தமிழ் முஸ்லீம் பகுதியில் புத்தர் சிலை எதற்கு? – எஸ்.றிபான்.

380

 

putharநல்லாட்சி அரசாங்கத்திலும் பௌத்த இனவாத அமைப்புக்களும், தேரர்களும் தமது தீவிரவாதஇனவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனை காணக் கூடியதாக இருக்கின்றன. கடந்த ஆட்சியில் பௌத்த இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்தே தமது இனவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். அதே போன்றுதான் இப்போதும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளை மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கம் பாராமுகமாக இருந்ததைப் போலவே இன்றைய நல்லாட்சி அரசாங்கமும் இருக்கின்றது.

மஹிந்தராஜபக்ஷவின் அரசாங்கத்தின் போது பொதுபல சேன ராவண, சிங்கலே போன்ற பௌத்த இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே குற்றங்களை சாட்டி வம்புக்கு இழுத்துக் கொண்டன. முஸ்லிம்கள் மிகவும் பொறுமையாகவே இருந்தார்கள். அன்றைய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் இன்றைய நல்லாட்சியிலும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளார்கள். கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்த இந்த அமைச்சர்கள், முஸ்லிம்கள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்லிக் கொண்டே மஹிந்தராஜபக்ஷவின் கால்களில் விழுந்து கிடந்தார்கள். எட்டி உதைத்தாலும்; உங்களை விட்டுப் பிரியமாட்டோம் என்று கிடந்தார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. காணிகள் பறிக்கப்பட்டன. வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. தொழுகைகள் தடுக்கப்பட்டன. இவ்வேளைகளில் எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரும் அரசாங்கத்தை கண்டிக்கவில்லை. அரசாங்கத்திலிருந்து விலகவில்லை. பொலிஸில் முறைப்பாடுகளை செய்யவில்லை.

எதிர்க்கட்சி அரசியல்
இன்றைய ஆட்சியிலும் அரசாங்கத்தில் முஸ்லிம்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றிருக்கின்றார்கள். பௌத்த இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கைகளை விடுக்கின்றார்கள். ஆனால், பொலிஸில் முறைப்பாடுகளைச் செய்யவில்லை. பிரச்சினைகள் நடைபெறுகின்ற இடங்களுக்கு சென்று பார்வையிடுவதனாலோ, பொலிஸ் மாஅதிபருக்கு கையடக்க பேசி ஊடாக அறிவிப்பதனாலோ, தமது பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைப்பதனாலோ பிரச்சினைகள் தீராது. முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வு அமைச்சர் பதவிகளிலில்லை என்பதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது கால வரைக்கும் முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட அமைச்சர் பதவிகளினால் முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட உரிமைகள் எவை?

