சர்வதேச பிரசன்னத்துடன் அத்தகைய பேச்சுக்கள் ஆறு மாத்துக்குள் முடிக்கப்படவேண்டும். சர்வதேசம் அப்பேச்சுக்களில் பார்வையாளர் தரப்பாக பங்குபற்றுவது அவசியம்” – இவ்வாறு பேச்சுக்கு முன்நிபந்தனை விதித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது மாநில மாநாடு நேற்று வவுனியாவில் முடிவடைந்தது. அந்த மாநாட்டில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில் வைத்து கட்சியின் தலைமைப் பொறுப்பை மாவை சோ.சேனாதிராஜாவிடம் ஒப்படைத்த இரா.சம்பந்தன், மாநாட்டின் இறுதியில் முடிவுரை ஆற்றினார். அப்போதே பேச்சுக்கான இந்த நிபந்தனையை அவர் அறிவித்தர்.
அங்கு அவர் கூறியவை வருமாறு:- எமது மக்களின் எதிர்காலம் சம்பந்தமாக – அவர்களின் அரசியல், பொருளாதார, சமய, சமூக, கலாசார உரிமைகள் சம்பந்தமான – 15 முக்கிய தீர்மானங்களை எமது கட்சியின் மாநில மாநாட்டில் நாம் நிறைவேற்றியிருக்கின்றோம். பொதுவாகத் தமிழினத்தின் எதிர்காலம், இன்று நாட்டில் நிலவும் சூழ்நிலை என்பவற்றுக்கு மத்தியில் எமது எதிர்காலத்தை எப்படி முன்னெடுக்க வேண்டும் என்பது தீர்மானத்தில் கோடி காட்டப்பட்டிருக்கின்றது.
அந்தத் தீர்மான விடயங்களை நிறைவேற்றும் பொறுப்பு கட்சியின் புதிய தலைவர் தம்பி மாவை சேனாதிராஜா, செயலாளர் துரைராஜசிங்கம், கட்சியின் ஏனைய நிர்வாகிகள், செயற்குழு, மத்திய குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் எமது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இதை நிறைவு செய்வது ஓர் இலகுவான கடமை அல்ல. அது கடினமாக கடமை; ஒரு புனிதமான கடமையும் கூட. எமது போராட்டம் நீண்டது. அது பல வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டது.
அது இப்போது ஒரு முக்கிய காலகட்டத்தை அடைத்திருக்கின்றது. யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் நிலைமையை சர்வதேச சமூகம் உன்னிப்பாக நோக்குகின்றது. பல்வேறு காலகட்டங்களில் எமது போராட்டம் குறித்துக் குழம்பியிருந்த சர்வதேச சமூகம் இப்போது தெளிவடைந்திருக்கின்றது. ஒரு தீர்வு வேண்டி நீதி, நியாயத்தின் அடிப்படையில் நாம் எடுத்த முடிவை சர்வதேசம் ஆதரித்து நிற்கின்றது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இன்னும் பல நாடுகள் நீதி, நியாயத்தை வேண்டி நாம் முன்னெடுக்கும் போராட்டத்தை ஆதரித்து நிற்கின்றன.
அவை ஓர் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளன. ஐ.நாவும் தனது மனித உரிமைகள் கவுன்ஸிலில் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றிய தீர்மானங்கள் மூலம் பல கருத்துக்களை முன்வைத்திருக்கின்றது. மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரங்களை ஏற்படுத்துதல், தொழில் முயற்சிகள் எனப் பல கருமங்களை இலங்கை அரசு முன்னெடுக்கவேண்டும் என அது வற்புறுத்தியுள்ளது. உண்மைகள் கண்டறியப்பட்டு பொறுப்புக் கூறும் விடயம் முன்னெடுக்கப்படவேண்டும் என வற்புறுத்திய ஐ.நா., அதற்கான உள்ளகப் பொறிமுறையை நீதியான முறையில் முன்னெடுக்குமாறு இலங்கை அரவை வலியுறுத்தியது.
