இலங்கை அணியின் கேப்டனாகவும் சில ஆண்டுகள் பணியாற்றி இருக்கும் மஹேலா ஜெயவர்த்தனே, பாகிஸ்தானுக்கு எதிராக கொழும்பில் நாளை தொடங்கும் (ஆகஸ்டு14-18) 2-வது டெஸ்டுடன் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுகிறார். இது அவரது கடைசி டெஸ்ட் என்பதால் மைதான பகுதியில் ஜெயவர்த்தனேவின் ஏராளமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
17 ஆண்டுகள் இலங்கை அணிக்காக சீரிய பங்களிப்பை அளித்த அவரை வழியனுப்பி வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இதனால் ஜெயவர்த்தனே இப்போதே ஒரு விதமான உணர்ச்சிபெருக்கில் காணப்படுகிறார். ஜெயவர்த்தனே 148 டெஸ்டில் விளையாடி 34 சதத்துடன் 11,756 ரன்களும், 420 ஒரு நாள் போட்டிகளில் 16 சதத்துடன் 11,681 ரன்களும் குவித்துள்ளார்.
ஒரு நாள் போட்டி, டெஸ்ட் ஆகிய இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்த 5-வது வீரர் ஜெயவர்த்தனே ஆவார். சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோர் ஏற்கனவே இந்த சிறப்பை பெற்றவர்கள் ஆவார்.
2006-ம் ஆண்டு கொழும்பில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஜெயவர்த்தனே 374 ரன்கள் குவித்தார். டெஸ்டில் வலக்கை ஆட்டக்காரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச தனி நபர் ரன் இது தான். இந்த போட்டியில் அவரும், சங்கக்கராவும் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 624 ரன்கள் திரட்டினர்.
இது டெஸ்டில் ஓர் ஜோடி குவித்த அதிகபட்ச உலக சாதனையாக இன்றளவும் திகழ்கிறது. 1997-ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது 20-வது வயதில் அறிமுகம் ஆன ஜெயவர்த்தனே, சொந்த மண்ணிலேயே தனது டெஸ்ட் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் இதே ஆகஸ்டு 14-18-ந்தேதி தான் (1948-ம் ஆண்டில்) கிரிக்கெட்டின் பிதாமகன் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் டெஸ்டில் ஆடிய கடைசி நாட்கள் ஆகும். ஜெயவர்த்தனே கூறுகையில், ‘ஓய்வு முடிவை எளிதாக எடுத்து விடவில்லை. ஆனால் விலகுவதற்கு இதுவே சரியான நேரமாக நம்புகிறேன்.
அணியில் இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேத்யூசும், கேப்டன் பணியில் தன்னை வலுவாக நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். எனவே அணியில் எனது பணி நிறைவடைந்து விட்டது. இலங்கை அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும்’ என்றார்.
சக வீரர் சங்கக்கரா கூறுகையில், ‘நான் மட்டுமல்ல, இலங்கை ரசிகர்கள், எங்கள் அணியினர் ஏன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகே ஜெயவர்த்தனே போன்ற சிறந்த வீரரை இழப்பதை நினைத்து வருந்துவார்கள். அவரது இடத்தை நிரப்ப நீண்ட காலம் நீடிக்கும். அவரது நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வு, பலம், யுக்திகள் மீது ஒவ்வொரு வீரர்களும் மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அணியில் அவரே எப்போதும் தலைச்சிறந்த வீரர்’ என்றார்.
ஜெயவர்த்தனேவின் தந்தை செரிநாத் ஜெயவர்த்தனே கூறியதாவது:-
காலே டெஸ்டில் மஹேலா ஜெயவர்த்தனே முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக ஆடினார். அந்த போட்டியை நான் நேரில் பார்த்தேன். அவர் கடைசியாக டெஸ்ட் விளையாடப் போகும் கொழும்பு மைதானத்தில் 5 நாட்களும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சங்கமித்து விடுவோம்.
இந்த போட்டி முதலில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானம் மஹேலாவின் சொந்த ஊர் என்பதால் அவருக்காக போட்டியை இலங்கை கிரிக்கெட் வாரியம் அங்கு மாற்றி இருக்கிறது. அவரது ரசிகர்கள், ஆதரவாளர்கள் அவரை உற்சாகப்படுத்துவார்கள்.
தனது முன்னாள் பயிற்சியாளர்கள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்கள் என்று தனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் கடைசி போட்டியை பார்க்க நேரில் வரும்படி மஹேலா அழைப்பு விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், எனது இன்னொரு மகன் திசால் (மூளை கட்டியால் 16-வது வயதில் இறந்தார்) இறந்த போது மஹேலா கிரிக்கெட்டை முழுமையாக துறக்க விரும்பினார்.
ஏனெனில் சகோதரர்கள் இருவரும் அந்த அளவுக்கு பாசமாக இருந்தனர். பார்ப்பதற்கு இரட்டையர் போன்று இருப்பார்கள். அதன் பிறகு கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தான் மஹேலாவை சகஜ நிலைக்கு கொண்டு வந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வைத்தனர்.
தனது கடைசி டெஸ்டில் அவர் சதம் அடிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அவரை உலுக்கி விட்டது. அது தான் அவரது கடைசி பாகிஸ்தான் பயணமாக எப்போதும் இருக்கும்.
ஏனெனில் எதிர்காலத்தில் பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு வந்தாலும், மஹேலா ஒரு போதும் அங்கு செல்லமாட்டார்.
இவ்வாறு செரிநாத் கூறினார்.
டெஸ்டில் இருந்து விலகும் ஜெயவர்த்தனே உலககோப்பை போட்டி வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆட முடிவு செய்திருக்கிறார்.