இலங்கை விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்வார்.

432
உலகிலேயே முதன் முதலில் தமிழர் பிரதேசங்களுக்கு பாப்பரசர் பிரன்ஸிஸ் செல்வதால் முக்கியம் பெறுகிறார் என வத்திக்கானைத் தளமாகக்கொண்டுள்ள ‘இன்சைடர்’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 26 வருடங்களாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் போர் இடம்பெற்ற பகுதியை அவர் தனது பயணத்துக்கான இடமாகத் தெரிவு செய்திருக்கிறார் இதனால் அவர் முக்கியம் பெறுகிறார் எனவும் தெரிவித்துள்ளது.

அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ்.

தனது இலங்கை விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் மடு தேவாலயத்துக்கும் விஜயம் செய்வார். இலங்கையில் 26 வருடங்களாக தமிழ் மக்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற போர் பேரழிவை ஏற்படுத்தியிருந்து ஆழமான காயங்களை விட்டுச் சென்றுள்ளது.

அப்படிப்பட்ட, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடம் ஒன்றுக்கு செல்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் விஜயம் சில போக்குவரத்து பிரச்சினைகளை உள்ளடக்கியது, மடு கொழும்பிலிருந்து 260 கிலோமீற்றர் தொலைவிலுள்ளது.

எனினும் நல்லிணக்கத்தை மையப்படுத்திய இந்த விஜயத்தின் போது தமிழ் மக்களைப் புறக்கணிக்கக் கூடாது என்று அவர் கருதுகிறார்.

400 வருடங்களுக்கு மேற்பட்ட பழைமை வாய்ந்த மடுத் தேவாலயம் நல்லிணக்கத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.

ஆயுத மோதல்களின் போது இந்தத் தேவாலயம் பாதுகாப்பு வலயமாகப் பாதுகாக்கப்பட்டது. இப்போதும் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற பேதம் இன்றி அனைவரும் ஒன்றுகூடும் இடமாகவும் அது உள்ளது.

இதனால் சமூக, அரசியல், மத ஒற்றுமை குறித்த செய்தியை சொல்வதற்கான மிகப்பொருத்தமான இடமாக மடுத்திருத்தலமே அமைந்து காணப்படுகிறது.

மடுதேவாலயத்திற்கான பரிசுத்த பாப்பரசரின் விஜயம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாகவிருக்கும் என உலக தமிழர் பேரவையின் தலைவர் எஸ்.ஜே. இமானுவேல் அடிகளார் தெரிவிக்கிறார்.

தமிழ் மக்கள் இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பு ஆட்சியின் கீழேயே வாழ்கின்றனர். அவர்கள் இன்னமும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், ஒடுக்குமுறை போன்ற மனித உரிமை மீறல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலாயங்கள் சிங்களவர், தமிழர் என்ற இரு சமூகத்தினரையும் அரவணைக்கின்றன. இதன் காரணமாக ஓர் ஐக்கியம் காணப்படுகின்ற போதிலும் யுத்த அனுபவங்கள் அந்த சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளன.

பரிசுத்த பாப்பரசரின் விஜயம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் என அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE