தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் இரண்டாவது அமர்வு இன்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இளைஞர் மாநாடு ஆரம்பமாகியது. இந்த மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இளைஞர் அணிப் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னைய தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. இன்று வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் பொதுச் சபை கூட்டத்துக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை மாவை சேனாதிராஜாவுக்குக் கையளிக்க முன்னர் பொதுச்சபைக் கூட்டத்துக்கு அவர் தலைமை வகித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற முறையில் தாம் ஆற்றிய கடைசி உரையிலேயே இந்த நம்பிக்கையை அவர் வெளியிட்டார்.
வரலாற்றில் மிக முக்கிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்ற கூற்றுடன் தமது உரையை ஆரம்பித்த சம்பந்தன் எம்.பி., இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளை – பேச்சுக்களை – சுருக்கமாக விவரித்தார். அவர் கூறியவை வருமாறு:- பல பேச்சுகள், முயற்சிகள் இடம்பெற்றன. ஆனால் அவை எவையும் பலன் தரவில்லை. சமத்துவமாக வாழும் உரிமை தமிழர்களுக்குக் கிட்டவில்லை. பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் எல்லாம் செய்யப்பட்டன.
எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஒப்பந்தஙகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலேயே நாடு இவ்வளவு சீரழிவுகளை எதிர்நோக்க வேண்டி வந்திருக்காது. 1956, 57, 61, 77, 79, 81, 83 என்று தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1983 கலவரங்களை அடுத்துத் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கை அரசினாலேயே கப்பலிலும் பிற மார்க்கங்களிலும் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு ஏற்றி அனுப்பப்பட்டனர்.
ஏனெனில் வடக்கும், கிழக்குமே – தமிழர்களது தாயகமே – அவர்களுக்குப் பாதுகாப்பான பகுதிகள் என்று கருதியே அப்படி அனுப்பட்டனர். ஆனால் 83 இற்குப் பின்னர் வடக்கு, கிழக்கிலும் கூட தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டமைதான் துரதிஷ்டம். சர்வதேசம் – பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா – எல்லாம் இன்று எங்கள் பக்கத்தில் நிற்கின்றன. எங்கள் நிலைப்பாட்டை அவை ஆதரித்து நிற்கின்றன.
அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று – நாம் வன்முறைப் பாதையை நிராகரித்து நிற்கின்றமை. மற்றையது – நாம் ஐக்கிய இலங்கைக்குள் பிளவுபடாத நாட்டுக்குள் – தீர்வு காணத் தயராக இருக்கின்றோம் என்ற தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றமை. நாங்கள் இப்போது செய்ய வேண்டிய முக்கிய விடயம் ஐக்கியப்பட்டு ஒரு குரலில் நிற்பதுதான். முஸ்லிம்களையும், பிற முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து வலிமைப்பட்டு நிற்கவேண்டும். தமிழர் தரப்பில் இருந்து ராஜபக்ஷக்களுக்கு முண்டு கொடுப்போரை முறியடிக்க வேண்டும்.
எம்மைப் பிளவுபடுத்திப் பலவீனமுற வைக்க ராஜபக்ஷ தரப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்கக்கூடாது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தம். அத்தகைய ஒப்பந்தத்தை ஒரு நாடு ஒருதலைப்பட்சமாக மீறமுடியாது என வியன்னா உடன்படிக்கை கூறுகின்றது.
எனவே, இலங்கை – இந்திய ஒப்பந்த ஏற்பாடுகளை ஒரு தலைப்பட்சமாக இலங்கை மீற அனுமதிக்க முடியாது. இலங்கை – இந்திய ஒப்பந்தப்படி வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு ஒரே நிர்வாக மாகாணமாக்கப்பட்டன. 18 ஆண்டுகளாக அது நீடித்தது. நாட்டின் வரவு – செலவுத் திட்டத்தில் 18 ஆண்டுகளாக ‘வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கென்றே’ நிதி ஒதுக்கப்பட்டது. வடக்கு – கிழக்கு இணைப்பைத் தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பை அவ்வப்போது பதவியில் இருந்த ஜனாதிபதிகள் தங்கள் அதிகாரத்தின் மூலம் ஒத்திவைத்து வந்தனர்.
