உள்நாட்டு பிரச்சினைகளுக்கு மதிப்பு வழங்க வேண்டியதும், ஒரு பக்கசார்பான விடயங்களை முன்னெடுப்பதன் காரணமாக ஏற்படும் உணர்வுகள் தொடர்பான விடயங்களில் இருந்து சர்வதேச சமூகம் விலகியிருக்க வேண்டுமெனவும் இலங்கை கேட்டுள்ளது.
கடந்த வாரம் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடினார்.
காணாமல் போனோரின் உறவினர்கள் மருதானையில் வைத்து நடத்திய கூட்டத்தில் அமெரிக்க இராஜதந்திரிகள் பங்கேற்றமையை அடுத்து எழுந்துள்ள நிலைமை தொடர்பிலேயே அமைச்சர் இந்த கலந்துரையாடலை நடத்தினார்.
இது தொடர்பில் இன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் உள்ளக விடயங்களில் தலையிடும்போது ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்த இராஜதந்திரிகள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்தவரை பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் தமது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயற்படுகின்றனர். அதற்கான பொறுப்பையும் கொண்டிருக்கிறார்கள் என்று வெளியுறவு அமைச்சர் கூறியதாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.