
வரலாறு ஒருபோதும் பின்னோக்கிப் பார்ப்பதில்லை எனக் கூறுவார்கள். ஆனால் இலங்கை அரசியல் பிரச்சனையில் சில சம்பவங்கள் மீளவும் கடந்த காலத்தினை நினைவூட்டவே செய்கிறது.
தற்போது தேசிய இனப் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது? என்பது பெரும் விவாதப் பொருளாக மாறிவருகிறது.
சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முடிந்த தடைகளைப் போட முயற்சிக்கின்றன.
இருந்த போதிலும் ஆளும் மைத்திரி- ரணில் அரசு தேசிய இனப் பிரச்சனைத் தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் காணப்படுகின்ற நிலையில் தீர்வு சாத்தியமா? என்ற சந்தேகங்களும் உள்ளன.
இவ்வாறான ஒரு நிலை சந்திரிகா அவர்கள் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைப்பட்டபோது காணப்பட்டது.
1994- 1995 இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த தீர்மானித்தபோது காணப்பட்ட புறச்சூழல்களை சந்திரிகா இவ்வாறு விபரிக்கிறார்.
புலிகளுடனான பேச்சுவார்த்தைகளில் அனுபவஸ்தர்களை ஈடுபடுத்தாதது குறித்து பலத்த விமர்சனம் எழுந்தது. தோல்வியில் முடிவடையும் என எச்சரிக்கைகள் எழுந்தன.
ஆனால் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்களை நோர்வே பல சந்தர்ப்பங்களில் ஈடுபடுத்தியபோதும் அவை வெற்றியளிக்கவில்லை. எனவே அவ்வாறான விமர்சனங்களை நான் ஏற்கவில்லை.
பேச்சுவார்த்தைகளை நல்ல நோக்கோடு நடத்துபவர்களை நான் இணைத்தேன்.
ஆனாலும் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு புலமை, அனுபவம் எந்த விதத்தில் உதவப்போகிறது?
பிரபாகரனும் நானும் சுமார் 42 அல்லது 43 கடிதங்கள் பரிமாறினோம்.
அதன் மூலம் பிரபாகரன் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்கப் போவதில்லை என்பதே எனது அனுபவமாக இருந்தது.
எனவே ஈழத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் வடக்கில் ஏதாவது வேலைகள் செய்யவேண்டும் என்பது எனது நோக்கமாக இருந்தது. அப் பகுதி போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்னர் அப் பிரதேசம் கவனிப்பாரற்ற பிரதேசமாக இருந்தது. அம் மக்கள் பிரபாகரனைப் பின் தொடர்வதற்கு அதுவே பிரதான காரணமாக இருந்தது.
எனவே நாம் சாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பாடசாலைகள், மீன்பிடி, துறைமுகம் போன்றவற்றைத் திருத்துவதற்கான திட்டங்களைத் தயாரித்தோம்.
இதனை நிறைவேற்ற எங்களை அனுமதிப்பீர்களா? என எனது கடிதத்தில் கேட்டிருந்தேன்.
ஈழம் கிடைத்ததும் நாமே அதனைச் செய்வோம் என பிரபாகரனின் பதில் இருந்தது. அவரைப் பொறுத்த மட்டில் எந்த அரசாங்கமம் எதுவும் செய்யவில்லை என தமிழ் மக்களுக்கு தொடர்ந்து கூறுவதே அவரது நோக்கமாக இருந்தது.
இதனை வைத்தே உங்கள் பிள்ளைகளை என்னிடம் தாருங்கள் என கோர வைத்தது.
அடுத்ததாக நான் பதவிக்கு வந்தது அவருக்கு பெரும் கவலை அளித்தது. பெருமளவு மக்கள் சமாதானத்தைக் கோரி நின்றதால் நானும் அதனை வழங்க தீர்மானித்திருந்ததால் இக் கவலை ஏற்பட்டது.
தமிழ் மக்கள் சலுகைளை எதிர்பார்க்கவில்லை. உரிமைகளையே வேண்டுகிறார்கள்.
மக்கள் பொருட்களை வாங்கும் அங்காடிகளில் சந்திரிகா காப்பு, தாம் வணங்கும் சுவாமி அறைகளில் எனது படங்களை வைப்பது போன்ற நிகழ்வுகள் காணப்பட்டதால் ஏற்பட்ட கவலைகளால் என்னை “ஒரு பேயாகக் காட்டும்” தருணத்தை எதிர்பார்த்திருந்தார்.
என்னை அவ்வாறான பேயாக அதாவது நீளமான பற்களுடன், வாயிலிருந்து இரத்தம் கசியும் தோற்றத்துடன் காணப்படும் துண்டுப் பிரசுரங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டன.
எனது நடவடிக்கைகள் குறித்து விமர்ச்சிக்கும் சிலர் ஈழத்தைத் தவிர எதையும் ஏற்காத பிரபாகரனுடன் நேரத்தை விரயமாக்குவதாக கிண்டலடித்தார்கள்.
பிரபாகரன் தனிநாட்டினைக் கோரிய போதிலும், அதனை நாம் வழங்க முடியாது என்ற நிலையிலும் போரை மிக விரைவாக முடிவுக்கு எடுத்துச் செல்வதே எனது நோக்கமாக இருந்தது.
நாம் தொடர்ச்சியாக அவரது கதவைத் தட்டிக்கொண்டே அம் மக்களின் தேவைகளை உண்மையாக நிறைவேற்றுவதே எதிர்பார்ப்பாக இருந்தது. அவர்கள் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை.
தனி நாட்டினை அல்ல உரிமைகளையே எதிர்பார்த்தார்கள். நாம் அம் மக்களது உரிமைகளை வழங்கத் தயாராக உள்ளோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்போது அம் மக்கள் அவரை விட்டு விலகிச் செல்வார்கள்.
இன்று அதுவே யதார்த்தமாக உள்ளது. சந்திரிகா அவர்களின் பயணம் தற்போது அவ்வாறே உள்ளது. ஆனால் அவரிடம் அன்று அதிகாரம் இருந்தது. இன்று செல்வாக்கு மட்டுமே எஞ்சியுள்ளது.
அன்ரன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய்க்கு வைத்தியம் பார்க்க எரிக் சொல்கெய்ம் உதவியை நாடிய புலிகள்

மதி உரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் கிட்னி விவகாரம்.
நோர்வே நாடு இலங்கையின் தொழில் அபிவிருத்திக்கு நீண்டகாலமாக உதவிகள் வழங்கி வந்த போதிலும் தூதரக அளவிலான உறவுகள் 1996 இல் தான் ஏற்பட்டது.
அங்கு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த நோர்வேஜியரான வெஸ்ற்போர்க் ( Westborg) தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு இலங்கையில் பல அரசியல் முக்கியஸ்தர்கள் ஏற்கெனவே அறிமுகமாகியிருந்ததால் அவரது தூதுவர் அலுவல்களை விரைவாக தொடர்வதற்கு அது வசதியாக இருந்தது.
இதுவரையும் அரசிற்கு வெளியில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொண்ட நோர்வே அரசு தற்போது அபிவிருத்தி குறித்து அரசின் திட்டமிடலுடன் இணையும் வாய்ப்புக் கிட்டியது.
ஆரம்பத்தில் நோர்வே அபிவிருத்தி காப்பரேஷன் (Norway Development Coorperation ) என்ற பெயரில் மட்டும் இயங்கியவர்கள் தற்போது தூதுவர் அந்தஸ்து கிடைத்ததும் நாட்டில் சமாதானத்தை எட்டுவதற்கான வழிவகைகளையும் அரசிற்கான பொருளாதார உதவிகளோடு இணைத்தனர்.
இதனால் Norad என அழைக்கப்பட்ட உதவி நிறுவனம் சமாதான முயற்சிகளிலும் இறங்கியது.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தெற்கில் வாழும் மக்கள் சமாதானத்தின் அவசியத்தை உணரவேண்டும் எனக் கருதி சிங்களப் பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் கவலையை அளித்தது. ரணில் மிகவும் கடுமையான விமர்சனங்களை அதாவது வெளிநாடுகள் உள் விவகாரங்களில் தலையிடுவதாக விமர்ச்சித்தார்.
ஆனால் அப்போதைய வெளியுறவு அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமரின் விளக்கம் இன்னொரு விதமாக இருந்தது.
அதாவது ஜனாதிபதி சந்திரிகாவின் விருப்பம் பேச்சுவார்த்தை மூலமாக சமாதானம் எட்டப்படவேண்டுமென்பதாக இருந்த போதிலும், அவர் தமிழ் மக்களின் உரிமை ஐக்கிய இலங்கைக்குள் தீர்க்கப்பட வேண்டுமென்பதிலும் அவர் இறுக்கமான பார்வையை வைத்திருப்பதாக பலரும் நம்பினர்.
ஆனால் அவர் பிரிவினை கோரும், பயங்கரவாதத்தை பின்பற்றும் விடுதலைப்புலிகளுடன் சமாதானம் பேசுவது ஜனநாயக விரோத அணுகுமுறை எனக் கருதினார்.
இக் காலகட்டத்தில் இலங்கை அரசினது மனித உரிமை மீறல்கள் நோர்வே பாராளுமன்றத்தில் பெரும் விவாதங்களை எழுப்பியிருந்தன.
அதாவது போர் நடக்கும்போது அங்கு அபிவிருத்தியில் ஈடுபடுவதாக நாம் கூறுவது பல்வேறு வியாக்கினங்களுக்குள் செல்வதால் அச் செயற்பாடுகளை நிறுத்தலாமா? என கருதப்பட்டது.
இன்னொரு சாரார் சந்திரிகா அவர்கள் சமாதானம், ஜனநாயகம், போர் நிறுத்தம் என்ற கோஷங்களோடு பதவிக்கு வந்திருப்பதாலும், அதுவும் புலிகளோடு பேசலாம் எனக் கருதுவதாலும் நிதி உதவிகளை சமாதான முயற்சிகளைக் கட்டி எழுப்பவும், சிவில் சமூகத்தைப் பலப்படுத்தவும் உதவலாம் என வாதிக்கப்பட்டது.
இதன் பின்னணியில் நோர்வே வெளிநாட்டமைச்சு ஓர் உயர்மட்ட மாநாடு ஒன்றினைக் கூட்டியிருந்தது. 1996 பெப்ரவரியில் நடத்தினர்.
அம் மாநாட்டில் நோர்வேயின் கன்சவேட்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், பின்னர் 2013 இல் நோர்வேயின் பிரதமராக பதவியைப் பெற்றவருமான எர்னா சொல்பேர்க் (Erna Solberg) , இலங்கையின் மூத்த பாராளுமன்ற உறுப்பினரான சரத் அமுனுகம, வி. உருத்ரகுமாரன் போன்றோர் கலந்துகொண்டனர்.
இச் சந்தர்ப்பத்தில்தான் 1997 இல் தான் சார்ந்த தொழிற் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்த சமாதான முயற்சிகளுக்கு வருகிறார்.
1998 இல் இலங்கைக்கு முதன்முதலாக செல்லும் சோல்கெய்ம் அங்கு அமைதியாக இருந்து தனது அனுபவங்களை நூலாக எழுத அவரது நோர்வேஜிய நண்பரின் அழைப்பில் சென்றிருந்தார்.
நோர்வே தூதுவராலய நண்பர் அவ்வேளையில் அரச மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் சமாதானம் தொடர்பான தீவிர பேச்சுவார்த்தைகிளில் குறிப்பாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஏ சி எஸ், ஹமீட், நீலன் திருச்செல்வம், அப்போதைய கொழும்பு மேயரும், ஐ தே கட்சியின் முக்கிய தலைவரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜெயசூரியா போன்றோருடன் உரையாடல்களை நடத்தியிருந்தார்.
அவ்வேளைகளில் சோல்கெய்ம் உடனிருந்தார்.
இந்த அனுபவங்கள் இலங்கை விவகாரத்தில் ஈடுபட அவரை ஈர்த்தது. குறிப்பாக ஜே வி பி இன் நடவடிக்கைகள், அதன் விளைவுகள் என்பன பாரிய அனுபவத்தை அவருக்கு வழங்கின.
இதனால் இலங்கை அரசியல் குறித்து ஆழமாக அறியத் தொடங்கினார். சர்வதேச அரசியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்த சோல்கெய்ம் இச் சம்பவங்களே அவரை இலங்கை விவகாரத்தில் ஈடுபட வைத்தது.
