நிதர்சன உண்மையை மக்கள் உணராத விடத்து இலக்கற்ற சுயஇலாப அரசியலை தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்-சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா

472

தமிழ் மக்கள் அனைவரும் தங்களை யார் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து

கொள்ளவேண்டும். என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா கண்டனம் தெரிவித்துள்ளார்.

uya

தமிழ் கட்சிகளின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக சிறிரெலோ கட்சி விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அரசியலுக்கான இரட்டை வேடம் தமிழ் மக்களிற்கான நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் அசௌகரியத்தையும் கால நீடிப்பையும் உருவாக்கியுள்ளது.

இறுதியுத்தம் முற்றுப்பெற்ற பின்னர் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களிற்கு அப்பால் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளிற்கும், அபிவிருத்தியை முன்னிறுத்தும் கட்சிகளிற்கும் தமது தேவையை அடிப்படையாக கொண்டு வாக்களித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு தமிழ் தேசிய உணர்வினை தமிழ் மக்களிடம் இருந்து பேரம் பேசி தனித்தாயகத்தினை அல்லது அதிகாரம் மிக்க தனித்தமிழ் ஆட்சிமுறையலகினை பெற்றுத்தருவதாகவும் அது இயலாமல் போகின்ற வேளை சர்வதேச சமூகத்திடமிருந்து நீதி பெற்றுத்தருவதாகவும் கூறி 2009 ம் ஆண்டில் இருந்து பின்னர் வந்த ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரச்சாரங்களில் ஈடுபட்டு தமது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டனர்.

இதன் மூலம் வடமாகாணசபை உள்ளிட்ட நகரசபை, பிரதேசசபை என உள்ளுர் அபிவிருத்திக் கட்டமைப்புக்களில் தமது பெயரளவிலான ஆட்சியை அமைத்துக்கொண்டனர்.

இங்கு நாம் பெயரளவிலான என்பதை அறிமுகப்படுத்துவதன் நோக்கம் சுயமாக இயங்கக் கூடிய உள்ளுர் நிதி மூலங்களை பயன்படுத்தி நிர்வகிக்கக் கூடிய பிரதேசசபைகளில் குறைந்தபட்சம் வரவுசெலவு திட்டங்களை கூட வெற்றிபெற வைப்பதற்கு ஆளும் கட்சியாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளே கூட பலத்த இழுபறிகள் மத்தியில், தலைவர் பதவியிழப்பு போன்ற காரசாரமான சம்பவங்களின் பின்னரே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையொன்று புதைந்துள்ளது. இங்கு அவர்களது பிரச்சினை வரவுசெலவுதிட்டமல்ல யார் அந்த வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வந்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் உள்ள போட்டித் தன்மையாகும்.

இவ்வாறான பதவியை நோக்காக கொண்ட நேர்மையற்ற பிற்போக்குத்தனமான சிந்தனை பிரதேசசபைகளில் மட்டுமன்றி தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை காணப்படுகின்றது.

இதனால் தான் தேர்தல் வருகின்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் தேசியம் மற்றும் தனிநாடு பற்றி மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பி இனவாதம் பேசுவதும் பதவிகள் கிடைத்தவுடன் அரசாங்கத்தின் பின்கதவு விருந்தாளிகளாக தமது தேவைகளை பூர்த்தி செய்வதும் தமது குடும்பம் உள்ளிட்டவர்களுடன் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் சொகுசு வசதிகளுடன் குடியேறி வாழ்வதும் அடுத்த தேர்தல் வந்தவுடன் வடக்கு கிழக்கிற்கு ஓடிவந்து இனவாதம் பேசுவதும் அல்லது ஊடகங்கள் மூலம் அறிக்கை விடுவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

எனினும் இவர்களின் உண்மை முகமிறந்து இவர்களின் பொய்ப் பிரச்சாரங்களிற்கு உட்படாமல் அபிவிருத்திக்காக வாக்களிக்கும் மக்களையும், அதற்காக உழைக்கும் கிராம மற்றும் உள்ளூர் தலைவர்களையும் ஈனத்தனமான நாகரிகமற்ற வார்த்தைகளால் வசைபாடியும் இலவச பட்டங்களை அள்ளி வழங்கியும் சுயலாப அரசியல் பயணத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர்களும் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதன் உள்ளார்ந்த அர்த்தம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார் தலைவர்களும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது சுயதேவையின் பொருட்டும் சுயநலநோக்கங்களிற்காகவும் அரசாங்கத்தையும் மத்தியில் ஆட்சி செய்யும் தலைவர்களை சந்திக்கலாம் ஆனால் கிராமங்களில் வாழும் சாமானிய மக்கள் அரசாங்கத்தையோ அல்லது அரச பிரதிநிதிகளையோ சந்திக்கவோ அல்லது அணுகுவதோ எழுதப்படாத தடைசெய்யப்பட்ட குற்றமாக சித்தரிப்பதும் காலத்திற்கு காலம் நடந்தேறி வந்திருக்கின்றது. இதன் மூலம் தமது வாக்கரசியல் வங்கியை தக்கவைப்பதை தவிர வேறெந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை.

