அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் பெடரர், செரீனா

464

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த டெய்லர் டவ்ன்சென்டை எதிர்கொண்டார். இதில் செரீனா 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

7–ம் நிலை வீராங்கனையான பவுச்செர்ட் (கனடா) 6–2, 6–1 என்ற நேர் செட் கணக்கில் பெலாராஸ் வீராங்கனை ஒல்காவை தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் 3–ம் நிலை வீராங்கனை கிவிட்டோவா (செக்குடியரசு) 8–ம் நிலை வீராங்கனை அனா இவானோவிக் (செர்பியா), அசரென்கா (பெலாரஸ்), சமந்தா (ஆஸ்திரேலியா) ஆகியோர் வென்று 2–வது சுற்றில் நுழைந்தனர்.

20–ம் நிலை வீராங்கனை குஸ்னெட்கோவா (ரஷியா) தொடக்க சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். அவர் 6–3, 2–6, 6–7 (3–7) என்ற கணக்கில் நியூசிலாந்து வீராங்கனை மரினாவிடம் தோற்றார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மில்டொனோவிக்கை எதிர்கொண்டார். இதில் பெடரர் 6–3, 6–4, 7–6 (7–4) என்ற நேர்செட் கணக்கில் வென்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்.

4–ம் நிலை வீரரான டேவிட் பெரர் (ஸ்பெயின்) 6–1, 6–2, 2–6, 6–2 என்ற கணக்கில் டமிரை (போஸ்னியா) தோற்கடித்தார். 13–ம் நிலை வீரரான ஜான் இஸ்னெர் (அமெரிக்கா) 7–6, (7–5), 6–2, 7–6 (7–2) என்ற கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த மார்கசை போராடி வென்றார்.

மற்ற ஆட்டங்களில் 20–ம் நிலை வீரரான மான்பில்ஸ் (பிரான்ஸ்), ரிச்சர்டு (பிரான்ஸ்) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

SHARE