இதன் பின்னணியில் நோர்வே சர்வ கட்சி பாராளுமன்றக் குழு ஒன்றினை இலங்கைக்கு அழைத்துச் சென்றார்.
இதற்குக் காரணம் நோர்வே- இலங்கை உறவுகளை பரந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதாகும்.
இப் பாராளுமன்ற தூதுக் குழுவினர் ஜனாதிபதி சந்திரிகாவை சந்திக்காத போதிலும் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் அவர்களைச் சந்தித்தனர்.
இத் தூதுக் குழுவில் நோர்வே பாராளுமன்றத்தின் தலைவரும் சென்றிருந்தார். அவரது பதவி அந் நாட்டின் அரசருக்கு அடுத்ததாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக நோர்வே தூதுக் குழுவினர் மிகவும் ஆடம்பரமாக இலங்கை அரசால் வரவேற்கப்பட்டனர்.
போரின் மத்தியிலும் இலங்கை அரசு தமக்கு அளித்த உயர்ந்த வரவேற்பு இருநாடுகளுக்குமிடையேயான உறவுகளை மட்டுமல்ல ஏரிக் சோல்கெய்ம் அவர்களின் ராஜதந்திரமும் சிறப்பாக வெளிப்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கும் எரிக் சொல்கெய்ம் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு மிகவும் ருசிகரமானது.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அபிப்பராயத்தை அறியும்பொருட்டு சோல்கெய்ம் பிரான்ஸ் நாட்டிற்கு 1998 இல் சென்றிருந்தார்.
அங்கு தொழிலாளர்கள் செறிந்து வாழும் பரிஸ் நகரத்தின் வட கிழக்கு பகுதிக்கு அதாவது லாச் சப்பல் (Porte la de Chapelle ) சென்றார். அங்கு சிறிதளவு தமிழர்களும் வாழ்கின்றனர்.
இதனால் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக ஒரு மாதத்தின் பின்னர் அதாவது செப்டெம்பர் 1998 இல் செல்லையா ராஜகுலசிங்கம் என்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர், அவர் புலிகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பவர், ஒஸ்லோ தமிழ் சமூகத்தின் தலைவர் ஒருநாள் நோர்வே பாராளுமன்றத்திற்குச் சென்று சோல்கெய்மிடம் மிகவும் முக்கியமான செய்தி ஒன்றைத் தெரிவித்திருந்தார்.
பாலசிங்கம் நீரிழிவு நோயால் மிக மோச பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வெளியில் வைத்தியம் செய்ய நோர்வே உதவுமா? என்பதாகும்.
குறிப்பாக அவர் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமானவர். அவர் ஐரோப்பாவிற்கு வந்தால் பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புலிகள் ஏன் எரிக் சொல்கெய்ம் அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்? என்பதற்கு அவரே விளக்கம் கொடுக்கிறார்.
நோர்வேயில் மிக பிரசித்தமான அரசியல்வாதி, அத்துடன் இலங்கை விவகாரத்தில் ஈடுபட விருப்பம் தெரிவித்தமை, பரிஸில் சந்தித்தபோது புலிகளின் வெளிநாட்டு முக்கியஸ்தர்களை சந்திக்க விருப்பம் தெரிவித்த கருத்துக்கள் அச் சந்திப்பிற்கான உந்துதலை வழங்கியிருக்கலாம்.
அத்துடன் வெளிநாட்டமைச்சருக்கென தெரிவித்த செய்திகள் தன்னால் மட்டுமே அங்கு கிடைக்கச் செய்ய முடியும் என அவர்கள் கருதியிருக்கலாம் என்கிறார்.
சோல்கெய்ம் உடனடியாகவே வெளிநாட்டமைச்சருக்கு தெரிவித்ததும் அவ் விவகாரம் தொடர்பாக யாருடன் தொடர்பு கொள்வது? குறித்த விபரங்களை அமைச்சர் வழங்கியிருந்தார்.
வெளிநாட்டமைச்சரும் இவ் அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி புலிகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த அவர்கள் ஆவலாக இருந்தனர்.
பாலசிங்கத்தை இலங்கையிலிருந்து எவ்வாறு வெளியே எடுப்பது? என்பது இலங்கை அரசின் உதவி இல்லாமல் சாத்தியப்படாது.
“மாமனார் அனுருத்த ரத்வத்தயினால் தனது உயிருக்கு ஆபத்து!! : அச்சமடைந்திருந்த சந்திரிகா

பாலசிங்கத்தின் நீரிழிவு வியாதி படிப்படியாக மோசமாகிக் கொண்டிருந்தது. இந் நிலமை குறித்து பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இப் பின்னணியில்தான் அவருக்கு வெளியில் சிகிச்சை செய்ய முடிவு செய்து தமது பாரிஸ் காரியாலயம் மூலமாக சோல்கெய்ம் உடன் தொடர்புகொள்ள புலிகளால் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையிலேயே நோர்வேயுடன் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவ் விபரங்கள் கடந்த வாரம் தரப்பட்டிருந்தன.
இதன் விளைவாக நோர்வே தூதுவர் வெஸ்ற்பேர்க் (Westborg) வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் ஆகியோருக்கிடையே தீவிர பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தூதுவரினதும், கதிர்காமரினதும் வீடுகள் அருகருகே இருந்ததால் தூதுவர் அடிக்கடி பின் வாசல் வழியாக சென்று பேசி வந்தார். இவை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த சங்கதிகளாக இருந்தன.
அமைச்சர் கதிர்காமர் தனது அலுவல்களைப் பெரும்பாலும் தனது வீட்டிலேயே தங்கி கவனித்து வந்தார்.
அரசாங்கத்தோடு 1998 ம் ஆண்டு செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் தூதுவர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த அதேவேளை எரிக்சோல்கெய்ம் விடுதலைப்புலிகளோடு பேசி வந்தார்.
இவ் விபரங்களில் சில பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் அவர்களின் நூலிலும் வெளியாகி உள்ளன.
பாலசிங்கத்தின் வியாதி அவ்வப்போது சிக்கலாகிய வேளையில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் சில வைத்திய அதிகாரிகள் அங்கு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் தற்போது நிலமை மோசமாகியுள்ளதால் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. இப் பேச்சுவார்த்தைகளின்போது அரசு சில நிபந்தனைகளை விதித்தது.
