தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்தியாவுக்கான விஜயமும் அதனால் எதிர்ப்பார்க்கப்பட்ட பெறுமதிமிக்க எதிர்ப்பார்ப்புகளும் எந்தவளவுக்கு நிறைவு கொண்டிருக்கிறது என்பது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தற்பொழுதுமுன்வைக்கப்பட்டிருக்கின்றன.
கூட்டமைப்பினரின் அறிக்கைகளின் படியும் அவர்கள் பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கும் செய்திகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கின்ற போது இந்தியாவுக்கான தமது விஜயம் எதிர்ப்பார்த்ததை விட பாரிய வெற்றியைக் கண்டிருக்கிறது என அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வட கிழக்கு மக்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சியின் தலைவர்கள் பார்வையில் இந்திய விஜயம் எதிர்பார்த்த இலக்கை அடையவில்லையா? என்ற சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது. இன்னொருபுறம் பார்க்கப் போனால் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் காண முடிகிறது.
இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில் எதிர்ப்பார்த்த எதிர்பார்ப்பை விட நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வரவை மிக ஆவலோடும் அக்கறையோடும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள் என்பதும் மறுத்து விட முடியாத உண்மை. காரணம்.
இந்திய ஆட்சி மாற்றம் ஒன்றின் மூலமே இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியுமென்ற உள்ளார்ந்த நம்பிக்கையொருபுறமாகவும் சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இந்தியாவை மீறி ஏதும் ஆகி விட முடியாது என்ற பயமும் இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணங்களாக இருந்தன.
1991 ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை தமிழ் மக்களின் இனத்துவம் சார்ந்த அரசியல் போக்குகளில் இந்தியா கொண்டிருந்த நிலைப்பாடு கொள்கை வகுப்பு மாறிக் கொண்டது என்பதும் உண்மையே.
இதன் காரணமாகவே காங்கிரஸ் ஆட்சி இந்தியாவில் நிலைகொண்டிருக்குமட்டும் இலங்கை இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அது அக்கறை காட்டப் போவதில்லையென்ற அவநம்பிக்கைகள் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளூர நிலை கொண்டிருந்தன. அதை நிரூபிக்கும் வகையிலேயே கூட்டமைப்புக்கும் முன்னைய அரசாங்கத்துக்கும் இடையிலான சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகள் இருந்திருக்கின்றன.
மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் ஆட்சி பீடம் அமைக்கப்பட்டிருந்த போதும் சகலவற்றையும் தீர்மானிக்கும் மறைகரமொன்று இந்திய அரசியலில் வலுக்கொண்டிருந்த காரணத்தினால் தான் இந்திய அரசாங்கத்துடன் அதன் தலைவர்கள் ராஜதந்திரிகள் ஆகியோருடன் நடத்தப்பட்ட எல்லாப் பேச்சுவார்த்தைகளும் சந்திப்புக்களும் கூட்டமைப்பைப் பொறுத்தவரை கனதியான பலனைத் தரவில்லை. ஆனால் ஒப்புக்கு வெற்றி கண்டுள்ளது என்று பிரஸ்தாபிக்கப்பட்டதே தவிர உண்மை அவ்வாறு இருக்கவில்லை.
முள்ளிவாய்க்கால் போரை முடிவுக்கு கொண்டு வந்த பங்காளிகளில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த இந்திய அரசாங்கம் 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை இலங்கை அரசாங்கம் வலுக் கொண்டதாக ஆக்க வேண்டும்.
அதற்கு அப்பால் சென்று ஞாய பூர்வமான தீர்வை வழங்க வேண்டுமென அடிக்கடி அல்லது பேசப்படுகிற சந்தர்ப்பங்களிலெல்லாம் கூறி வந்திருக்கிறதே தவிர உரிய அழுத்தத்தை இலங்கை அரசுக்கு அது கொடுக்கவுமில்லை வலியுறுத்தவுமில்லையென்பதேயுண்மை.
இந்த உண்மை பொதுவாகவே எல்லோராலும் அறியப்பட்ட உண்மையென்பதும் தெரிந்த விடயமே. 1983ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்து இலங்கை இனப் பிரச்சினை விவகாரத்தில் இந்தியா எத்தகைய முக்கியமான பாத்திரத்தை வகித்துக் கொண்டது என்பதும் அதன் போக்கில் 1991 ஆம் ஆண்டு என்ன முறிவைக் கொண்டு வந்தது என்பதும் சுமார் 23 வருடங்கள் (1991 – – 2014) இந்தியாவின் நிலைசார்ந்த போக்கு எவ்வாறு இருந்தது என்பதும் சிறுகுழந்தை கூட கற்றுக் கொள்ளக் கூடிய எளிமையான வரலாற்றுப் போக்காகும்.
இது தவிர இந்தியாவின் எந்த நிலைப்பாடும் குறிக்கப்பட்ட கலண்டர் ஆண்டுகளில் இலங்கை தமிழ் மக்களுக்கு சார்பாகவோ அல்லது ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்று பெற்றுத் தர வேண்டுமென்ற குறிக்கோள்கொண்டதாக இருக்கவில்லையென்பதற்கு அடையாளமாகவே 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கெதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா இலங்கைக்கு சார்பாக நடந்து கொண்டதும் மறு ஆண்டு (2013) தமிழகத்தின் அதிர்வலைகள் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களித்ததும் பழையகுருடி கதவைத் திறவடி என்பது போல் மீண்டும் 2014 ஆம் ஆண்டு நடுநிலை வகித்துக் கொண்டதும் ஆன நிகழ்வுகள் படம் போட்டுக் காட்டுகின்றன.
இவ்வாறானதொரு விமர்சனமயப்பட்ட சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் அமைந்திருக்கின்றது. இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கையை சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் கவனமாக வலியுறுத்தியுள்ளார்கள்.
இலங்கை அரசாங்கம் மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்குவதற்கு தயாராகவில்லை. பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தவில்லை. இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எதிர்மறையான செயற்பாட்டிலேயே இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.
எனவே இனப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா கடுமையான முயற்சி எடுக்க வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விட்டது. அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த வேளையில் பின்வரும் கோரிக்கையை விடுத்திருந்தது.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் தமிழரின் இந்த பூர்வீக நிலங்கள் இன்னும் ஐந்து வருடங்களில் இலங்கை அரசால் முற்றாக சிதைக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏன் எனில் அரசின் தற்போதைய நடவடிக்கைகளை இதனையே பிரதிபலிக்கின்றன.
இவ்வகையான இலங்கையின் திட்டமிட்ட இனவொடுக்கல் நடவடிக்கைகளை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு உடந்தையாக உயர் குழுவொன்றை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டுமென பாரதப் பிரதமரிடம் கூட்டமைப்பினர் கோரிக்கையாக விடுத்திருந்தனர்.
கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட இக் கோரிக்கைகளை இந்திய அரசும் அங்குள்ள ராஜதந்திரிகளும் ஏற்றுக் கொண்டார்களா இல்லையா? கவனத்தில் கொள்ளப்படுமென வாக்குறுதி அளித்துள்ளார்களா இல்லையா? என்பதெல்லாம் வெளிவராத ரகசியங்களாக இருக்கின்ற போதும் இந்திய விஜயம் இலங்கை அரசாங்கத்தை சிறியளவு கலங்க வைத்துள்ளது என்பது கசப்பான உண்மையே.
இந்திய விஜயம் பற்றி தனது விமர்சன பூர்வமான கருத்தைத் தெரிவித்திருந்த அரசியல் விமர்சகரும் முன்னாள் சிரேஷ்ட ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜெயதிலக்க பின்வருமாறு தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து மோடி அரசு பேச்சு நடத்தியுள்ளமையானது கூட்டமைப்பினருக்கு கிடைத்துள்ள இராஜதந்திர வெற்றியாகும். அத்துடன் சீனப் பீதியால் இலங்கையை மோடி அழுத்தமாட்டார் என இலங்கை அரசு போட்ட கணக்கும் தற்பொழுது பிழைத்து விட்டது என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பிட்ட இந்த விமர்சனத்தின் அடிப்படையில் நோக்குகின்றபோது கூட்டமைப்பின் இந்திய விஜயமானது இலங்கை அரசாங்கத்துக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இலங்கையரசாங்கத்தின் சார்பில் கூறப்பட்டு வரும் கருத்துக்களே சாட்சியங்களாகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கூட்டமைப்பின் இந்திய விஜயத்தை மிகக் கடும் போக்கில் பார்த்துள்ளார் என்பதற்கு அவரின் சீற்ற வார்த்தைகளே உதாரணமாகிறது.
சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேசமுடியாது என அடித்து கூறியுள்ளார். அதுமட்டுமன்றி தனது கடும் அதிருப்தியை பிரதிநிதி ஒருவர் மூலமாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க அரசாங்கத்தின் சார்பில் கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த போன்றவர்களும் கடும் போக்கில் விமர்சித்துள்ளனர். ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன கூட்டமைப்பின் இந்திய விஜயம் பற்றி இவ்வாறானதொரு கருத்தை நாக்கு கூசாமல் கூறியிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு விஜயம் செய்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பொய்யான முறைப்பாடுகளை செய்துள்ளமை தொடர்பில் அரசாங்கம் ஆச்சரியமடையவில்லை. காரணம் வரலாறு முழுவதும் கூட்டமைப்பினர் இவ்வாறே செயற்பட்டு வந்துள்ளனர் என தினேஷ் குணவர்த்தன சாடியிருந்தார்.
அதிகாரப்பகிர்வு விடயத்தில் அரசாங்கத்தை மீறியாரும் செயற்பட முடியாது. இந்தியாவுக்கு இது பொருந்துமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடுமையான தொனியில் கூறியிருந்ததுடன் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைப்போன தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா இணங்குவது அதிர்ச்சியளிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பின் இந்திய விஜயமானது இரண்டு விடயங்களை இந்தியாவுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டதாக வரையறுத்து கொண்டு பார்ப்போமாகில், ஒன்று இலங்கையின் இன்றைய யதார்த்த நிலை, மற்றொன்று அரசியல் தீர்வும் அதுசார்ந்த இழுத்தடிப்புகளுக்குமென்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.
இன்றைய அரசியல் யதார்த்த நிலைகள் பற்றி சம்பந்தன் விளக்குகையில் ஒரு ஆழமான உண்மையை எடுத்துக் கூறியிருந்தார். அது யாதெனில், வடகிழக்கு தமிழர் நாயகம் என்பது இன்னும் ஐந்து வருடங்களில் இன்றைய அரசால் முற்றாக சிதைக்கப்படலாம். என்பதனை தெளிவாக எடுத்துக் காட்டியமை.
இன்றைய வடகிழக்கின் யதார்த்த நிலையென்ன என்பது சொல்லிப்புரியவைக்க வேண்டிய அவசியமில்லை. இராணுவ குடியிருப்புக்கள், படைமுகாம் விஸ்தரிப்பு, புனித பூஜா திட்டம், பொருளாதார அபிவிருத்தி வலயம், சுற்றுலாத்துறை, தொல்பொருள் ஆய்வு, வனப்பரிபாலனம், தேசிய பாதுகாப்பு என்ற வாய்ப்பாடுகளின் அடிப்படையில் வடகிழக்கிலுள்ள பெருந்தொகையான நிலங்கள் சுவீகாரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவை தவிர பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் கோயில்கள் என்ற எதிர்மறை அழிப்புக்கள் வாரம் தவறாமல் நடந்து கொண்டிருக்கின்றன.
அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் கருமலையூற்று, புல்மோட்டை, கன்னியா, அரிசிமலை அளப்புக்கள் எல்லாம் இந்த வாய்பாட்டுக்கு உட்பட்டவைதான். ஆனால் இவை பற்றியெல்லாம் இந்தியா அறிந்து வைத்திருக்கவில்லையென்று கூறுவதற்குமில்லை.
அண்மையில் திருகோணமலை மாவட்டத்துக்கு முதல்முதல் விஜயம் செய்திருந்த இந்திய உயர் ஸ்தானிகரிடம் சம்பூர் மக்கள் தமது ஆதங்கத்தை அள்ளிக்கொட்ட காத்திருந்தார்கள். இந்தியாவின் அனல்மின் நிலையம் என்ற அவசர திட்டத்துக்குள் தங்கள் பூர்வீக நிலங்கள் தாரை வார்க்கப்பட்டுள்ளன என எடுத்துக் கூறக்காத்திருந்த போதிலும் மிக சாதுரியமாக அந்த சந்திப்புக்கு இடமளிக்கப்படவில்லை.
சம்பூர் மக்களின் உண்மை நிலையென்பது இந்தியா அறியாதவொரு விடயமல்ல, உயர்ஸ்தானிகருக்கு தெரிவிக்கப்படாத ஒரு விவகாரமுமில்லை.
இங்கு சீனா குடிவந்துவிடும் என்ற மாயைக் காரணம் காட்டப்பட்டு இந்தியாவுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டதாக வதந்திகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த விடயத்தில் இந்தியா மௌன விரதத்தை கடைப்பிடிக்கின்றதே தவிர பகிரங்கமான தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிப்பதாகவும் இல்லை.
இன்னும் சீனப்பூச்சாண்டியே இது விடயத்தில் காட்டப்பட்டு கொண்டிருக்கின்றது. எது எப்படி பார்க்கின்றபோதும் கடந்த காலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகளையே மோடி அரசாங்கம் கடைப்பிடித்து விடுமோ என்ற பயப்பாடு வடக்கிழக்கு மக்களிடம் ஊறிக் கொண்டிருப்பதே உண்மை நிலையாக இருக்கிறது. இந்தியாவில் எத்தனையரசாங்க ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் அதன் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
அந்த வகையில் இலங்கை விவகாரத்தில் குறிப்பிட்டு சுட்டிக் காட்டக்கூடிய எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. எனவே கூட்டமைப்பின் முதல் கோரிக்கை எந்த பயனையும் இந்திய தரப்பினால் தரப்போவதில்லையென்றும் அவ நம்பிக்கை பேசுவோரும் நம்மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள்.
ஆனால் எந்த ஒரு அரசாங்கத்தினது நடைமுறைப் போக்கை தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியம் பெறுபவை யதார்த்த அரசியல் நடைமுறைகளும் அதன் சூழ்நிலைத்தாக்கங்களும் என்பதேயுண்மை. இந்தியாவின் இன்றைய நாளைக்கு அப்படியே இருந்து விடும் என்று இருப்பு நிலைவாதத்தையும் யாரும் நிரூபிக்க முடியாது. சில வேளைகளில் சர்வதேச காலதேச வர்த்தக மானங்கள் மாறுகின்றபோது மாறமுடியாதவையும் மாறக்கூடும். அவ்வாறானதொரு மாற்றம் வருமென்பதும் ஆச்சரியத்துக்குரிய விடயமுமல்ல.
கூட்டமைப்பின் விஜயத்தின் இரண்டாவது அடைப்பொருளாகப் பேசப்பட்டவையும் சொல்லப்பட்டவையும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு சார்ந்த விடயமாகும். இது புதிய இந்திய அரசுக்கு சொல்லப்பட வேண்டிய ஒரு விடயமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரலாறு எழுத முற்படுகின்றபோது இந்தியாவின் பங்களிப்பு சார்ந்த விடயத்தை விலத்திக்கொண்டு எழுதுவது என்பது பொய்யான விடயமே.
இந்திய அரசாங்கத்தின் முனைப்பினால் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் இதன் தத்துக் குழந்தையாக பிறப்பெடுத்த 13ஆவது சட்டத்திருத்தம் அரசியல் தீர்வின் முதல் அத்தியாயமென்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
கிழிக்கப்பட்ட ஒப்பந்தங்கள் மறுக்கப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னால் புதிய பரிணாமமாகப் பார்க்கப்பட்டவை 13ஆவது திருத்தச் சட்டமாகும். இந்த சட்டம் இன்னும் ஒருகுறை மாதக்குழந்தையாகவே சப்பாணி நகர்வு நகர்கின்றது என்பதும் உண்மையே.
இவ்விடயம் இந்திய பிரதமர் உட்பட்ட அனைவரிடமும் கூட்டமைப்பினர் விலாவாரியாக விளக்கியுள்ளார்கள் என்பதும் தெரிந்த விடயம்தான். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த விடயத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்பது புரியா புதிராகவே இருக்கின்றது.
இதற்கு மேலாக சார்க் பிராந்தியத்தில் தன்னையொரு நாயகனாக பாவனை பண்ணிக்கொண்டிருக்கும் இந்திய மேலாண்மைவாதம் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்கமுன் வருமா? அல்லது தனது பிராந்திய நலனுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளுமா என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டே வருகின்றது.
எப்படியிருந்த போதிலும் கூட்டமைப்பினருடனான சந்திப்பை அடுத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பின்வரும் கருத்தொன்றை வலியுறுத்தியிருப்பது ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கை தருவதாகவே காணப்படுவதாக கூறப்படுகின்றது.
அதுதான் இலங்கையிலுள்ள சிறுபான்மை தமிழ் மக்களின் கௌரவம், சமவுரிமை, சுயகௌரவம், நீதி, நல்லிணக்கம் என்பவற்றை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியிருப்பது இன்னும் பொறுத்திருங்கள் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாகவே அமைந்திருக்கின்றது.