ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோ ஹெட்செட் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
Apple Vision Pro ஹெட்செட்
ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் (Apple Vision Pro headset) அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டின் விலை 3,500 அமெரிக்க டொலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய விற்பனைக்கான முன்பதிவை உலகின் மற்ற பகுதிகளில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் முப்பரிமாண டிஜிட்டல் உள்ளடக்கத்தை வெளியுலகின் பார்வையுடன் வழங்கும்படியான சிறப்பம்சத்துடன் வடிவமைத்துள்ளது.
இது ஆப்பிளின் M2 சிப்பில், விஷன் OS இயங்குதளத்தில், 256GB ஸ்டோரேஜ் அம்சத்துடன் இயங்குகிறது. இதனை பயனர்கள் தங்களுடைய தொடுதல், குரல் மற்றும் கண் அசைவுகள் மூலம் இயக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் 4K டிஸ்பிளே, கேமரா, மைக்ரோபோன்கள் மற்றும் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
அத்துடன் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் ஆக்மென்டட் ரியாலிட்டி(AR), விர்ச்சுவல் ரியாலிட்டி(VR) அம்சங்களை பயனர்கள் அனுபவிக்கலாம். மேலும் செயற்கை நுண்ணறிவு அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிளுக்கு பின்னடைவு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோ ஹெட்செட் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில் பிரபல வீடியோ தளமான நெட்பிளிக்ஸ் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டிற்கான தனி செயலியை உருவாக்கும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளது.
பயனர்கள் வழக்கமான செயலிகள் மற்றும் இணைய உலாவிகளிலேயே ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டுகளை பயன்படுத்தி கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
Netflix-ஐ போலவே Spotify மற்றும் YouTube போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டுகளுக்கான பிரத்யேகமான செயலிகளை வடிவமைக்கும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் Walt Disney நிறுவனம் மட்டும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டுகளுக்கான தனியான செயலியை வடிவமைப்பதில் ஈடுபட்டு வருகிறது.