ஆனால் புலிகள் அவற்றில் பலவற்றை நிராகரித்தனர். தாம் இப் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் நோக்கும்படி கோருவதாக தெரிவித்தனர்.
1998ம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி பீரிஸையும், 18ம் திகதி கதிர்காமரையும், 26ம் திகதி சந்திரிகாவையும் தூதுவர் சந்தித்தார்.
இதன் விளைவுகள் புலிகளுக்கும், அரசிற்கும் மாறி மாறித் தெரிவிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் அரசாங்கம் இப் பிரச்சனையில் மிகவும் ஆர்வமாக இருந்தது. அரசின் சமாதான முயற்சிகளுக்கு புலிகளை உள்ளே கொண்டுவருவதற்கு நல்ல சந்தர்ப்பமெனக் கருதப்பட்டது.
இவை யாவும் பாலசிங்கத்திற்கு பூரணமாக தெரிந்திருந்தது.
இப் பேச்சுவார்த்தைகளின்போது இன்னொரு அச்சமூட்டும் அம்சம் காணப்பட்டது.
அதாவது சந்திரிகாவின் மாமனார் அனுருத்த ரத்வத்த பாதுகாப்பு அமைச்சராகவும், புலிகளை ராணுவ ரீதியில் ஒழிக்க திட்டமிடுபவராகவும் இருந்தார்.
சந்திரிகாவுடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் தனது மாமனார் குறித்து அச்சமடைந்திருப்பது உணரப்பட்டது.
இருப்பினும் சந்திரிகா, கதிர்காமர் ஆகியோர் பல நூறு உயிர்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு புலிகளோடு பேசும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை.
அத்துடன் பாலசிங்கத்தின் உயிரைக் காப்பதற்கு நிபந்தனைகளை விதிப்பதற்கும் பெரும் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
அரசு இன்னொரு கொலைக்கு உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டிற்கும் துணைபோக தயாராக இல்லை. ஆனால் இச்சந்தர்ப்பத்தை ரணில் தனது எதிர்ப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவார் என்பது குறித்து கவலை அடைந்திருந்தனர்.
இலங்கையின் ஐ நா சபையின் ராஜதந்திரியாகவும், பின்னர் சமாதான செயலகத்தின் அதிகாரியாகவும் செயற்பட்ட பேர்னார்ட் குணதிலக அவர்களின் கருத்துப்படி……
அதாவது பாலசிங்கத்தின் பிரச்சனை மனிதாபிமானப் பிரச்சனையாக இருந்த போதிலும் அதனால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைக் கருத்தில் கொண்டு புலிகளே அதற்கான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக புலிகள் 1999ம் ஆண்டு ஜனவரி 23ம் திகதி பாலசிங்கம், மனைவி அடேல் ஆகியோர் நாட்டை விட்டு படகில் வெளியேறி தாய்லாந்தை அடைந்தனர்.
இவர்களது வெளியேற்றம் குறித்த முழு விபரங்களும் சந்திரிகா, கதிர்காமர் ஆகியோர் ஏற்கெனவே தெரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ் வெளியேற்றத்தின்போது அதனைத் தடுக்கும் சக்தி இலங்கைக் கடற்படைக்கு போதியதாக இருந்ததில்லை. அத்துடன் பாலசிங்கம் பிரித்தானிய பிரஜை என்பதும் கவனத்திற்குரியது.
புலிகள் இனவாதிகள்! இந்திய பத்திரிகையாளர் நிருபாமா தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்!! :

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
2002 ம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் எரிக் சோல்கெய்ம் கொழும்பு வருகிறார்.
இவர்களின் பிரதான நோக்கம் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை ஏற்படுத்துவதாகும். நோர்வே தரப்பினர் ஏற்கெனவே அதற்கான நகலை இரு தரப்பினருடனும் பேசிய அடிப்படைகளை வைத்து தயாரித்திருந்தனர்.
லண்டனில் பாலசிங்கத்துடன் நடத்திய உரையாடலின் பின்னணியில் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவ் ஒப்பந்தம் வவுனியாவில் 22-2-2002 இல் பகிரங்கமாக கைச்சாத்திடப்பட்டது.
இவ் ஒப்பந்த தயாரிப்பின்போது பல சிக்கல்களைத் தாம் எதிர்நோக்கியதாக சோல்கெய்ம் கூறுகிறார்.
தனக்கு ஒப்பந்தம் தொடர்பான சட்ட நுணுக்கங்கள் தெரியாததால் நோர்வே வெளியறவு அமைச்சு அதற்கான உதவிகளை வழங்கியது.
அத்துடன் அந் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் அனுபவங்களும் பெறப்பட்டது.
இதன் காரணமாக இவ் அமைச்சின் அதிகாரிகள் இருவர் பின்னர் கண்காணிப்புக் குழுவின் தலைவர்களானார்கள்.
போர் நிறுத்தம் குறித்து இரு தரப்பிலும் அதிக ஆர்வம் காட்டப்பட்டது. இருப்பினும் ராணுவம் சில அம்சங்களில் அதாவது பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கும் அணுகுமுறைகளில் சில வரம்புகளை விதித்தது. அவற்றை பாலசிங்கம் ஏற்றுக்கொண்டார்.
உதாரணமாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ராணுவம் தடை விதித்தது.
ஓப்பந்தம் முதலில் பிரபாகரனிடம் கொடுக்கப்பட்டு கைச்சாத்து பெறப்பட்டது.
இதற்காக நோர்வே தூதுவர் 21-02-2002 இல் கிளிநொச்சி சென்று பெற்றுக்கொண்டார். இப் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் எதுவும் ஜனாதிபதி சந்திரிகாவிற்குத் தெரியப்படுத்திவில்லை.
இரு சாராரும் அதனை விரும்பவில்லை.
குறிப்பாக புலிகள் சந்திரிகா மீது நம்பிக்கையற்று இருந்தனர். ஆனால் சந்திரிகாவை இவற்றில் சம்பந்தப்படுத்தாதது மிகப் பெரும் தவறு என தற்போது சோல்கெய்ம் கருதுகிறார்.
பேர்னார்ட் குணதிலகா கூறுகையில் அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் பல தடவைகள் இடம்பெற்ற போதிலும் அவை இரு நிறுவனங்களுக்கிடையேயானதாக இல்லை.
சமாதானத்திற்கான வளங்களைக் கொண்ட செயலகம் இரு தரப்பிலும் இருந்ததில்லை. அரசு இதனை உணர்ந்த காரணத்தால் சமாதான செயலகம் ஒன்றை அமைக்கும்படி என்னைக் கோரினர்.
புலிகள் தரப்பில் பாலசிங்கமே முழுப் பேச்சுவார்த்தைகளிலும் காணப்பட்டார்.
இவ் ஒப்பந்தம் குறித்து இந்திய தூதுவர் தெரிவிக்கையில் நோர்வே – இலங்கை அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் தாம் பங்குபற்றாத போதிலும் சந்திரிகா, கதிர்காமர் ஆகியோருடன் தாம் பேசியதாக கூறுகிறார்.
தனது சந்தேகங்களுக்கு மத்தியிலும் அவர்கள் ஒப்பந்தம் செயற்பட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தியதாக குறிப்பிடுகிறார்.
ஒப்பந்தம் தொடர்பாக இந்தியப் பத்திரிகையாளர் நிருபாமா சுப்ரமணியம் தெரிவிக்கையில்
விடுதலைப்புலிகள் என்பது ஒட்டுமொத்தமான பாசிச அமைப்பு எனவும், அவர்கள் தமிழீழம் என்ற தனிநாட்டை கட்டுப்படுத்தினால் அது பெரும் அழிவில்தான் முடியும்.
EPDP. TELO போன்ற அமைப்புகளின் ஆயுதங்களைக் களைவது புலிகளை ஏக பிரதிநிதியாக மாற்றுவதற்கான முயற்சி எனவும், போர் நிறுத்தம் நாட்டை இரு கூறாக்குவதோடு, புலிகளும் அரசும் சமமான தரத்தில் காட்ட முற்படுவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் ரணில் யாழ்ப்பாணம் சென்றபோது பலத்த வரவேற்பு காணப்பட்டது.
இச் சந்தர்ப்பத்தில் அமெரிக்க தென்னாசிய நாடுகளுக்கான உதவி ராஜாங்க அமைச்சர் கிறிஸ்ரினா ரோக்கா (Christina Rocca ) அவர்கள் ரணிலைச் சந்திக்க யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அப்போது அங்குள்ள நிலமைகளை அவதானித்த பின் புலிகள் குறித்து மிகவும் கடுமையான தொனியில் பேசினார்.
பயங்கரவாதத்தைக் கைவிடுவதோடு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட சகல அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், தமிழீழம் என்பது பொருத்தமற்றது, அடைய முடியாதது என்பதால் அதனைக் கைவிட வேண்டும்.
அவ்வாறு செய்தால் தடைகளை நீக்குவது தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னணியில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்த பாலசிங்கத்தினை மீண்டும் இலங்கைக்கு அழைக்க முடிவுகள் செய்யப்படுகின்றன.
தமிழ்நாடு சென்னையில் அவரைத் தங்க வைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மாலைதீவு வழியாக கடல் விமானத்தில் அவர் வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
இச் சந்தர்ப்பத்தில் தாய்லாந்து அரசு தனது நாட்டில் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புதல் அளித்திருந்தது.
2002 ம் ஆண்டு ஏப்ரல் 10ம் திகதி பிரபாகரன் முதன்முதலாக சுமார் 12 வருடங்களுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க தயாராகிறார்.
அரசாங்கம் மிக நீண்ட காலமாக யு9 பாதையை மூடியிருந்ததால் அங்குள்ள நிலமைகள் குறித்து மக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை.
பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விதம், அவர்களை நடத்திய விதம், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட விதம் குறித்து பல வர்ணனைகள் பின்னர் வெளியாகின.
மேற்குலக பெண் பத்திரிகையாளர் இது குறித்து தெரிவிக்கையில் பிரபாகரன் யாரையும் கவரவில்லை. பெரும் தொகையானோரைக் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்த போதும் அம் மாநாட்டினை பாலசிங்கமே நடத்தினார் என்கிறார்.
பிரபாகரன் சுருக்கமாக கூற பாலசிங்கம் விபரிப்பதாக அமைந்திருந்தது.
ஆனால் நிருபாமா சுப்ரமணியத்தின் பார்வை வேறுவிதமாக அமைந்திருந்தது.
“புலிகள் இனவாதிகள். முழு உலகமும் வன்னியில் இருப்பதாக உணர்ந்தார்கள். வெள்ளை இனப் பத்திரிகையாளர்கள் தரமான தங்குமிடங்களில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
இந்திய ஆண் பத்திரிகையாளர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். சுமார் 3 பெண் பத்திரிகையாளர்கள் பங்கர்களில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
மேற்குலக பத்திரிகையாளர்களையும், தென்னாசிய பத்திரிகையாளர்களையும் வேறுபடுத்தி நடத்திய விதம் புலிகளின் போக்கை உணர்த்தியதாக குறிப்பிடுகிறார்.
அத்துடன் அவர்கள் இந்திய ஆதரவை விட மேற்குலக ஆதரவையே எதிர்பார்க்கிறார்கள் என்பதும் புரிந்தது.
இச் சந்திப்பில் இந்தியப் பத்திரிகையாளர்களே அதிகளவில் இருந்தனர். ராஜிவ் காந்தியை ஏன் கொலை செய்தீர்கள்? எனக் கேட்டபோது அது முடிந்த கதை என பாலசிங்கம் தெரிவித்தார்.
நீங்கள் உங்களைத் தமிழீழத்தின் தலைவராக கருதுவீர்களாயின் இத்தனை கறுப்புக் கண்ணாடி அணிந்த அடியாட்கள் ஏன்? என இந்தியப் பத்திரிகையாளர் கேட்டபோது பலரும் அதிர்ந்து போனார்கள்?
கேள்விகளும், பிரபாகரனின் பதில்களும், பாலசிங்கத்தின் விளக்கங்களும் பேச்சுவார்த்தைகள் மூலமாக நிரந்தர தீர்வை எட்டுவது என்பது வெகு தூரத்தில் காணப்படுவதாக கலந்துகொண்ட தமிழ் தெரிந்த பத்திரிகையாளர்கள் சிலரின் அபிப்பிராயமாக இருந்தது.
“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்

இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து அரசு விரைவாகச் செயற்படத் தொடங்கியது.
பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாரானது. இவை தொடர்பான ஆரம்ப பேச்சுவார்த்தைகள் நோர்வேயின் தலைநாகரான ஒஸ்லோவில் இடம்பெற்றன.
14-08-2002 இல் இடம்பெற்ற இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரசு புலிகள் மீதான தடையை நீக்கியது.
இதன் பிரகாரம் உத்தியோக பேச்சுவார்த்தைகளை தாய்லாந்தில் 2002ம் ஆண்டு செப்டெம்பர் 12ம் திகதி முதல் 17ம் திகதி வரை நடத்த இரு சாராரும் உடன்பட்டனர்.
இப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் அமெரிக்க ஆதரவு அவசியம் என்பதை உணர்ந்த நோர்வே வெளிநாட்டமைச்சர் அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் ஆமிஸ்ரேஜ் அவர்களை அணுகினார்.
அவருக்கு இலங்கைப் பிரச்சனையில் தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. அத்துடன் பயங்கரவாதிகளுக்கும். அரசிற்குமிடையே எவ்வாறு பேச்சுவார்த்தைகளை நடத்துவது என்பதில் அனுபவங்களைப் பெறுவதில் ஆர்வம் இருந்தது.
இதே போன்று இப் பிரச்சனைகளின் நிலை குறித்து இந்திய தரப்பினருக்கு விளக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. அப்போதிருந்த வெளிநாட்டமைச்சரான ஜஸ்வன் சிங்கா விடுதலைப்புலிகளின் தற்தோதைய நிலை குறித்து சந்தேகங்களை தெரிவித்தார்.
அதாவது இப் பேச்சுவார்த்தைகள் நீண்ட காலம் எடுக்கலாம் என்ற அபிப்பிராயம் கொண்டிருந்தார்.
ராஜிவ் காந்தியின் படுகொலை இவ்வாறான கடுமையான அபிப்பிராயத்தை அரசியல்வாதிகள் மத்தியில் தோற்றுவித்திருந்தது.
ஆனாலும் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் புலிகளைப் பயிற்றுவித்தவர்கள், முக்கிய உறுப்பினர்களை நன்கு அறிந்தவர்கள் என்ற வகையில்.
சற்று வித்தியாசமான, பேச்சுவார்த்தைகளை ஊக்கப்படுத்துவதாக அவர்களின் அபிப்பிராயங்கள் அமைந்திருந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் நாடு தழுவிய ரீதியில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருந்தது. குறிப்பாக சிங்களப் பகுதிகளில் தெருத்தடைகள் எடுக்கப்பட்டு மாமூல் நிலைக்கு நிலமைகள் படிப்படியாக திரும்பிக்கொண்டிருந்தது.
இம் மாற்றங்கள் தொடருமானால் ரணில் தேர்தலில் பெரு வெற்றி பெறலாம் என்ற அபிப்பிராயம் காணப்பட்டது. இம் மாற்றங்களே அரசாங்கத்தைத் துரித பேச்சுவார்த்தைகளுக்குத் தள்ளியது.
ஆனாலும் புலிகள் தரப்பில் இம் முயற்சிகள் தொடர்ந்து இழுபட்டுச் செல்லவேண்டும் என்பதே அணுகுமுறையாக இருந்தது.
இவ்வாறான பின்னணில் தாய்லாந்தில் உள்ள கடற்படைத் தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் பல்வேறு சிக்கல்களுடன் ஆரம்பமாகியது.
அரச பிரதிநிதிகளுக்கும், புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஆசனங்கள் ஒதுக்குவது முதல் உரைகளை ஆரம்பிக்கும்போது பயன்படுத்தும் ராஜதந்திர வார்த்தைப் பிரயோகம் வரை பிரச்சனைகள் காணப்பட்டது.
வழமையாக ராஜதந்திரிகளை மாட்சிமை தங்கிய என விழித்து ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் எரிக் சோல்கெய்ம் தனது ஆரம்ப உரையில் பாலசிங்கத்தையும் அவ்வாறு விளித்து உரையைத் தொடங்கியது அங்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
அதே போன்று ஆசனங்களை ஒதுக்கும்போது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒழுங்கு செய்வது வழக்கம்.
நோர்வே பிரதிநிதிகள் புலிகளுக்கு அவ்வாறு ஆசனங்களை ஒதுக்கியபோது தாய்லாந்து அதனை நிராகரித்து இலங்கை அரசுப் பிரதிநிதிகளைக் கௌரவப்படுத்தும் விதத்தில் ஆசனங்களை அமைத்தது.
பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட உரைகளில் அரசின் போக்கும், புலிகளின் போக்கும் வித்தியாசமாகவே காணப்பட்டன.
அரசின் சார்பில் கலந்து கொண்ட ஜி எல் பீரிஸ் அவர்களின் உரையில் நாட்டின் ஐக்கியத்தையும், பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கைப் பேணும் வகையிலும் அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் விதத்தில் அரச நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படும் என்றார்.
ஆனால் பாலசிங்கம் அவர்களின் உரையில் மீள்குடியமர்த்தல், புனர்வாழ்வு வழங்குதல், தனியார் கட்டிடங்களில் ராணுவம் நிலைகொண்டிருப்பதைத் தடுத்து அவற்றை விடுவித்தல் என்பவற்றை வற்புறுத்துவதாக அமைந்திருந்தன.
இப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பதாக இடைக்கால நிர்வாக சபை அமைப்பது குறித்து வற்புறுத்தி வந்த புலிகள் அப் பேச்சுவார்த்தைகளின் போது அதனை வற்புறுத்தாது தவிர்த்தனர்.
இலங்கை அரசு தீர்வுகளுக்கான அணுகுமுறைகளை அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காணப்பட்டதால் புலிகளின் இடைக்கால நிர்வாக கோரிக்கை அதனை வற்புறுத்த இடமளிக்கவில்லை.
பதிலாக தற்காலிக இடைக்கால நிர்வாகம் அமைப்பதற்கான யோசனைகளை முன்வைத்த அரச தரப்பினர் காலப் போக்கில் அதுவே இடைக்கால நிர்வாகமாக மாற்றப்படலாம் என வெளியிட்டிருந்தனர்.
ஜி எல் பீரிஸ் அவர்களின் இந்த வாதங்களால் புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கை முன்வைக்க முடியாமல் போனது.