இரண்டு வருடங்களாக அது நிறைவு செய்யப்படாதமையால் இப்போது சர்வதேசப் பொறிமுறை ஒன்று வந்திருக்கின்றது. நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு உண்மைகள் கண்டறியப்பட்டு, பொறுப்புக்கூறல் நிறைவு செய்யப்படவேண்டும் என்பதே எமது முக்கிய நிலைப்பாடாகும். சர்வதேச சமூகமும் அதை ஆதரித்து நிற்கின்றது. இலங்கை அரசுடன் பேசித் தீர்வுக் காண நாம் எப்போதுமே தயாராக இருக்கின்றோம். எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, தொழில்முயற்சிகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி சுயமரியாதையோடும் கௌவரத்துடனும் வாழக் கூடிய தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இலங்கை அரசோ அந்த விடயங்களை நிறைவுசெய்யாமல், எமது நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்துவிட்டு அதற்கு மாற்றான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. எமது மாகாணங்களில் இராணுவத்தைத் தக்கவைத்து, பெரும்பான்மையிரைக் குடியேற்றுகின்றது. இராணுவக் குடியேற்றங்கள் என் பெயரில் அவர்களுக்கும் தொழில்வசதி, வீடு வசதி ஆகியவற்றை எமது பிரதேசத்தில் திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதன் மூலம் எமது பிரதேச இன, மொழி, கலாசார விகிதாசாரத்தை மாற்றியமைக்கிறது.
எமது ஆலயங்களை, கலாசார மையங்களை, வழிபாட்டுத் தலங்களை அழித்து, இலங்கை அரசு தான் நினைத்ததை நிறைவேற்ற முயற்சிக்கின்றது. இதை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருக்கின்றோம். ஜனாதிபதிக்கு கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். நேரிலும் சந்தித்துக் கூறியிருக்கின்றோம். ஆனால் இவ்விடயம் தடுத்து நிறுத்தப்படாமல் தொடர்கதையாகத் தொடர்கிறது. பொறுப்புக்கூறும் விடயத்தில் முழு உண்மைகளும் கண்டறியப்படவேண்டும் யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்த சமயத்தில் அங்கு ஆக 60 ஆயிரம் பொதுமக்களே இருக்கின்றனர் என அரசு அறிவித்தது. ஆனால் சிவில் சமூகத்தவர்களே அங்கு 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் உள்ளனர் என்று அறிவித்தனர்.
அதேசமயம் 2008 புரட்டாதி மாதம் அப்பகுதி அரச அதிபர் 3 லட்சத்து 60 ஆயிரம் பொதுமக்கள் உள்ளனர் என்று அறிக்கையிட்டிருந்தார். ஆனால், ஆறு மாதங்களுக்கு மேலாக 60 ஆயிரம் மக்களுக்கே உணவு, மருந்து, தண்ணீர் என்பன அனுப்பப்பட்டன. அந்தச் சமயத்தில் உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. 2008 புரட்டாதி மாதம் அப்பகுதியிலிருந்த தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அகற்றப்பட்டனர். ஏன் ஐ.நா. முகவர் அமைப்புப் பிரதிநிதிகள் கூட அகற்றப்பட்டனர்.
இறுதியில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சமயம் அங்கிருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வெளியேவந்தனர். இவ்வளவு மக்கள் இருக்கும் போது ஆக 60 ஆயிரம் பேரே அங்கு உள்னர் என அரசு திருப்பத் திருப்பக் கூறி வந்ததமை எதற்காக? சிவில் சமூகத்தவர்கள் கூறிய எண்ணிக்கைப்படி பார்த்தால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் என்னவானார்கள் என்பது தெரியவில்லை. அப்பகுதி அரச அதிபரின் கணக்குப் படி பார்த்தால் கூட சுமார் 70 ஆயிரம், 80 ஆயிரம் பேர் இல்லாமல் போயுள்ளனர்.
இவர்கள் என்னவானார்கள்? உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், ஐ.நா. அதிகாரிகள், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதிகாரிகள் எல்லாம் அரசுப் படைகளுக்கு எதிராக யுத்தம் புரிபவர்கள் அல்லவே, அவர்களை அரசு ஏன் வெளியேற்றியது? அவர்களை வெளியேற்றிய பின்னர்தானே இந்த நிலைமை ஏற்பட்டது. அப்படி வெளியேற்றியமையின் நோக்கம் என்ன? ஐ.நா. செயலாளர் நியமித்த நிபுணர் குழு குறைந்ததது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று கூறுகின்றது.
உண்மையில் நடந்தது என்ன? இந்த மக்களுக்கு நேர்ந்த கதி யாது? இந்த மக்களைக் கொன்றொழிப்பதற்காகத்தான் அவ்வாறு சர்வதேசத் தரப்பினரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, குறைந்த எண்ணிக்கையிரான மக்ளே அங்கிருக்கின்றனர் என்ற அறிவிப்பு திட்டமிட்டு முன்னர் விடுக்கப்பட்டதா? இவை எல்லாம் கண்டறியப்படவேண்டும். இவற்றைக் கண்டறிவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் ஒரு சர்வதேச விசாரணையை ஆரம்பித்திருக்கின்றது. அந்த விசாரணைக்கு அரசு ஒத்துழைக்கவேண்டும் எனக் கோருகின்றோம்.
எமது மக்கள் இயைபாக சாட்சியமளித்தால்தான் உண்மைகள் வெளிவரமுடியும். அப்படி சாட்சியமளிப்பதற்கு வசதி செய்து ஒத்துழைக்கும்படி அரசைக் கோருகின்றோம். நாடங்களை நடிக்காமல் இத்தகைய விசாரணைக்கு ஒத்துழைப்பது அரசின் கடமை. உண்மைகள் கண்டறியப்பட்டால் மட்டுமே நிரந்தர சமாதானம், நிரந்தர இணக்கம் ஏற்பட வழிபிறக்கும். 1988, 89, 90 களில் தென் பகுதியில் பல பத்தாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஜெனீவா சென்றார். நாடாளுமன்றத்தில் பேசினார்.
அத்தகைய கொலைகளைக் கண்டித்து ஜெனீவாவுக்கு மட்டுமல்ல, தேவையான எல்லா இடங்களுக்கும் செல்வேன் என்று அவர் சூளுரைத்தார். இந்த உண்மைகளை நாம் அம்பலப்படுத்தி சுட்டிக்காட்டியுள்ளேன். நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைத்து நினைவூட்டியுள்ளேன். இந்த உண்மையைக் கண்டறியும் விடயத்தை இனரீதியாக, அரசியல் ரீதியாகப் பார்க்காமல் நாட்டு மக்கள் நடந்தவற்றை அறியக்கூடியதாக நீதியாகச் செயற்படும்படி அரசைக் கோருகிறோம். அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்காக அரசு தான் கொடுத்த வாக்ககுறுதிகளை நிறைவேற்றவேண்டும். தீர்வுக்காக அரசுடன் இருதரப்புப் பேச்சை நடத்தினோம்.
ஆனால் ஒரு கட்டத்தில் அரசு பேச்சிலிருந்து வெளியேறியிவிட்டது. நாம் தொடர்ந்தும் தீர்வுக்காக அரசுடன பேசத் தயார். ஆனால் அந்தப் பேச்சு என்பது ஏமாற்றும் திட்டமாக அமையக்கூடாது. எதைப் பற்றிப் பேசப் போகின்றோம் என்பது முதலில் தெளிவுபடுத்தப்படவேண்டும். அது நீண்டதாக இருக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட காலவரையக்குள் முடியவேண்டும். ஆறு மாதத்துக்கு மேல் அது நீடிக்கக்கூடாது. அதற்குள் பேசி முடிக்கப்படவேண்டும். அந்தப் பேச்சில் சர்வதேசப் பிரசன்னம் இருக்கவேண்டும். அந்தத் தரப்பு பேச்சைப் பார்த்திருக்க நாம் பேசுவதற்குத் தயார். எங்களை ஏமாற்ற அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றுவதற்கு நாம் தயாரில்லை. அதனை ஜனாதிபதிக்கும் தெளிவாகக் கூறிவிட்டோம்.
அர்த்தபுஷ்டியான நிலைத்து நீடிக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வு ஒன்றுக்கு அரசுத் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணங்குமானால் அந்த ஏற்பாடு குறித்து தெரிவுக் குழுவில் பேசலாம். 2009 இல் அரசு நடத்தி முடித்த யுத்தம் விடுதலைப் புலிகளுக்கு எதிரனதா அல்லது தமிழர்களுக்கு எதிரனதா? அந்த யுத்த்தின் மூலம் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அழித்து அதன் வாயிலாக தீர்வை இனிக் கேட்கக் கூடாது என அரசு கருதித்திதான் எமது மக்கள் மீதும் அந்த யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டதா? அதற்காகத்தாக் எமது மக்கள் கொல்லப்பட்டனரா? தீர்வுகாணும் விடயத்தில் அரசு நேர்மையாக உள்நாட்டில் நடந்து கொண்டிருந்தால் நாம் சர்வதேச சமூகத்திடம் செல்லவேண்டி வந்திருக்காது; சர்வதேசத்திடம் முறைப்பாடு செய்யும் நிலைமை வந்திருக்காது. பல நாடுகளில் இவ்வாறு சர்வதேச பங்களிப்புடன் தீர்வு எட்டப்பட்டிருக்கின்றமையை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
பிளவுபடாத, ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் தங்களின் பொருளாதார, கலாசார, சமூக. சமய விடயங்களைத் தாங்களே கையாளக்கூடியதான சுயாட்சி முறையில் கௌரவத்துடன் வாழக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு நாம் திறந்த மனதுடன் தயாராகக் காத்திருக்கிறோம். சர்வதேசம் எங்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றது. ஆகவே தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிதானமாக, பக்குவமாக நியாயமான முறையில் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்.
TPN NEWS