தி டிராபிக்கல் ரெயின்பால் மெஷரிங் மிஷன் (டி.ஆர்.எம்.எம்) என்ற அந்த செயற்கைக்கோளை நாசாவும், ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து திட்டமிட்டது. இந்த செயற்கைக்கோளில்தான் முதன்முதலாக ஆர்பிட்டல் பிரிசிபிடேஷன் ரேடார் பொருத்தப்பட்டிருந்தது. வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இது விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் பல சாதனைகளை புரிந்துள்ளது.
குறிப்பாக, இதுவரை டிராபிக்கல் சூறாவளிகள், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் வறட்சி போன்றவற்றை மிகத்துல்லியமாக பலமுறை கணித்து தந்திருக்கிறது. வெறும் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே அனுப்ப்பட்ட இந்த செயற்கைக்கோள் தற்போது 17 ஆண்டுகளை விண்வெளியில் கழித்துவிட்டது.
இந்நிலையில், அந்த செயற்கைக்கோளின் எரிபொருள் டாங்க் காலியாகும் நிலையில் உள்ளது. அதை சுற்றுவட்டப்பாதையிலேயே வைத்து நிரப்ப எந்த வழியும் இல்லை என்று நாசா கைவிரித்துவிட்டது. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக கீழே விழுந்துவிடும் என நாசா தெரிவித்துள்ளது. முதலில் கீழ் வட்டப்பாதையை நோக்கி வரும் எனவும், பின்னர் பூமியை நெருங்க நெருங்க வெடித்து சிதறி சிறு சிறு துண்டுகளாக விழுந்துவிடும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளது.