2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி

452
இலங்கை–பாகிஸ்தான் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்தது. மஹேலா ஜெயவர்த்தனே (67 ரன்), கேப்டன் மேத்யூஸ் 93 ரன் (115 பந்து, 8 பவுண்டரி), திசரா பெரேரா (65 ரன், 36 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) அரைசதம் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளும், முகமது ஹபீஸ் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முகமது ஹபீசின் அதிரடியால் 12.3 ஓவரில் 100 ரன்களை கடந்தது. ஆனால் முகமது ஹபீஸ் (62 ரன், 49 பந்து, 11 பவுண்டரி) வெளியேறியதும் ரன்வேகம் தளர்ந்து போனது. இதன் பிறகு அகமது ஷேசாத் (56 ரன்), கேப்டன் மிஸ்பா உல்–ஹக் (36 ரன்), பவாத் ஆலம் (30 ரன்) தவிர மற்ற வீரர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. முடிவில் பாகிஸ்தான் 43.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. இதன் மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் நொறுக்கிய திசரா பெரேரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்–ரவுண்டராக ஜொலித்தார். இதனால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி வருகிற 30–ந்தேதி தம்புல்லாவில் நடக்கிறது.

SHARE