தேர்தலின் போது இனவாதம் பேசி வார்த்தை ஜாலங்களை வானவேடிக்கையாக்குவதும் பின்னர் சுனாமி அடித்து ஓய்ந்த கடல் போல அமைதியாக இருப்பதும் அடுத்த தேர்தல் நெருங்குகின்ற போது மீண்டும் கையில் கிடைத்த இனவாதப்பிரச்சினையை கொண்டு சண்டைக்கு ஓடுவதைப்போல ஓடிவந்து தேர்தலில் மக்கள் வாக்குகளை வைத்து துடுப்பாட்டம் ஆடுவதுமாக தமிழ் தேசிய தலைமைகள் தமது அணுகுமுறையை கடைப்பிடித்து வந்திருக்கின்றன.

2009ம் ஆண்டிற்கு பின்னர் அரசியல் ரீதியாகவோ இனப்பிரச்சினையின் தீர்வு ரீதியாகவோ எவ்விதமான முன்னேற்றத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஏற்படுத்த முடியவில்லை. ஆயினும் அவர்களுடைய திட்டம் இன்னும் தமது ஆயுட்காலம் வரை வாக்கு அரசியலுக்கான துடுப்பாட்டத்தை ஆட்டமிளக்காமல் ஆடுவதற்கு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை கையாள்வதை தவிர வேறெதுவும் இல்லை என்பது ஆகும்.

பாராளமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளிருக்கும் கட்சிகளிடையே தமிழ் மக்களின் பிரச்சினைகளாக உருட்டப்பட்ட பந்தை எந்தக்கட்சி எத்தனை மாவட்டங்களில் வைத்திருக்க வேண்டும் என்கின்ற வினோதமான முரண்பாடு எழுந்திருக்கின்றது.

இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பினை தேர்தல் கூட்டாகவே தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ரெலோ, புளொட்,ஈபிஆர்எல்,தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகிய கட்சிகள் பார்த்தும் பயன்படுத்தியும் வந்துள்ளன.

இதன்பின்னணியில் பசுத்தோல் போர்த்திய கரடி போல தமிழ் தேசியம் என்கின்ற தமிழ் மக்களின் அபிலாசைகளை கட்சிக்கு போர்த்திக்கொண்டு தங்களையும் தங்களின் பின்னால் தலைவர் என பெயரிடுவதற்கான தனியான கட்சியை வளர்ப்பதற்கும் பலப்படுத்துவதற்குமான சந்தர்ப்பமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை கருதுகின்றனரே தவிர உண்மையான மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ் தேசிய அரசியல் அபிலாசைக்குள் யாரும் நிற்கவில்லை என்பது அவர்களின் அண்மைய அரசியல் நகர்வுகள் மூலம் வெளிப்படையாக மக்கள் உணரத்தொடங்கியுள்ளனர்.

தமிழ் தேசிய போர்வைக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சுயநலமுதலைகள் தம்மைப்பலப்படுத்தவும் உட்கட்சிக்குள் தமது பேரம் பேசும் ஆற்றலை அதிகரிக்கவும் கோயில் திருவிழாக்கள் போல தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநாடு தவிர அதற்குள் அங்கம் வகிக்கும் தனி தனி கட்சிகளின் மாநாடுகள் ஆங்காங்கே பல லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு நடத்தி வருகின்றனர். இதன் வெளிப்படைத்தன்மையான விடயம் ஒன்றே ஆகும்.

தனி தனிகட்சிகள் தம்மை பலப்படுத்தும் வரையே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற பனிப்போர்வை நிலைத்து நிற்கும்.

தனிக்கட்சிகளும் அதன் தலைவர்களும் அரசியல் ரீதியாக பலப்படுத்தப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பனி போர்வை தானாக உருகிக்கொள்ளும்.

அவ்வாறான நிதர்சன உண்மையை மக்கள் உணராத விடத்து இலக்கற்ற சுயஇலாப அரசியலை தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆயுதப்போராட்டம் தோல்வி கண்ட பின்னர் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரசியல் ரீதியாக கொள்கையை சந்தைப்படுத்த வேண்டும் எனின் தமிழ் தேசியம் என்கின்ற வாக்கியம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அரசியல் கட்சிகள் எல்லாம் தமிழ் தேசியம் என்கின்ற சொல்லை சேர்த்துக்கொண்டு அரசியல் செய்கின்றனர்.

இவ்வாறான வங்குரோத்து அரசியலுக்கு வழி காட்டியது தமிழ் தேசியம் பேசுகின்ற அரசியல் தலைவர்களும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் ஆகும். இதனால் போலியான தமிழ் தேசியவாதிகள் உருவாகியுள்ளதுடன் தேர்தலுக்கான கற்பனை கூட்டுமே இடம்பெற்று வருகிறது.

இவர்களின் தேவை தமிழ் மக்களுக்கான தமிழ் தேசியம் அல்ல அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் மக்கள் பிரதிநி என்கின்ற ஒரு பதவி மட்டுமே ஆகும்.

இத்தகைய பதவியை எட்டும் வரை தமிழ் மக்களின் உணர்வு பற்றிப் பேசுவார்கள் பதவியை எட்டியதும் தொடர்ந்து பதவியை தக்க வைக்க அதிகாரம் பற்றி பேசுவார்கள். இது தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்களின் வேதநூலாக இருக்கிறது.

இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தவோ அல்லது அதன் மூலம் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தவோ விரும்புவதும் இல்லை அல்லது அதற்கான ஆளுமை அவர்களிடம் இருக்கவும் இல்லை.

இதன் இரு தளங்களும் யதார்த்தமானவை.

இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தினால் அடுத்த தேர்தலை எதிர்கொள்ள மேடைகளில் பேசுவதற்கும் வாக்கு அரசியல் நடத்துவதற்கும் மக்களுக்கான பிரச்சினைகள் இருக்காது அவ்வாறான சூழ்நிலையில் தன்னோடு போட்டியிடும் வேட்பாளருடன் அதிகளவான ஆளுமை கொண்டிருக்கவேண்டிய தேவைப்பாடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருக்கு ஏற்படும்.

இதனால் சில சமயம் அடுத்த தேர்தலில் தோல்வியை சந்திக்க வேண்டி வரும் என்கின்ற மன பயமே காரணமாகும். மற்றய தளம் ஆளுமை தொடர்பானது. சமானிய சமூகத்தில் இருந்து வருகின்ற தமிழ் மகனிற்கு தனது கிராமத்துக்கோ அல்லது நகரத்துக்கோ சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் காணப்படும்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்படும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்து நாட்டைவிட்டு ஓடிச்சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்து குடியுரிமை பெற்று யுத்தத்தின் பின்னர் நாட்டில் அரசியல் நடவடிக்கைகாக வந்தவர்கள் அல்லது வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக அரசியல் அங்கீகாரத்தை பெறுவதற்கு முனைபவர்கள்.

இதனால் இவர்களினால் சாமானிய மக்களின் அடிப்படைத்தேவைகளை கூட புரிந்துகொண்டு சேவையாற்றுவது என்பது கடினம். இவர்களால் உணர்வு அரசியலை மட்டும் பேசிக்கொண்டிருந்தால் நாட்டில் நிற்கவேண்டிய தேவைப்பாடும் இருக்காது தமது தொழிலினை முழுநேரமாக கவனித்தும் கொள்ளவும் முடியும் என்கின்ற கீழ்த்தரமான சிந்தனைகளினாலே வடமாகாணசபை ஆட்சிப்பொறுப்பேற்று ஒருவருடகாலமாகியும் எவ்விதமான குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் எதுவுமின்றி வெறும் கூக்குரல் இடும் சபையாக மட்டுமே காணப்படுகின்றது.

அது மட்டுமல்ல வவுனியா நகரசபை உட்பட பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைவசம் இருக்கும் சபைகளின் நிலமை கேள்விக்குறியானது தான்.

இதற்கு இன்னுமொரு முக்கியமான காரணம் அங்கம் வகிப்பதாகவும் கூறமுடியும். பதிவு செய்யப்படாத கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு பிறகு யார் தலைவராக உரிமை கோருவது என்கின்ற முரண்பாட்டின் காரணமாக உட்கட்சிகள் தம்மை பலப்படுத்தும் நோக்கில் திருவிழாக்களை நடத்த அதிக நேரம் செலுத்துவதும் முக்கியமாகும்.

அவ்வாறாயின் தமிழ் தேசிய தலைவர்களின் கூக்குரல்களிற்கு கட்டுப்பட்டு அவர்கள் பின்னால் அணிவகுகின்ற ஆதரவாளர்களின் நிலை எவ்வாறானதாக அமையப்போகினறது என்பதை காலம்தான் உணர்த்த வேண்டியுள்ளது.

எது எப்படி இருப்பினும் எமது மக்கள் இன்னமும் எது பால்.. எது கள்.. என்பதை பிரித்தறிய முடியாதவர்களாக காணப்பட்டால் தமிழ் மக்களின் தீர்வு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆயுட்கால பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவம் வரை நீண்டு செல்லும் என்பதே உண்மையாகும்.

எனவே தமிழ் மக்கள் அனைவரும் தங்களை யார் பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து தமிழ் தேசிய போலிகளினை இனங்கண்டு அவற்றுக்காக தங்கள் வாழ்வை வீணாக்காமல் புத்திக்கூர்மையுடன் இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முன்வரவேண்டும். இது தமிழனாக பிறந்த ஒவ்வொரு குடிமகனினதும் கடப்பாடாகும்.

TPN NEWS

SHARE