எமது மண்ணில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். – சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி

533
தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழ்பவர்களினது உதவிகளின் முக்கிய நோக்கமெல்லாம், இங்குள்ள தமிழ் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். யுத்தத்தில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் தமிழ் நிலத்தில் நாங்கள் மீண்டும் தலை நிமிர்ந்து தமிழ் மக்களாக வாழ வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அந்த விருப்பத்திலேயே எமது மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனின் ஏற்பாட்டில் இலங்கை இந்து பேரவையின் ஆதரவுடன் வலி சுமந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் (08.09.2014 அன்று) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய சுரேஸ் க.பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,  
யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்து விட்ட நிலையிலும் எமது குழந்தைகள், எமது பிள்ளைகள், எமது பிரஜைகள், எமது கிராமத்தவர்கள், எமது சுற்றத்தார் இவர்களுக்கு இன்னும் எவ்வளவு தூரத்துக்கு நாங்கள் உதவிகளை வேண்டி நிற்கின்றோம் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்றாகும்.
முல்லைத்தீவு மாவட்டம் இறுதி யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். யுத்தத்தில் மாத்திரம் அல்ல யுத்தத்துக்கு முன்பும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாவட்டம். செல்வபுரம் கிராமம் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் அறுநூறு பேரை இழந்த கிராமம். இந்த கிராம மக்கள் இந்த மண்ணுக்கு இந்த மாவட்டத்துக்கு ஆரம்ப காலங்களில் செய்த உயிர்த்தியாகங்கள் என்றும் வீண்போகக்கூடாது. இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்பது சரியான முறையில் திட்டமிட்டு முன்னெடுத்துச்செல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறுபட்ட உதவிகள் தன்னார்வ அமைப்புகளாலும், தனிநபர்களாலும் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த ஐந்து வருட காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் இயன்றவரையான உதவிகள் இந்த மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. சிறீலங்கா அரசாங்கம் தொண்டு நிறுவனங்களை தடைசெய்து, அவர்களை வெளியேற்றி எமது மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க முடியாத சூழ்நிலையில், புலம்பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்கள் இரவு பகல் பார்க்காமல் மிக குளிர் பிரதேசங்களில் தமது உழைப்பின் ஒரு பகுதியை தங்களுக்கு தந்துதவிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு மிகமிக நன்றிக்கடன்பட்டவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
அவர்களின் உதவிகளின் முக்கிய நோக்கமெல்லாம் எமது குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். யுத்தத்தில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் நிலத்தில் நாங்கள் மீண்டும் தலைநிமிர்ந்து தமிழ் மக்களாக வாழ வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
பல அமைப்புகள் இத்தகைய உதவிகளை செய்து வருகின்றன. விதவைகளின் வாழ்வாதாரங்கள், அவர்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டிய தேவைகள், குழந்தைகளின் கற்றல் நடவடிக்கைகள் அறிந்து இவற்றுக்கு தொடர்ச்சியான உதவிகள் தேவைப்படுகின்றன. எமது குழந்தைகளுக்கு இன்னும் என்னென்ன வேண்டுமென்று தேவையறிந்து அவர்கள் தமது சொந்த காலில் நிற்கும் வரை அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். நாம் கையேந்துபவர்களாக தொடர்ந்தும் இருக்கக்கூடாது. எந்த காலகட்டத்திலும் நாம் அவ்வாறு கையேந்தி வாழ்ந்தவர்கள் அல்லர். எமது சொந்த உழைப்பில் வாழ்ந்தவர்கள். அது விவசாயமாக இருக்கலாம். கடல் வளமாக இருக்கலாம். நாம் ஏனையவர்களுக்கு கொடுத்து வாழ்ந்தவர்களே தவிர, ஏனையவர்களிடம் இரந்து வாழ்ந்தவர்கள் அல்லர்.
