அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் வெளியிடப்பட்ட அவதூறுக்கு மன்னிப்பு கேட்கப்பட்டதாகவும், ஜெயலலிதா தொடர்பில் வெளியிடப்பட்ட செய்தி தவறானது என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மிக் 27 ரக விமானக் கொள்வனவு தொடர்பில் சண்டே லீடர் பத்திரிகை வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று தொடர்பில் அந்த பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவுக்கு எதிராக கல்கிஸை மாவட்ட நீதிமன்றில் பாதுகாப்பு அமைச்சினால் தாக்கல் செய்யப்பட்ட மான நஷ்ட ஈட்டு கோரிக்கை வழக்கில் சாட்சியம் மீதான குறுக்கு விசாரணைகளின் போதே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குறித்த வழக்கின் சாட்சியம் மீதான குறுக்கு விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில் நேற்றைய தினமும் அது தொடர்பிலான விசாரணை மாவட்ட நீதிவான் கிஹான் ரணவக்க முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இது தொடர்பில் பிரதான சாட்சியத்தை கடந்த மே மாதம் 22ம் திகதி வழங்கியிருந்த நிலையில் அந்த சாட்சியம் மீதான குறுக்கு விசாரணைகள் கடந்த மே மாதம் 27ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகவே நேற்றும் சாட்சி மீதான குறுக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
இதன் போது பிரதான சாட்சியான பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை சண்டே லீடர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தினார்.
இதன் போது ஊழல் தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரன் கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பிய போது,
நீண்டகால அரசியலில் உள்ள தனது குடும்பத்தினருக்கு ஊழல்கள் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இருக்கவில்லை என தெரிவித்தார்.
இதனை அடுத்து தற்போதைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரன் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் தற்போதைய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முறைகேடான அரசியல் கலாசாரம் சார்ந்தது எனவும் தம் மீது சேற்றை வாரி இறைக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கும் சில இணையத்தளங்களே இதனை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து மற்றொரு கேள்வியை தொடுத்த சட்டத்தரணி சுமந்திரன், பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் அவ்வாறு சேறு பூசும் இணையத்தளமா?- என கேள்வி எழுப்பியதுடன் அதற்கான உதாரணங்களையும் முன்வைத்தார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அவதூறு கருத்து மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறித்த வழக்கில் ஆஜராகியதற்காக தன்னை குறித்த இணையத்தளம் கறுப்பு கோட் அணிந்த தேசத் துரோகி என குறிப்பிட்டிருந்தமை ஆகியவற்றை சட்டத்தரணி சுமந்திரன் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச ஜெயலலிதா தொடர்பில் வெளியான தகவல் தவறானது தான் என்பதை ஏற்றுக்கொண்டதுடன், அதற்கு தாம் மன்னிப்பு கோரியதாகவும் அந்த பதிவினை இணையத்திலிருந்து நீக்கியதாகவும் தெரிவித்தார். எனினும் சட்டத்தரனி சுமந்திரன் தொடர்பிலான பதிவு தொடர்பில் அவர் பதிலளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து மிக் 27 ரக விமானம் தொடர்பிலான கொள்வனவின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சட்டத்தரணி சுமந்திரன் வினவினார்.
இதற்கு உக்ரைன் இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரமே கொள்வனவுகள் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதிலளித்த நிலையில் அந்த கொள்வனவின் போது மூன்றாம் தரப்பு அல்லது பிறிதொரு கம்பனி ஊடாக பணப் பறிமாற்றம் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் சட்டத்தரணி சுமந்திரனால் கேள்வி எழுப்பபட்டது.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உக்ரைன் அரசு நியமித்த மூன்றாம் தரப்புக்கு அல்லது கம்பனியிடமே பணம் செலுத்தப்பட்டதாக பதிலளித்தார்.
எவ்வாறாயினும் நேற்று சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த சாட்சி மீதான குறுக்கு விசாரணைகள் நிறைவுக்கு வராத நிலையில் வழக்கானது மீண்டும் ஒக்டோபர் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாதுகாப்பு செயலாளர் சார்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன், சண்டே லீடர் பத்திரிகை சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.