பேச்சுவார்த்தைகளின் பின்னர் பத்திரிகையாளர் மாநாடு இடம்பெற்றபோது பாலசிங்கம் வெளியிட்ட கருத்துக்கள் புலிகள் மத்தியிலும் சர்வதேச பார்வையாளர் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
விடுதலைப்புலிகள் அமைப்பு தனிநாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனவும், பதிலாக தமிழர் தாயகத்தில் கணிசமான சுயாட்சி அதிகாரம் கொண்ட சுய அரசு தேவை என்றார்.
தனது கருத்தை மேலும் விளக்கும் வகையில் “தனி நாடு என்பது தனிநாடு என்ற ஒன்று அல்ல” அது தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை அடையாளப்படுத்துகிறது.
நாம் சுய நிர்ணய உரிமை என்பது நாம் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் கணிசமான வகையிலான சுயாட்சி அல்லது சுய அரசு என்றார்.
பாலசிங்கத்தின் இவ் விளக்கம் அரசு தரப்பில் அதாவது ஜி எல் பீரிஸ் தனது விளக்கத்தில் தாமும் அவ் விளக்கத்தை ஏற்பதாக கூறி, நாம் அதற்கேற்ற வகையிலான ஏற்பாடுகளை செய்தால் அந்த அபிலாஷைகளை எட்ட முடியும் என்றார்.
உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நாம் பயணிக்கத் தயார்: மாவீரர் தின உரையில் பிரபாகரன்.
தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது.
இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இரு தரப்பிலிருந்தும் இருவர் நியமிக்கப்பட்டு பேச்சவார்த்தைகளின் பெறுபேறுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளுக்கான திட்டமிடுதலை மேற்கொள்வதாக இணக்கம் காணப்பட்டது.
இவற்றிற்கு மத்தியில் ரணில் அரசு அரசியல் அமைப்பில் 19வது திருத்த்தினைக் கொண்டு வர எண்ணியது. இத் திருத்தம் ஜனாதிபதியின் சில அதிகாரங்களை சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு வழங்குவதாக உள்ளது.
இவ் அரசியல் அமைப்பு 19வது திருத்தம் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு நிலையான அரசு அவசியம் என்பதால் கொண்டு வரப்படுவதாக ரணில் அரசு தெரிவித்தது.
தற்போதைய அரசியல் அமைப்பு தேர்தல் முடிவடைந்த ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது.
19வது திருத்தம் ஜனாதிபதிக்கிருந்த அந்த அதிகாரத்தைப் பறிக்கிறது. இதனால் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை அறிவிக்கும் அதிகாரத்தை இழக்கிறார்.
இது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவிற்கு பிரச்சனையான அம்சமாக இருந்தது.
ஏனெனில் அப்போதைய தருணத்தில் அவர் தேர்தலை நடத்தினால் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்பட்டதால் அவ்வாறு தனது அதிகாரம் பறிக்கப்படுவதை அவர் ஏற்கவில்லை.
இத் திருத்தத்தில் இன்னொரு அம்சம் என்னவெனில் பாராளுமன்றத்தில் மசோதா சமர்ப்பிக்கப்படும் போது உறுப்பினர் தனது மனச் சாட்சிக்கு தகுந்தபடி வாக்களிக்க முடியும்.
இது கட்சித் தாவலை ஊக்கப்படுத்துவதாக காணப்பட்டது. இதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறலாம் என ரணில் கருதினார்.
ஆனால் மனச்சாட்சிப்படி வாக்களிக்கும் உரிமை என்பது அரசியல் அமைப்பிற்கு விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இறுதியில் 19வது திருத்தம் நிறைவேறாமல் போனது.
இவ் இடைக்காலத்தில் கிழக்கில் பாதுகாப்பு நிலமை மோசமான நிலைக்குச் சென்றது.
திருகோணமலைப் பகுதியிலுள்ள காஞ்சூரன் என்ற இடத்தில் காணப்பட்ட அதிரடிப்படை முகாமிற்கு முன்னால் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஓஸ்லோ ஒப்பந்தத்தின் பிரகாரம் அம் முகாம் அகற்றப்பட வேண்டுமென புலிகள் வற்புறுத்தினர்.
ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறி ராணுவத்தின் துப்பாக்கிப் பிரயோகத்தினால் பத்துப்பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
இப் படைத்தளம் அங்கு இருப்பது முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பானது என முஸ்லீம் காங்கிரஸ் வற்புறுத்தி வந்தது.
இதன் காரணமாக முஸ்லீம் மக்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் காங்கிரசிற்கள் பெரும் குழப்ப நிலையை ஏற்படத்தியது.
காங்கிரசிற்குள் ஒரு பிரிவாக இயங்கிய ஏ ரி எம் அத்தாவுல்லா தலைமையிலான குழவினர் முஸ்லிம்களுக்கான தென் கிழக்கு அலகு வழங்கப்படாத வரை இறுதித் தீர்வு சாத்தியமில்லை என முழங்கத் தொடங்கினார்.
இச் சம்பவங்களின் பின்னணியில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கு இரு சாராரும் தயாராகினர்.
இதற்காக வன்னி வந்திருந்த பாலசிங்கம் நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் நோர்வே தரப்பினருடன் ஈடுபட்டார்.
முதலாவது பேச்சுவார்த்தைகளின் போது பாலசிங்கம் இடைக்கால நிர்வாகத்தினைக் கோரியிருந்தார். ஆனால் அதனை பீரிஸ் அரசியல் அமைப்பிற்கு வெளியில் தம்மால் செல்ல முடியாது எனத் தெரிவித்து அதனை நிராகரித்து இணைந்து செயற்படுவதற்கான குழு அமைக்க ஆலோசனை தெரிவித்திருந்தார்.
இப் போக்கு பிரபாகரனுக்கு அதிருப்தியாக இருந்தது.
இதனால் பேச்சுவார்த்தைகளில் மக்களுக்கான பொருளாதார வாழ்வை உறுதி செய்த பின்னரே அரசியல் பேச்சுவார்த்தைகளைத் தொடரலாம் என்ற சிந்தனையோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டவைகள் போதுமான அளவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என பிரபாகரன் முன்வைத்தார்.
இதற்கு அரசிற்குள் அதாவது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கிடையே காணப்படும் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அவை சமாதானத்திற்கு அச்சறுத்தலாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இரண்டாவது சுற்றில் சுமார் 70000 ஆயிரம் இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்தும் பிரச்சனைகளே பேசப்படுவதாக இருந்தன.