இப்போது நாங்கள் துன்பப்படுகிறோம். கஸ்டப்படுகிறோம். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு உதவுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. நாங்கள் தொடர்ச்சியாக கையேந்துபவர்களாக இல்லாமல் ஏனையவர்களுக்கும் கொடுத்து உதவி செய்யும் நிலைமைக்கு எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கான வாழ்வாதாரங்களை நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும். எம்மை நிர்ணயித்துக்கொள்ளக்கூடிய உதவிகளை பெற்றுக்கொள்வது சிறப்பாக இருக்கும். அதற்கான உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய அபிவிருத்திக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தினுடைய பல்வேறுபட்ட பிரச்சினைகள் பற்றி அதில் பேசப்பட்டது. வடமாகாண முதலமைச்சர் கூட மணலாறு என்று அழைக்கப்படும் வெலிஓயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்ததா? இல்லையா? என்று கேள்வி இருக்கின்ற போது, அநுராதபுரம் மாவட்டத்துக்கு கீழ் நிர்வாக அடிப்படையில் செயல்படுகின்ற அந்த பிரதேசத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்துக்கான ஒதுக்கீட்டிலிருந்து நிதி வழங்கல் மிகப்பாரிய அளவில் கொடுக்கப்படுகின்றது என்பது மோசமான பிழையான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
வடமாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தும் அதற்கு மாற்ற நடவடிக்கைகளை சட்டபூர்வமாக எடுக்காமல் தடி எடுத்தவனெல்லாம் சண்டைக்காரன் என்று சொல்லுமளவுக்கு அரசாங்கம் ரவுடி ராஜ்ஜியம் போன்று செயல்படுகின்றது. அரசாங்கம் என்றால் சட்டங்கள், திட்டங்கள், அரசியல் சாசனங்கள் இருக்கின்றது. அதற்கு இணங்க அரசாங்கம் நடந்தாலே பொதுமக்கள் நடக்க முடியும். ஆனால் நாங்கள் நினைத்தால் எதையும் செய்வோம் என்ற நடவடிக்கையில் இந்த அரசு செயல்படுகின்றது.
ஒருபக்கத்தில் புதிய சிங்கள குடியேற்றங்கள், மறுபக்கத்தில் சிங்கள மீனவர்களின் குடியேற்றங்கள். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. மிகப்பாரிய பாதிப்புகளை முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தித்ததைப்போல எவரும் சந்தித்திருக்க மாட்டார்கள். நீங்கள் எல்லோரும் யுத்தத்தின் வடுக்களை சுமந்தவர்கள். வலிகளை உணர்ந்தவர்கள். இழக்கக்கூடிய இழக்கக்கூடாத அனைத்தையும் இழந்தவர்கள்.
ஆனால் நாங்கள் இந்த மண்ணில் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். இது உங்களுடைய சொந்த பூமி. இப்பூமி நீண்ட வரலாற்றை கொண்டது. பண்டாரவன்னியன் வாழ்ந்த பிரதேசம். உங்களுடைய வரலாறு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. ஆயிரம் ஆயிரம் வரலாறுகள் வன்னி தமிழ் மக்களுக்கு உண்டு. அவ்வாறான சூழலில் இந்த மண்ணில் நாங்கள் தமிழர்களாக தலைநிமிர்ந்து வாழ வேண்டியவர்களாக வாழ வேண்டும். உங்களுக்கு உரித்தானதை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதற்கு மேலாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த நாங்கள் இருக்கின்றோம். எல்லோருமாக இணைந்து நாங்கள் இந்த வன்னி மாவட்டத்தை பிரத்தியேகமாக முல்லைத்தீவு மாவட்டத்தை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது.
இன்று இந்த குழந்தைகளுக்கு சொற்ப அளவிலான உதவிகள் கிடைத்திருக்கின்றன. அந்த உதவிகளை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொடுத்தவர்களுக்கு மக்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி நவிலல்கள். பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அவர்களினுடைய உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்த மண்ணில் வளங்கொழிக்கக்கூடிய மக்களாக நீங்கள் வாழ வேண்டும். அதற்காக எல்லோரும் இணைந்து பணி புரிவோம். என்று சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் ரவிகரன், தியாகராசா, இந்திரராசா ஆகியோரும், கொக்குளாய் பங்குத்தந்தை ஜோய் பெர்ணான்டோ, முல்லைத்தீவு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி சுப்பிரமணியம் ராஜலட்சுமி, செல்வபுரம் கடல் தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தினர், செல்வபுரம் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தினர், மாணவர்கள், பயனாளிகள், வன்னி குறோஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


SHARE