாண்ட இந்தியா, இலங்கையரசுக்கெதிராக மிகத்தீவிரமாக இவ்வாயுதக் குழுக்கள் போராட்டங்களை நடாத்த பின்னின்று செயற்பட்டது.

hqdefault

அதனது விளைவு சகோதரப் படு கொலையில் ஆரம்பித்து தமிழீழம் என்கின்ற கனவைச் சிதைத்தது. விடுதலைப்புலிகள் அமைப்பானது இக்காலகட்டத்தில் வலுவான தொரு அமைப்பாகச் செயற்பட ஆரம்பித்தது. விடுதலைப்புலிகள், ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி, ஈரோஸ் போன்ற ஆயுதக்குழுக்களில் உள்ளவர்களை சரண டையுமாறு பணித்தபோது சரண டையாமல் தப்பிக்கொண்டவர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். விடுதலைப்புலிகள் அனைத்து இயக்கங்கள் மீதும் ஒரே தடவையில் தாக்கவில்லை. தனித்தனியாக இதனைச் செயற்படுத்தினர். விடுதலைப்புலிகள் ஆயுதக்குழுக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டது சரியென்றே பல அரசியல் புத்தகங்கள் கூறுகின்றன. சகோதரப் படுகொலைகள் தவறு என யாரும் சுட்டிக்காட்டவில்லை. மாறாக அதனை நியாயப்படுத்தியே காட்டுகின்றனர். இந்த நிலையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகளைப் பெற்றுத்தருகின்றோம் என அமைதிப்படை என்கின்ற போர்வையில் இந்தியா 1987இல் இலங்கைக்குள் உள்நுழைந்தது. இதனது பெறுபேறுகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. அமைதிப்படை என உள்நுழைந்த இந்தியா அராஜகப் படையாக தன்னை வெளிப்படுத்தியது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதராகவும் தாக்குதலை ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் ஈ.என்.டி.எல்.எப் என்ற ஆயுதக்குழுவும் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மூன்று இயக்கங்களில் உள்ளவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

ds1222a

விடுதலைப்புலிகளின் தலைவரைப் பிடிப்பதற்கு ஒப்பரேசன் பூமாலை என்ற இராணுவ நடவடிக்கையையும் செக்மேட் என்ற இராணுவ நடவடிக்கையையும் இந்தியா மேற்கொண்டபோதும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாக ரனைப் பிடிக்கமுடியவில்லை. அதன்பிறகு தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றோர் இந்திய இராணுவம் இந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமென உண்ணாவிரதமிருந்ததன் பயனாக இந்திய இராணுவம் காந்திய வழிக்கு மதிப்பளித்து இந்நாட்டிலிருந்து வெளியேறியது. அதற்கு முன்னர் இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்கள் எண்ணிலடங்காதவை. பாலி யல் துஷ்பிரயோகங்கள், கொலை, கொள்ளை போன்றவையும் ஆயிரக்கணக்கானோரை யாழ் கோண்டாவிலில் கொலை செய்தனர். சீக்கிய இராணுவப் படையினர் தமிழ் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். அதன் விளைவே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. இதனோடு இந்திய இராணுவம் இலங்கையைவிட்டு வெளி யேறவேண்டும் என சிங்கள இனவாதிகள் தமிழினத்திற்கெதிராக போராட்டங்களை ஆரம்பித்தனர். அது தொடர்ச்சியாக 1990-2009வரை நீடித்தது.

2001-2004வரை சமாதான ஒப்பந்தங்கள் குறிப்பாக ஒஸ்லோ-டோக்கியோ வரையான பேச்சுக்கள் இடம்பெற்றன. இதில் 07சுற்றுப்பேச்சுக்கள் சர்வதேசம் மற்றும் 14பேச்சுக்கள் உள்ளூர் என நடைபெற்றபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்க அரசு தயக்கம் காட்டியதோடு மீண்டும் தமிழ் மக்களுக்கெதிரான போரை மாவிலாறில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக்கொண்டுவந்தது. இதனை இலங்கையரசு ஒரு இனச்சுத்திகரிப்பாகவே செயற்படுத்தியது. இதில் முள்ளிவாய்க்காலில் மாத்திரம் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதை மஹிந்த ராஜபக்ஷ அரசு சர்வதேச நாடுக ளின் உதவியுடன் இலாவகமாக நடாத்தி முடித்தது.

விடுதலைப்புலிகளின் கட்டமைப்பில் தற்கொலைப் படையினை அங்கீகரிக்காத சர்வதேசங்கள் பிரபாகரனின் தலை மையினை அழித்தொழிக்கவேண்டும் என திடசங்கற்பம் பூண்டன. அதனது பிரதிபலிப்பே இன்று வெளிப்பாடாகத் தோற்றம் பெற்றது. விடுதலைப்புலிகளிடம் வடகிழக்கு பூரண கட்டுப்பாட்டிலிருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு இருந்த அதிகாரங்கள் இன்று மைத்திரி-ரணிலின் நல்லாட்சியில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் ஒரு வலுவானதாக கடல், வான், தரை என 58நி;ர்வாகக் கட்டமைப்பினையும் உள்ளடக்கியிருந்தனர். இதில் நீதி, நிர்வாகம் முக்கிய இடம் வகிக்கின்றது.

suresh-p

முக்கிய பேச்சுவார்த்தைகள் அனைத்தை யும் இலங்கை அரசும், சர்வதேசமும் விடுதலைப்புலிகளுடன் நடாத்தி முடித்தது. தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தபோது, அவையணைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. நோர்வே தனது சமாதான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்படுகின்றது. ஆனால் அவர்கள் எந்தவொரு நாட்டிலும் நிரந்தரமானத் தீர்வினை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் செயற்படவில்லை. மாறாக அந்த நாட்டில் அவ்வினத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் மும்முரமாகச் செயற்பட்டனர். விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களையும் தொடர்பாடல் கருவிகளையும் வழங்கியதோடு அதன் மூலமாக போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினர்.

கடந்த 60ஆண்டு காலங்களாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளானது தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் மாறிமாறிவந்த அரசாங்கங்களும் ஒரு தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை முன்னெடுத்துவந்த சிங்கள இனத்தவர்கள் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் பண்டாரநாயக்காவும், விஜய குமாரணதுங்கவும் அரசினால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் சிங்களத் தலைமைகள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். மீண்டும் இலங்கைத்தீவில் சிறந்ததொரு சூழ்நிலை உருவாகியிருக்க, அதனைக் குழப்பும் நோக்கில் அன்றும் குழப்பம் விளைவித்த பௌத்த துறவிகள் இன்றும் தமது இனவாதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலைமைக்கு ஆதரவாக தற்போது இருக்கக்கூடிய மைத்திரி-ரணிலின் கூட்டரசும் செயற்பட்டு வருகின்றது. அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பொதுபலசேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், இது பௌத்த நாடு. எங்களது நாடு. இலங்கையில் எங்கும் பௌத்த விகாரைகளை நாம் அமைப்போம் என்ற கோசங்களை எழுப்பியதுடன் இனத்துவேசத்தையும் வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது.

இதனால் மீண்டும் ஆவேசமடைந்துள்ள ஆயுதக்குழுக்கள் மீண்டும் புத்துயிர் பெறும் நிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஞான சார தேரர் தனது சகாக்களுடன் வன்னி மண்ணில் கால்பதித்தபோது ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற ஆயுதக்குழுக்கள் தமது பாசறையில் இருந்து கொக்கரித்துக்கொண்டிருந்தனர். வெளியில் வந்து சிங்கள இனவாதிகளுக்கு எதிராக குரல்கொடுப்பதை தவிர்த்திருந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திச் சென்ற பின்னர் வாய்வீரம் பேசத்தொடங்கியுள்ளனர். விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் இவ்வாறான நிலைமை உருவாகியிருக்குமா? என இவர்கள் வாயால் கூறுகின்றனர். ஒரு சில ஆயுதக்குழுக்களின் தலைமைகள் பௌத்த துறவிகள் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்டபோதும், அவ்வாறு செய்தால் அது தவறு எனவும் அடுத்தகட்ட நகர்வினைக்கொண்டு நாம் செயற்படுவோம் என ஊடகங்களுக்குக் கருத்தினைத் தெரிவித்தனர்.

தமிழினம் சிங்களத் தலைமைகளுக்கு எதிராக அநுராதபுரத்திலோ, மதவாச்சியிலோ ஒரு ஆர்ப்பாட்டத்தினைச் செய்வதற்கு சிங்களவர்கள் அனுமதி வழங்குவார்களா? அவ்வாறு செயற்பட முனைந்திருந்தால் இன்று நிலைமை எவ்வாறு மாறியிருக்கும். ஒருவேளை இந்த சமாதான நிலைப்பாட்டைக் குழப்புவதற்காக மஹிந்தவால் இவர்கள் ஏவிவிடப்பட்டிருக்கலாம். காரணம் அவர்களது அரசாட்சிக் காலத்தில் கலகொட அத்தே ஞான சார தேரர் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனத்துவேசத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும் அவர்கள் அரசுடனேயே இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அரசியல் அன்றிலிருந்து இன்றுவரை அரசுடனேயே நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்லது ஏனைய முஸ்லீம் கட்சிகளாகவிருக்கட்டும் எந்த அரசு ஆட்சிக்கு வருகிறதோ அந்த அரசுடன் இணைந்து செயற்படுவதே இவர்களின் வரலாறு.