அடுத்து அதி உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குவதும் ஓர் அம்சமாக இருந்தது.
தாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் மேலும் இருவர் இரு தரப்பிலும் இணைக்கப்பட்டனர். அரச தரப்பில் மேஜர் ஜெனரல் சாந்தா கொட்டேகொட, உதவி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ ஆகியோரும் புலிகள் தரப்பில் கருணா, தமிழ்ச் செல்வன் என்போராகும்.
இப் பேச்சுவார்த்தைகளில் முதலாவது அம்சமாக சிக்கலாகிச் செல்லும் கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலமைகள் குறித்து பேசப்பட்டது.
கிழக்கு மாகாண பாதுகாப்பு நிலமைகள் குறித்து தம்மாலான முயற்சிகளைத் தாம் எடுப்பதாகக் கூறிய கருணா அங்குள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு பொறுப்பாளர்கள் தாம் மட்டும் அல்ல எனவும் அங்குள்ள முஸ்லீம்களும் காரணம் என்றார்.
எனவே அங்கும் போர் நிறுத்த கண்காணிப்பாளர்களை நிறுத்துவது எனவும், மேலும் சிக்கல்களைத் தவிர்க்க முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் கக்கிம் மற்றும் கருணா ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் நெருக்கமாக செயற்பட வேண்டுமெனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டு இணைப்புக் குழு அமைத்தல், அதி உயர் பாதுகாப்பு வலையங்களை அகற்றி அகதிகளை மீளக் குடியமர்த்தல் என்பன பற்றிப் பேசியபோது அதனால் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
அரச தரப்பினரின் வாதம் அரசியல் அமைப்பிற்கு அமைந்த பொறிமுறைகளையே வற்புறுத்தினர். இதனை புலிகள் ஏற்கவில்லை. கூட்டு இணைப்புக் குழு அமைத்தல் என்பதும் பிரதமர் காரியாலயத்தால் அமைக்கப்படும் செயலகத்தின் மேற்பார்வையில் அமையவேண்டுமென கூறப்பட்டது.
இலங்கை அரசியல் அமைப்பைக் காரணம் காட்டி பிரதமர் செயலகத்தால் வழி நடத்தப்படுவதை புலிகள் ஏற்கவில்லை.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கள் இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைப்பதில் குறியாக இருந்தனர்.
கிழக்கு மாகாணத்தில் பொலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், தமக்கென தனியான நீதிச் சட்டங்கள் என தொடர்ந்தனர். இவை அரச மட்டத்தில் புதிய பிரச்சனையாக மாறியது.
புலிகள் இம் மாற்றங்களை சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படுவதாக கூறிய போதிலும் ஓர் நிழல் அரசுக்கான நடைமுறைகளாக அரசு நோக்கியது.
இவை ஒரு புறம் தொடர அபிவிருத்திக்கான பணம் திரட்டுவதற்காக அன்பளிப்பு வழங்கும் நாடுகளின் மாநாட்டினை நோர்வே அரசு ஒஸ்லோவில் கூட்டியது.
இதில் சமார் 100 பிரதிநிதிகள் அவற்றில் 37 நாடுகளைச் சார்ந்த அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் தமது ஆரம்ப உரைகளை பிரதமர் ரணில், நோர்வே வெளிநாட்டமைச்சர் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந் நிகழ்வில் அமெரிக்க உதவி ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆமிற்றேஜ் அவர்கள் ஆற்றிய உரை பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. விடுதலைப்புலிகளுக்கு எச்சரிக்கையாகவும் அமைந்தது.
US Deputy Secretary of State, Richard L. Armitag
புலிகள் வன்முறையையும், பிரிவினையையும் கைவிடுவதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும் அதுவே சர்வதேச சமூகத்தை நம்பச் செய்யும் என்றார். இந்த உரை தொடர்பாக பாலசிங்கம் எதனையும் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை.
பின்னர் தனது எழத்துக்களில் அமெரிக்க அரசியல் வன்முறை தொடர்பாக தவறான விளக்கங்களை வைத்திருப்பதாக எழுதியிருந்தார். இருப்பினும் இவ் நன்கொடை வழங்கும் மாநாட்டில் 70மில்லியன் அமெரிக்க டொலர் பணம் புனர்வாழ்வு, புனரமைப்பு என்பவற்றிற்கென சேகரிக்கப்பட்டது.
இப் பணம் வடக்கு- கிழக்கு மீளமைப்பு நிதியம் என அழைக்கப்பட்டது.
இம் மாநாடு ஒரளவு வெற்றியளித்ததால் அரச மற்றும் புலிகள் தரப்பில் பெரும் உற்சாகம் காணப்பட்டது.
இதனால் பாலசிங்கம், ரணில் ஆகியோர் அன்றைய தினமே அடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசத் தொடங்கினர்.
இவை அவ் வருட மாவீரர் தின உரையில் வெளிப்பட்டன. பொதுவாகவே பலராலும் இவ் உரை எவ்வாறு அமையப் போகிறது? என எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் அரச- புலிகள் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் இவ் உரை முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்பட்டது. இவ் உரையில் பாலசிங்கம் தமிழீழம் குறித்து தெரிவித்த கருத்துக்களை மேலும் விளக்குவதாக அமைந்திருந்தது.
தமிழ் மக்களின் வரலாற்றுப் பாரம்பரிய தாயகத்தில் சுதந்திரத்துடனும், கௌரவத்துடனும் சுயாட்சி அமைப்பிற்குள் வாழ விரும்புகிறார்கள். இதுவே எமது மக்களின் அரசியல் அபிலாஷையாகும்.
எமது மக்களின் அரசியல் அபிலாஷை என்பதன் அர்த்தம் சுயநிர்ணய உரிமையாகும். இவ் அடிப்படையில் விடுதலைப்புலிகள் இயக்கம் நியாயமான சுயாட்சியுடன் கூடிய சுய அரசு ஒன்றை அமைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் அவை இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் நியாயமான விதத்தில் அணுக தயாராக உள்ளோம்.
இக் கோரிக்கை நிராகரிக்கப்படுமானால் பிரிந்து தனி அரசு அமைப்பததைத் தவிர வேறு வழி இல்லை என அவ் உரையில் பிரபாகரன் கூறியிருந்தார்.