முதலில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிக் காய்ச்சலிருந்து விடுபட வேண்டும். முஸ்லிம்களின் காணிகளையும், ஏனையவற்றையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்க வேண்டும். இதற்கு முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி அரசியலுக்கு செல்லுதல் வேண்டும். அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு ஆதரவும், ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட வேண்டும். இதற்கு மாறாக அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு நோகாமலும், முஸ்லிம்களை சமாளிக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிடுவதால் பௌத்த இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது. அரசாங்கம் முஸ்லிம்களை எடுப்பார் கைப்பிள்ளையாக கணித்துள்ளது. முஸ்லிம் அமைச்சர்களும், கட்சிகளும் இதற்கேற்ற வகையிலேயே தமது அனைத்து நடவடிக்கைகளையும் வைத்துள்ளார்கள். ஒரு சமூகம் தம்மை சீரமைத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது சோம்பிப் போய் இருக்குமாயின் அந்த சமூகத்தின் தலைவர்களாக சமூக அக்கரையற்றவர்களும், நாணமில்லாதவர்களும் வருவதனை தவிர்க்க முடியாது. அந்நிலைதான் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சி
கடந்த அரசாங்கத்தில் அம்பாரை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம்களின் எல்லைக் கிராமங்கள் பௌத்த இனவாதிகளினால் திட்டமிடப்பட்ட வகையிலும், பலாத்காரமாகவும் பறிக்கப்பட்டன. ஒலுவில் ஆலிம் சேனையில் யானை வேலி என்றும், வனஇலாகாவுக்குரிய காணிகள் என்றும், இராணுவ முகாம் அமைக்கவும் என முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்பட்டன. இதன்போது முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் கொழும்பில் ஆளுந்தரப்பினர்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியில் முஸ்லிம் தலைவராகவும், ஜனாதிபதி மாளிகையில் அடிமைகளாகவும் இருந்தார்கள். இதனால் முஸ்லிம்களின் அரசியல் வேசதாரிகளினால் நிரப்பட்டிருந்தது. இன்றும் அவ்வாறே உள்ளது. பதவி ஆசை கொண்டவர்களும், கோழைகளும், பெண்ணாசை கொண்டவர்களும், மது பழக்கம் உள்ளவர்களும், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாதவர்களும், ஊழல் செய்கின்றவர்களும், இஸ்லாத்தின் மீதும், சமூகத்தின் மீதும் பற்றுக் கொண்டிராதவர்களும் முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்க முடியாது. சமூகமானது அத்தகைவர்களுக்கு தலைவர் பதவிகளை; வழங்கிவிட்டு தலை நிமிர்ந்து வாழ வேண்டுமென்று எதிர்பார்ப்பது குரங்கின் கையில் பூமாலையை கொடுத்ததற்கு சமமாகும்.

புத்தர் சிலை
கடந்த 29.10.2016 சனிக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தின் கீழ் வரும் மாணிக்கமடு எனும் கிராமத்தில் உள்ள மாயக்கல்லிமலைக்கு திடிரென்று வருகை பௌத்த தேரர்களும், நூற்றுக் கணக்கான பௌத்த சிங்களவர்களும் புத்தர் சிலை ஒன்றினை அம்மலையில் வைத்துள்ளார்கள். குறிப்பிட்ட மலையடிவாரத்தில் அதிகமான வாகனங்களும் காணப்பட்டுள்ளன. திடிரென்று முளைத்த புத்தர் சிலையால் அப்பிரசேத்தில் வாழ்ந்து வரும் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளார்கள்.

மாயக்கல்லிமலை தொல்பொருள் திணைக்களத்திற்குரியதாகும். இதனை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது பௌத்த நாடாகும். பௌத்த மதத்தை பரப்புவதற்கு நாட்டின் எந்தப் பாகத்திற்கும் பௌத்தர்களினால் செல்ல முடியும். நாங்கள் இங்கு பொலிஸாரின் அனுமதியுடனே வருகை தந்துள்ளோம் என்று அவ்விடத்திற்கு வருகை தந்த தேரர் ஒருவர் அங்கு குழுமி நின்ற தமிழ், முஸ்லிம்களுக்கு தெரிவித்துள்ளார். புத்தர் சிலை வைக்கப்பட்ட போது பொலிஸாரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேரரின் இக்கருத்தினையடுத்து பொலிஸாரின் பாதுகாப்புடன்தான் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதென்று பொது மக்கள் பேசிக் கொள்கின்றார்கள். இது பற்றி இப்பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள தமன பொலிஸ் பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறி தாங்கள் சிலை வைக்கச் சென்றவர்களுக்கு ஆதரவாகச் செல்லவில்லை. குறிப்பிட்ட இடத்தில் சிலை வைக்கக் கூடாதென்ற நீதிமன்றத்தின் உத்தரவு ஒன்றினை வழங்குவதற்காகவே சென்றோம் என தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட உத்தரவினை சிலை வைப்பதற்கு முன்னமே அங்கு வருகை தந்திருந்த தேரர்களிடம் வழங்கி விட்டோம். இந்த சிலை வைப்பானது சட்டத்திற்கு முரணானதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி நிமல் சந்திரசிறியின் கருத்துப்படி புத்தர் சிலையை வைத்தர்கள் நீதிமன்றத்தின் உத்தரவினை மதிக்காது, சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டுள்ளார்கள். மாயக்கல்லிமலை தொல்பொருள் திணைக்களத்திற்குரியது. ஆதலால், இங்கு யாரும் செல்ல முடியாது. புத்தர் சிலை வைப்பதற்கும் கூட செல்ல முடியாது. அவ்வாறிருக்கையில் முஸ்லிம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கட்டுகதையாகும்.

திட்டமிட்ட நடவடிக்கை
மாணிக்கமடுவில் சுமார் 150இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. இக்கிராமம் தீகவாபி விகாரைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளது. இங்கு புத்தர் சிலையை வைத்து இக்கிராமத்தை சூழவுள்ள வரிப்பத்தான்சேனை, ஜபல்நகர், குடுவில், நல்ல தண்ணிமலை, இறக்காமம் ஆகிய முஸ்லிம் கிராமங்களில் பௌத்த சிங்களவர்களை குடியேற்றுவதற்குரிய திட்டமாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. முதலில் புத்தர் சிலையை வைப்பார்கள். பின்னர் புனித பூமி என்று பிரகடனப்படுத்துவார்கள். புனித பூமியின் எல்லையை விரிவாக்குவார்கள். அந்த எல்லைக்குள் வரும் முஸ்லிம்களை வெளியேற்றுவார்கள். சிறிது காலம் சென்றதன் பின் பௌத்த சிங்களவர்களை குடியேற்றுவார்கள். இதுதான் கடந்த கால வரலாறாகும்.

தீகவாபியின் நுளைவாசலாக அமைந்துள்ள வரிப்பத்தான்சேனையில் பௌத்த சிங்களவர்களை குடியேற்றுவதற்கு கடந்த காலங்களில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவை கைகூடவில்லை. இதனால்தான் மாயகல்லிமலையை குறி வைத்துள்ளார்கள். தீகவாபிக்கு செல்லும் பாதையின் இரு மருங்கிலும் பௌத்தர்களை குடியேற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அம்பாரை வீதியின் பக்கமிருந்து தீகபாவிக்கு செல்லும் பாதையானது வரிப்பத்தான்சேனை மற்றும் மாணிக்கமடு கிராமங்களின் ஊடகவே அமைந்துள்ளது. இப்பாதையில் தீகவாபியை அடையும் வரை எந்தவொரு பௌத்த அடையாளங்களும் கிடையாது. மேலும், மாணிக்கமடுவில் சிங்களவர்கள் எவருமில்லை. இத்தரவுகளின் அடிப்படையில் பார்க்கும் போது சட்டத்தை கையில் எடுத்து நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கானதொரு முயற்சியாகவே இதுவுள்ளது.

இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக அதிகாரத்தில் உள்ளவர்களின் மறைகரங்கள் பின்னணியில் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் அம்பாரை தொகுதியில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமான சிங்கள ஆதரவாளர்கள் வருகை தந்திருந்தாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள மாயக்கல்லிமலை மாணிக்கமடு தமிழ் கிராமத்தில் அமைந்திருந்தாலும், கடந்தகால அனுபவங்களின் படி தமிழர்களுக்கு மாத்திரமின்றி முஸ்லிம்களுக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவே பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். முஸ்லிம் பிருதேசங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சம் மாணிக்கமடுவை சூழவுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ளன. ஆதலால், முஸ்லிம் கட்சிகளும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபையும் இதில் தலையீடுகளை செய்தல் வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள்
முஸ்லிம்களுக்கு என்னதான் அநியாயம் நடந்தாலும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு சூடு, சுரணை ஏற்படுவதில்லை. வெறும் அறிக்கையிலேயே காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அறிக்கைகளில் நம்பிக்கை கொண்டுதான் முஸ்லிம் சமூகம் தன்னிலையை இழந்து கொண்டிருக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சிலை வைக்கப்பட்ட தினமே மாணிக்கமடுவிற்கு சென்றிருந்தார். பொறுமையுடனும், பக்குவமாகவும் இருக்குமாறும் கேட்டுள்ளார். பொது மக்கள் இவ்வாறுதான் நடக்க வேண்டும். ஆனால், அரசியல் தலைவர்கள் விவேகமாகவும், வேகமாகவும் செயற்பட வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை இந்த இரண்டையும் அவர்களின் செயற்பாடுகளில் காண முடியாது. அவர்கள் ஆட்சியாளர்களின் அடிமைகள் போல் இருக்கின்றார்கள்.

இதே வேளை, ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கு எதிராக அறிக்கைவிடுத்துள்ளார்கள். ஆனால், அம்பாரை மாவட்டத்தில் உள்ள மு.காவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பத்தி எழுதும் வரைக்கும் மாணிக்கமடு சம்பவம் பற்றி வாய் திறக்கவில்லை. அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் முஸ்லிம் சமூகம் சார்ந்த பல விடயங்களில் மௌனமாகவே இருந்து வருகின்றார்கள். இவர்களுக்கு வாக்களித்த மக்கள் இம்முறையும் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களும், அமைச்சர்களும் கூட இது விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றார்கள். கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நசீர் அஹமட் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் முன்னெடுக்;கப்படுகின்றதா என்று கேட்டுள்ளார். அதே வேளை, தமிழ் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழும் இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயமாகும். கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் மறைமுக சக்திகள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை சீர் குலைக்க முற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தராஜபக்ஷவுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த மு.காவும், கிழக்கு மாகாண சபை முதலமைச்சரும் இன்றைய அரசாங்கத்துடன் அதே நெருக்கத்தை பேணிக் கொள்வதற்காக அரசாங்கத்தை கடிந்து கொள்ளாது கடந்த ஆட்சியாளர்களின் மீதே குற்றத்தை சுமத்துகின்றார். முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை யார் செய்தாலும் அதனை தடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இன்றைய அரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் கடந்த அரசாங்கத்தைப் போன்றே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால், முஸ்லிம்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மஹிந்தராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிப்பதன் மூலமாகவே இல்லாமல் செய்யலாமென்றுதான் முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள். ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னரும் பௌத்த இனவாதிகளினால் முஸ்லிம்கள் குறி வைக்கப்படுகின்றார்கள். இதனால், இன்றைய அரசாங்கம் முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் பௌத்த இனவாதிகளை கட்டுப்படுத்துவதற்குரிய அழுத்தங்களை அரசாங்கத்திற்கு கொடுத்து தீர்வுகளை பெற வேண்டும். ஆனால், முஸ்லிம்கள் மக்கள் பிரதிநிதிகளுக்கும், கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் நெஞ்சில் உரமில்லை.

முஸ்லிம்களிடமிருந்து பறிபோன காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முடியாத முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் மாணிக்கமடு மாயக்கல்லிமலையில வைக்கப்பட்ட புத்தர் சிலை மூலமாக முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுப்பார் என்று சொல்ல முடியாது. சாதிப்பதற்கு சக்தியற்றவர்களிடம் சாதனையை எதிர் பார்க்க முடியாது. ஒரு சமூகத்தின் அரசியலை கையில் எடுத்துக் கொண்டவர்கள் கொமிசன் ஏஜன்டுகளாக மாறினால் அவர்களுக்கு பதிலாக புதிய தலைவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதுதான் புத்திசாலிகளின் வழி முறையாகும். இதனைச் செய்யாது. அவரை விட்டால் யார் இருக்கின்றார் என்று சொல்லிக் கொள்வது முஸ்லிம் சமூகத்தை மேலும் பலவீனமடையச் செய்யும் என்பதனை புரிந்து கொள்ளல் வேண்டும்.

கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்கின்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், மு.காவும், ஐ.தே.கவும் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. ஆனால், கிழக்கு மாகாண சபை புதிய அரசியல் யாப்பு எவ்வாறு இருக்க வேண்டுமென்று ஒரு பிரேரணையைக் கூட நிறைவேற்றவில்லை. வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு விடயத்தில் கிழக்கு மாகாண சபையின் நிலைப்பாடு என்னவென்று தெரிவிக்கப்படவில்லை. கடந்த வாரம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கும், அடக்கு முறைக்கும் உள்ளாகி உள்ள பைத்துஸ் முகத்திஸ் முஸ்லிம்களுக்கு மாத்திரமே உரித்துடையதென்ற பிரேரணை கொண்டு வரப்பட்ட போது இலங்கை அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசாங்கத்தின் இக்கொள்கையை கண்டித்து கிழக்கு மாகாண சபையில் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பிரேரணை ஒன்றினை கொண்டு வருவதற்கு 17.10.2016 அன்று முன் அறிவித்தல் செய்துள்ளார். இப்பிரேரணை 27.10.2016 அன்று கூடிய மாகாண சபை அமர்வில் எடுக்கப்படவில்லை. இதற்கு முதலமைச்சர்தான் காரணமென்று தெரிவிக்கப்படுகின்றன.

இதே வேளை, மதிய உணவிற்கு பின்னர் பிரேரணையை எடுக்க இருந்தாகவும், போதிய கோரமின்மையால் எடுக்கப்படவில்லை என ஆரிப் சம்சுதீன் தெரிவித்துள்ளார். இதிலுள்ள உண்மை ஆரிப் சம்சுதீனின் மனட்சாட்சிக்கு தெரியும். இதே வேளை, அப்பிரேரணையை கொண்டு வருவதற்கு கோரமில்லை என்றால் மாகாண சபையின் அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்கே சென்றார்கள். கோரமில்லை என்பதனை திட்டமிடப்பட்டதொரு பொய்யாகவே கருத வேண்டியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதற்கு கிழக்கு மாகாண சபை தயாரில்லை.

கிழக்கு மாகாண சபைக்கு கொண்டு போவதற்கு இருந்த பிரேரணை பற்றி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கேட்ட போது அது தனக்குத் தெரியாதென்று கூறியுள்ளார். தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொண்டு செல்லும் பிரேரணை தலைவருக்கு தெரியாதென்றால் கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் இஸ்டம் போல் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

கிழககுக மாகாண சபையை பொறுத்த வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மு.காவினர் போன்று வேசம் போட்டுள்ளார்கள் என்றுதான் கூறுதல் பொருத்தம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள வடமாகாண சபையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அக்கட்சியின் பிரதிநிதிகளினால் மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இந்நிலையை கிழக்கு மாகாண சபையில் காண முடியாதுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேசம் போடவில்லை என்றிருந்தால் மு.காவினரை பகைத்துக் கொள்ளக் கூடாது. புதிய அரசியல் யாப்பில் தாம் நினைத்தவைகளை அடைந்து கொள்வதற்கு மு.கா அவசியமாகும் என்பதால் அக்கட்சியின் விருப்பு, வெறுப்புக்கேற்ப தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றதா எனவும் எண்ணத் தோன்றுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த இரண்டு மாகாண சபைகளிலும் இருவேறுபட்ட முகங்களை காட்டிக் கொண்டிருப்பது மு.காவை தங்களது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதற்காகவா என்று எண்ணவும் தோன்றுகின்றது. இவ்வாறுள்ள கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தமிழர்களையும், முஸ்லிம்களையும் திருப்திப்படுத்துவதாக அமையும் என்று எதிர் பார்க்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தை நோக்கி பல திசைகளிலிருந்தும் தீய அம்புகள் வந்து கொண்டிருக்கின்ற சூழலில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தங்களிடம் காணப்படும் சுயநலன்களை ஒதுக்கி வைக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு பதிலாக வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியேயும் தமது தேவைக்கு ஏற்ப பிளவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள். பிளவுகளினாலும், பிரித்தாளும் சாணக்கியத்தாலும் தமது தலைமையை பாதுகாத்துக் கொள்வதற்கு முஸ்லிம் கட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளும்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகளை யாரும் கருத்திற் கொள்ளாதிருப்பதற்கும், முஸ்லிம்களை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வதற்கும் காரணமாகும். நல்ல தலைவர் இல்லாத சமூகம் மாலுமியற்ற கப்பலுக்கு ஒப்பாகும்.
நன்றி:விடிவெள்ளி

SHARE