ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
200 ஓட்டங்கள் இலக்கு
லக்னோவில் ஐபிஎல் 2024யின் 11வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்கள் குவித்தது. டி காக் 54 ஓட்டங்களும், க்ருணால் பாண்டியா 43 ஓட்டங்களும், பூரன் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ் கூட்டணி லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்தது.
மயங்க் யாதவ்
இந்த கூட்டணியின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 11.4 ஓவரில் பஞ்சாப் அணி 102 ஓட்டங்கள் குவித்தது. அப்போது லக்னோ அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், பஞ்சாப் அணியின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.
அவரது பந்துவீச்சில் பேர்ஸ்டோவ் 42 ஓட்டங்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 19 ஓட்டங்களிலும், ஜிதேஷ் ஷர்மா 6 ஓட்டங்களிலும் மயங்க் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் வெற்றிக்காக போராடிய ஷிகர் தவான் 50 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மோஷின் கான் ஓவரில் அவுட் ஆனார்.
லிவிங்ஸ்டன் அதிரடி
அணியின் ஸ்கோர் 141 ஆக இருந்தபோது சாம் கர்ரன் டக் அவுட் ஆனார். லிவிங்ஸ்டன் அதிரடியில் மிரட்டினாலும், பஞ்சாப் அணியால் 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்தார்.
மிரட்டலாக பந்துவீசிய லக்னோ அணி வீரர் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், மோஷின் கான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.