சில வேளைகளில் ஏதாவது ஒரு செயல் ஏற்கனவே நடந்தது போல தோன்றும். இதனையே தேஜாவு என்று கூறுகிறார்கள். இந்த வார்த்தை பிரெஞ்சு மொழி வார்த்தையாகும்.
இந்த தேஜாவு என்ற வார்த்தை “முன்பு பார்த்தது” என்ற பொருளை தருகிறது.
இந்த தேஜாவுவிற்கான காரணம் என்ன? இது நோயா அல்லது எல்லோருக்கும் இப்படி தோன்றுமா?
உண்மையில் இந்த தேஜாவு உலகிலுள்ள 70 வீதமானவர்களுக்கு ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதிலும் குறிப்பாக 15 தொடக்கம் 25 வரையான வயதிற்கு உட்பட்டவர்களுக்கே இது அதிகமாக ஏற்படுகின்றது.
இது தொடர்பாக மனோதத்துவவியலாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் தங்களது கருத்து தொகுப்புக்களை முன்வைத்துள்ளார்கள். இருப்பினும் இதற்கான உறுதியான விளக்கத்தினை யாரும் வழங்கவில்லை.
அதன்படி மனோதத்துவவியலாளரான ஹெர்மன் ஸ்னோ ஒரு தொகுப்பு விளக்கத்தை தந்துள்ளார்.
அதாவது நாம் பார்த்த குறிப்பாக உடைந்த முப்பரிமாண தோற்றங்களை நமது மூளை தொகுக்கும். இதன்போது அந்த தொகுப்பு நமது புலன் அங்கங்களுக்கு கடத்தப்படும். கடத்தப்பட்ட இந்த தொகுப்பு சில செக்கன்கள் வரையில் நீடிக்கும். இதுவே தேஜாவு எனப்படுகிறது என்பது அவரது கருத்துத் தொகுப்பாகும்.
ஒரு மனோதத்துவவியலாளரின் கருத்து இவ்வாறு இருக்க ஒரு ஆராய்ச்சியாளர் இதனை சற்று வித்தியாசமாக சுருக்கமாக விளக்கியுள்ளார்.
தேஜாவு என்பது நரம்புகளினால் கொண்டு வரப்படும் தகவல்களின் பிந்திய வெளிப்பாடு என ஆராய்ச்சியாளர் ராபர்ட் எப்போர்ன் கூறியுள்ளார்.
எனினும் இந்த தேஜாவு தொடர்பான முழுமையான மற்றும் ஸ்திரமான ஆராய்ச்சிகள் இன்னமும் செய்யப்படவில்லை. இது நோயாகவும் கருதப்படவில்லை. இதனால் தேஜாவு தொடர்பான தீர்க்கமான முடிவுகள் எட்டப்படவில்லை.