இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு

424

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.

கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமான நிகழ்வுகளில் 160 பொதுச்சபை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

இதனையடுத்து நாளை இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் வெளியிடப்படும் தீர்மானங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

இன்றைய நிகழ்வுகளில் தமிழ்த் தேசியத்தின் பதிவுகள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றிருந்ததுடன் மாலை 02.00 மணிக்கு தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடும் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய, ஏகமனதாக மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கட்சியின் செயலாளராக கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர் துரைராஜசிங்கம் நியமிக்கப்பட்டார்.

இதுவரை காலமும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனே தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

இந்த தலைமைத்துவ மற்றும் கட்சியின் பொறுப்பு மாற்றங்கள் குறித்து அறிவிப்பு நாளை நடைபெறவுள்ள பேராளர் மாநாட்டில் பகிரங்கமாக அறிவிக்கப்படவுள்ளது.

 

SHARE