இலங்கை இந்து பேரவையின் ஆதரவுடன் வலிசுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு செல்வபுரம், யூதா கோவில் முன்பள்ளியில் வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, முதன்மை விருந்தினர்களாக சுரேஸ் பிறேமச்சந்திரன் (யாழ் மாவட்ட பா.உறுப்பினர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர்), வன்னி மாவட்ட பா.உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வி. ராஜேந்திரா (தலைவர், இலங்கை இந்து பேரவை), நடராசா சுதாகரன் (வவுனியா மாவட்ட இணைப்பதிகாரி, இலங்கை இந்து பேரவை) மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் து.ரவிகரன், தியாகராசா, இந்திரராசா ஆகியோருடன் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
போரின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து, பாடசாலைக் கல்வியை தொடர முடியாது வலிசுமந்த 122 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தினால் அபிஷா தனியார் வைத்தியசாலையின் அனுசரணையுடன் வட்டுவாகல் பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு கணினியும் வழங்கப்பட்டது.
மேலும், வன்னிகுறோஸ் சுகாதார நிறுவனத்தால் சுய தொழில் ஊக்குவிப்பு நன்கொடையாக ரூபா. 25,000.00 மாமூலை சுயதொழில் குழுவிற்கு வழங்கப்பட்டதுடன் செல்வபுரம் விளையாட்டு கழகத்திற்கான ரூபா. 40,000 அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
வட மாகாண சபை உறுப்பினரான வைத்திய கலாநிதி சி;. சிவமோகன் அவர்கள் ஊடான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ரூபா135,000.00, ரூபா 50,000.00, ரூபா 25,000.00 முறையே செல்வபுரம் அந்தோனியார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், முன்பள்ளி ஆகியவற்றுக்கு நிகழ்வு ரீதியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. செல்வபுரம் மக்களால் சுரேஸ் பிறேமச்சந்திரன், ந.சிவசக்தி ஆனந்தன், வி. ராஜேந்திரா, நடராசா சுதாகரன் மற்றும் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
TPN NEWS