இது இவ்வாறிருக்க, மீண்டும் இவ்வாயுதக்குழுக்களானது இனவாத சக்திகளுடைய ஆர்ப்பாட்டத்தினால் ஆயுதமேந்திப்போராடும் நிலைக்கு நிலைமையை உருவாக்கியுள்ளனர். மீண்டும் இவ்வாறான செயற்பாடுகள் வடகிழக்கில் நடைபெறுமாகவிருந்தால் தமிழ் ஆயுதக்குழுக்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு இனவாதிகளுக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிக்கத் தயாராகவேண்டும். விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதன் பிரதிபலிப்பை தற்போது இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அன்று அரசின் கைக்கூலிகளாகச் செயற்பட்ட இந்த ஆயுதக்குழுக்கள் மீண்டும் ஒரு அடக்குமுறை வருகின்றபோது கிளர்ந்தெழுகின்றார்கள். ஆகவே இந்த அரசாங்கம் இனவாதக் கட்சிகளது ஆர்ப்பாட்டங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். தொடர்ந்தும் இவ்வரசாங்கத்தினது செயற்பாடுகள் இனவாதிகளுக்கு எதிராக மௌனமாக நகர்த்திச்செல்லப்படுமாகவிருந்தால் மீண்டும் 1983இல் நடைபெற்ற ஜூலைக் கலவரத்தை நோக்கியே பயணிக்கவேண்டிய நிலை உருவாகும். தமிழினம் அடிபணிந்த அல்லது தோற்றுப்போன இனம் அல்ல. சர்வதேச நாடுகளின் உதவியுடனேயே தமிழ் மக்களது போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவந்தது. இன்று சர்வதேச ரீதி யாகவும் இவர்களைப் பலப்படுத்த வேண்டியதேவை இருக்கிறது. அதனையே தற்போது செய்துவருகின்றனர். மீண்டும் இவ்வாயுதக்குழுக்களை இந்தியாவிற்கு வரவழைத்து ஆயுதப் பயிற்சிகளை வழங்கி இலங்கையில் ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்துவதில் இந்தியா தீவிரமாக இருக்கிறது. ஆசியப் பிராந்தியதில் பலம் பொருந்திய அமைப்பாக விடுதலைப்புலிகள் காணப்பட்டனர். அவர்களின் காலத்தில் இந்தியா சொல்வதை இலங்கை கேட்டது. தற்போது சீனாவையும், அமெரிக்காவையும் உள்வாங்கியிருப்பது இந்தியாவின் பூகோள அரசியலுக்குத் தலையிடியாக அமைந்திருக்கிறது. ஆகவே இதிலிருந்து ஒரு மாற்றத்தைக் கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது. அதற்கு வழி தமிழ் மக்கள் மீது மீண்டும் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதே. மீண்டும் இனவாதம் தோற்றுவிக்கப்படுமாகவிருந்தால் தமிழ் இளைஞர்கள், ஆயுதக்குழுக்கள் உரிமைக்காகப் போராடுவார்கள் என்பதும் இந்தியாவுக்கு நன்கு தெரியும்.
அவ்வாறான நிலைமையை உருவாக்கி மீண்டும் மஹிந்த அவர்களை ஆட்சிக்குக் கொண்டுவர இந்தியா முயல்கின்றது. வவுனியாவில் கலகொட அத்தே ஞான சார தேரர் தமிழ் மக்களுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டமை தொடர்பில் இவ்வியக்கங்கள் கலந்தா லோசித்துள்ளன. இவ்வாறு மற்றுமொரு முறை இனவாதக் கருத்துக்களோடு இவர்கள் உள்நுழைந்தால் அதற்குத் தக்கபாடம் புகட்ட இவர்கள் தீர்மானித்துள்ளனர். தொடர்ந்தும் இனவாதங்கள் வடகிழக்கில் வெளிப்படுமாகவிருந்தால் வன்முறைகள் தீவிரமாக வெடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. கலகொட அத்தே ஞானசார தேரர் ஆர்ப்பாட்டத்தில் கோசங்களை எழுப்பியபோது பொலிசார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். அவ்வாறாகவிருக்கின்றபோது இதனை எவ்வாறு நோக்குவது? தற்போது இருக்கக்கூடிய ஆயுதக்குழுக்களின் தலைமைகள் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என்பதை அவதானிக்கமுடிகின்றது. இனவாதிகளின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மைத்திரி-ரணிலின் கூட்டரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றது.

 – மறவன் –

 

SHARE