புற்றுநோயைத் தடுக்கும் புரோபயாடிக்!

238

உணவே மருந்து

முதுமையைத் தள்ளிப்போடலாம், நோயின்றி வாழலாம் என பல்வேறு கவர்ச்சிகரமான வார்த்தைகளுடன் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது புரோபயாடிக் (Probiotic) பால் மற்றும் தயிர் உள்ளிட்டவை.  அதென்ன புரோபயாடிக்? அதில் அப்படி என்னதான் ஸ்பெஷல்? ஊட்டச்சத்து நிபுணர் திவ்யாவிடம் கேட்டோம்…‘‘நமது உடலில் இயற்கையாகவே வாழும் ஒரு நுண்ணுயிரிதான் புரோபயாடிக். நாம் ஆரோக்கியமாக வாழ இந்த நுண்ணுயிரி நமக்கு அவசியம் தேவை.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை அழித்து வெளியேற்றுவது இந்த நுண்ணுயிரிதான். நமது உடலில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பையும் இந்த புரோபயாடிக் நுண்ணுயிரிதான் கரைக்கிறது. உணவில் உள்ள சத்து உடலில் சேர்வதற்கு இந்த புரோபயாடிக் பெரிதும் உதவுகிறது. இத்துடன் பெப்டிக் அல்சர், இரைப்பைப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியை புரோபயாடிக் தடுக்கிறது.

குடல் அழற்சி நோயைத் தடுப்பதிலும், அதன் தீவிரத் தன்மையைக் குறைத்து நிவாரணம் அளிப்பதிலும் புரோபயாடிக் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த புரோபயாடிக்கின் எண்ணிக்கை நம் உடலில் குறையும் போதுதான் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமாகின்றன. அதன் எதிரொலியாக வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவை ஏற்படுகின்றன.

இந்த புரோபயாடிக் இயற்கையாகவே தயிரில் அதிகம் உள்ளது. அதேபோல் புளிக்க வைத்த மற்ற உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவு வகைகள், சில மருந்து வகைகள், மாவு உணவுப்பொருட்கள் போன்றவற்றிலும் புரோபயாடிக் நிறைந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் இந்த புரோபயாடிக்கை அனைவரும் தினமும் 2 வேளை எடுத்துக் கொள்வது நல்லது.  உணவுக்குப் பிறகு சேர்த்துக் கொள்வது இன்னும் பலன் தரும்.’’

SHARE