இணைப்பை ஏற்படுத்திய ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அதன்பின்னர் பிரேமதாஸா, சந்திரிகா குமாரதுங்க எனத் தொடர்ந்து வந்த ஜனாதிபதிகள் இந்த இணைப்பை ஏற்று அங்கீகரித்துச் செயற்பட்டனர். 2006 இல் – ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் – வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக கிழக்கில் குடியேறிய சிலரால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் விநோதமான முறையில் விசாரித்து தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் தங்களை ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ளுமாறு கிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் மூவரினால் மனுச் செய்யப்பட்து. ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
அவர்களது தரப்பு வாதங்கள் செவிமடுக்கப்படவேயில்லை. சில விசாரணைகளுக்கு வெளியார் அனுமதிக்கப்படவேயில்லை. அவை மூடுமந்திரமாக நடைபெற்றன. இறுதியில் தீர்ப்புக் கூறப்பட்டது. வடக்கு – கிழக்கு இணைப்பு தவறு என்று நீதிமன்றம் கூறவில்லை. அந்த இணைப்பை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முன்னெடுத்த முறைமை – நிர்வாக நடவடிக்கை முறை – தவறு என்றே நீதிமன்றம் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் வெளிநாட்டில் வைத்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்திருந்தார். இலங்கை – இந்திய உடன்பாட்டுக்கு மாறாக வடக்கு, கிழக்கு பிரிக்கப்படுமா என்று அவர் இலங்கை ஜனாதிபதியிடம் கேட்டார்.
அப்படி பிரிக்கப்படுவதைத் தாம் வரவேற்கவில்லை என்றும், தமது சட்டமா அதிபரை அழைத்து நீதிமன்றத்தில் பிரிப்புக்கு எதிராக வாதிடுமாறு தாம் வழிப்படுத்தியிருக்கின்றார் என்றும் இலங்கை ஜனாதிபதி பதிலளித்தார். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் நானும் ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினேன். தாமும் வடக்கு – கிழக்குப் பிரிப்பை எதிர்க்கின்றார் என்றார் அவர். அப்படியானால் நல்லது. வடக்கு, கிழக்கு இணைக்கக்கூடாது என்று நீதிமன்றம் கூறவில்லையே, இணைக்கப்பட்ட முறைமைதானே பிழை என்று கூறியுள்ளது. ஆகவே மீண்டும் இணைப்பதற்கான சட்டத்தைக் கொண்டு வாருங்கள்.
நான் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசியிருக்கின்றேன். அவர் ஆதரவு தருவார். நாங்களும் பிற கட்சிகளும் ஆதரிப்போம். சட்டத்தை நிறைவேற்றி, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறியபடி இணைப்பைத் தொடருவோம் – என்று ஜனாதிபதியிடம் கூறினேன். ஆகட்டும் பார்க்கலாம் என்றார். ஆனால் சட்டம் வரவேயில்லை. அரசுடன் பேசித் தீர்வு காண்பதற்குத் தயார். ஆனால் அந்தப் பேச்சு திட்டவட்டமானதாக – குறுகிய காலத்தில் – சுமார் மூன்று மாத காலத்துக்குள் முடிவடைய வேண்டும்.
இலக்கு நிர்ணயித்து, காலம் குறிப்பிட்டுப் பேசவேண்டும். அப்படிப் பேச்சை ஆரம்பித்தால் என்ன பேசினோம், பேச்சில் காணப்பட்ட உடன்பாடு யாது, அந்த உடன்பாட்டை செயற்படுத்த தவறியவர் யார் அல்லது உடன்பாடு எட்டப்படாமைக்கு யார் அல்லது எது காரணம் என்பவை எல்லாம் வெளிப்படுத்தப்படவேண்டும். அவற்றை வெளிப்படுத்த மூன்றாம் தரப்பு ஒன்று – ஒரு நாடு – அவசியம். ஒரு தரப்பை வைத்துக் கொண்டுதான் பேசுவோம். நேர்மைத் திறனுடன் பேச்சில் ஈடுபட்டு, ஒரு தீர்வைக் காண்பதற்கு நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றோம்.
TPN NEWS